வெள்ளி, 3 செப்டம்பர், 2021

'பாஜக' அண்ணாமலை அவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!!!

 

#தமிழகத்தில் தனிமனிதனாகப் போய் சிலைகளைக் கரைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதிலிருந்து, இவர்கள் நம்முடைய சித்தாந்தத்தை, தமிழக மண்ணின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்#

-இது நேற்றைய செய்தி[https://tamil.oneindia.com/news/theni/dmk-rule-will-end-if-ganesha-stops-the-procession-says-bjp-annamalai/articlecontent-pf589702-431746.html  -Thursday, September 2, 2021

                          *  *  *

தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை அவர்களே,

'சித்தாந்தம்' என்றால் சிந்தித்துக் கண்டறிந்த உண்மை என்று பொருள்[விக்கிப்பீடியா].

பண்டைக்காலம் முதல் தமிழர்கள் பல்வேறு சித்தாந்தங்களை[அரசியல், பொருளாதாரம், மதம், சமூகம், அறிவியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சித்தாந்தங்கள் உருவாக்கப்படுகின்றன] ஏற்று வாழ்ந்திருக்கிறார்கள். இவற்றில் நீங்கள் குறிப்பிட நினைக்கிற சைவசித்தாந்தமும் ஒன்று. கடவுளை ஏற்க மறுப்பதும் ஒரு சித்தாந்தம்தான்.

'ஓரில் நெய்தல் கறங்க ஓரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப

புணர்ந்தோர் பூஅணி அணிய பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப

படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்'

இவை சங்கப் பாடல் வரிகள்.

கடைசி வரியைக் கவனியுங்கள். கடவுளைப் பண்பில்லாதவன் என்று சாடுகிறான் பாடலாசிரியன்.

எனவே, நீங்கள் குறிப்பிடுகிற ஒரு சித்தாந்தம் மட்டுமே தமிழர்களுக்கானது என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மேலும், 

தமிழ்நாட்டை ஆளும் அரசு[இந்திய அரசும்தான்] மதச்சார்பற்றது என்பதை அறிந்த நீங்கள், அரசை மிரட்டும் தொனியில்.....

"தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மிரட்டியிருக்கிறீர்கள்.

தற்சார்பற்று ஆட்சி நடத்தும் தமிழ்நாடு அரசை மிரட்டுவதுதான் நீங்கள் ஏற்றுள்ள சித்தாந்தம் கற்றுத்தந்த பாடமா?!

நீங்கள் உண்மையான சைவசித்தாந்தி என்றால்.....

'விநாயகர் சதுர்த்தி' என்று சொல்லி நீங்கள் யாருக்காக ஊர்வலம் நடத்துகிறீர்களோ, அந்த விநாயகரிடம், கொரோனாவை முற்றிலுமாய் அழித்தொழிக்கக் கோரிக்கை வையுங்கள்.

முதலில் அந்த அதிசயத்தை அவர் நிகழ்த்திக் காட்டட்டும். அதன் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு 'முடிவுரை' எழுதட்டும்.

இது நடந்தால்.....

ஒட்டுமொத்த உலகமும் உங்களின் சித்தாந்தத்தைப் போற்றிப் புகழும்; கிஞ்சித்தும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும்!

====================================================================================