செவ்வாய், 2 நவம்பர், 2021

இருக்கும்வரை 'இப்படியெல்லாம்' சிந்திக்கலாமே![சிறப்பு அறுவை]

பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்பது பற்றியோ, அது எப்போதும் இருந்துகொண்டே இருந்திருக்கிறது என்றால் அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று என்பது குறித்தோ  எவருக்கும் தெரியாது.

மனிதர்கள் வாழும் இந்த மண்ணுலகம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பன பற்றியெல்லாம் அறிவியலாளர்கள் ஆராய்ந்து கணித்திருக்கிறார்கள். 

பிரபஞ்சத்தின் ஆயுளோடு[அது எக்காலத்தும் இருந்துகொண்டிருப்பது என்றால் அதற்கு 'ஆயுள்' என்று சொல்வதற்கு ஏதுமில்லை] ஒப்பிட்டால் பூமியின் ஆயுள் என்பது மிகவும் அற்பம். 

மனித இனத்தின் ஆயுளோ மிக மிக மிக..... அற்பம்.

கடவுள் இருப்பதாக இவன் நம்ப ஆரம்பித்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான்.

இம்மண்ணில் வாழும் ஏராள உயிரினங்களுக்கிடையே இவன் மட்டுமே கடவுளைத் துதிபாடி ஆனந்தக் கூத்தாடுகிறான்.

ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் மனித இனம் பூண்டோடு அழிந்துவிடுவது நிச்சயம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அறிவியலின் துணையுடன் இவன் தன் ஆயுளை நீட்டித்துக்கொண்டே போவது சாத்தியம் என்றாலும், இம்மண்ணுலகம்[இவன் பின்னொரு காலத்தில் குடியேற வாய்ப்புள்ள கோள், அல்லது கோள்கள் உட்பட] ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் அழியும். அதனோடு இவனும் அழிந்தொழிவது 100% உறுதி.

இந்த இனம் அழிந்தொழிந்த பின்னர்.....

"அப்பனே... ஐயனே... ஒப்பிலானே... எல்லாம் வல்லவனே... எங்கும் நிறைந்த பரம்பொருளே... கருணைக் கடலே" என்றெல்லாம் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாட எந்தவொரு நாதியும் இல்லை. ஆக.....

மனிதன் இருக்கும்வரைதான் கடவுளும் இருக்கக்கூடும். அப்புறம்....

'பிரபஞ்சம் மட்டுமே இருந்துகொண்டிருக்குமா? அது மட்டும் சாத்தியம் ஆவது எப்படி?' என்பன போன்ற இப்போது கேட்கும் கேள்விகளைக்கூட மனித இனம் உள்ளவரைதான் கேட்க முடியும். அப்புறம்?

அப்புறம்... அப்புறம்... அப்புறம்... !!!... !!!... !!!...

==========================================================================

அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்:

நரகவாசல்!!!: [விழிப்புணர்வுக் கட்டுரைகளும் கதைகளும்] (Tamil Edition)