இப்படிச் செய்வதால் அற்பமானதொரு சுகம் கிடைப்பது உண்மையாக இருக்கலாம்; ஆனால், அணுவளவும் பயன் விளைவதில்லை என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்; நிச்சயம் புரியும்.
சப்பரம் சுமப்பது, தேர் இழுப்பது போன்ற சடங்குகளைச் செய்வது காலங்காலமாய்க் கடைப்பிடிக்கப்படும் வழக்கம். அந்த வழக்கத்தையும், அதனால் கிட்டும் அல்ப சுகத்தையும் விட்டுவிட மனம் இல்லை என்றாலும் அவற்றைத் தொடரலாம். எப்படி?
'ஊரில் அவன் நல்லவன்; சூதுவாது இல்லாதவன்; எவரிடமும் 'வம்புதும்பு'க்குப் போக மாட்டான்' என்றிப்படியான ஒரு நபர் உங்கள் ஊரில் இருந்தால், அந்தச் சப்பரத்தில் அவனை அமர வைத்து ஊர்வலம் செல்லுங்கள். இதை ஒரு விழாவாகவும் கொண்டாடுங்கள். கொண்டாடினால்.....
'அவனைப் போல் நாமும் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும்; நம்மவரால் போற்றப்பட வேண்டும்' என்று மேலும் சிலரேனும் நினைப்பார்கள்; அவ்வாறு வாழ்ந்து காட்ட முயல்வார்கள்.
கிடப்பிலிருக்கும் தேரைப் புதுப்பித்து அலங்காரங்கள் செய்து, அதில் வழக்கம் போல சாமி சிலையை நிறுவி, ஊரெல்லாம் கூடித் தெருத்தெருவாய் இழுத்துச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுவிட்டவர்கள் நீங்கள். இந்த வழக்கத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வையுங்கள். வைத்த பின்னர்.....
எவரேனும் ஒருவர் துன்பத்திற்கு உள்ளானால், ஓடிப்போய் உதவுகிற ஒரு நல்லவராவது உங்கள் ஊரில் இருப்பார்தானே? அவரைத் தேரில் அமர்த்திப் பவனி வாருங்கள். அப்படிச் செய்தால், அந்த உபகாரி, பேருபகாரியாக மாறுவார். ஒருவர் மட்டுமே இருந்தார் என்னும் நிலைமை மாறி மேலும் சில உதவும் உள்ளம் கொண்டவர்கள் உருவாவார்கள்.
ஒரு காலக்கட்டத்தில், சிலர் பலர் ஆதலும் நிகழக்கூடும்.
இன்றைய இளைஞர்களில் கணிசமானவர்கள் முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள். மக்களுக்குப் பயன்படும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தோ, பொதுத் தொண்டுகள் புரிந்தோ பிறர் பாராட்டும் வகையில் வாழ்ந்து காட்டுதல் வேண்டும் என்ற குறிக்கோளும் உள்ளவர்கள் இவர்கள்.
ஏற்கனவே கல்யாணம் ஆன ஆண் பெண் சாமிகளுக்கு ஆண்டுதோறும் கல்யாணம் கட்டுதல்; ஆறுகளுக்கு ஊர்வலமாய் எடுத்துச் சென்று குளிப்பாட்டுதல் போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கைகழுவிவிட்டு, மேற்குறிப்பிடப்பட்டவர்கள் போன்ற புதுயுகம் படைக்க விழையும் இளைஞர்களுக்கு விழாக்கள் எடுத்துக் குதூகளியுங்கள்.
இதனால் விளையும் பயன் பெரிது! மிக மிக மிகப் பெரிது!!
==========================================================================