இந்தப் பூமி உருவான ஆரம்ப காலத்தில் இதில் நீரில்லை; இதைச் சுற்றிக் காற்றில்லை; அவை, இந்தப் பூமிக்குள் [நீராவியாகவும் வளிமங்களாகவும்] பாறைகளுடன் கலந்திருந்தன. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகப் பூமி இறுகி வந்ததால் பூமியின் உட்புற வெப்பநிலை உயரலாயிற்று. விளைவு.....
பூமிக்குள்ளிருந்த நீராவி, காற்றுடன் கலந்து வெளிப்பட்டது; பூமியின் மையப் பகுதியில் இடம்கொண்டிருந்த நெருப்புக் குழம்பு சீறி வெளிப்போந்து எரிமலைகளாக வெடித்தது; வெடித்துக்கொண்டே இருந்தது.
ஒரு காலக்கட்டத்தில், நீராவி கலந்த காற்று மண்டலமானது பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல் நிலைகொண்டது. பின்னர், நீராவி குளிர்ச்சியடைந்து சுருங்கி, மேகமாக... மேகமூட்டமாக மாறி, பூமியைச் சூழ்ந்துகொண்டது.
இந்நிலையில், பூமிப் பரப்பில் பள்ளங்களும் ஆழ்குழிகளும் மட்டுமே இருந்தன. நீர் இல்லை. பூமியை, அடர்ந்த முகில் கூட்டங்கள் சூழ்ந்திருந்ததால் அது இருண்டு கிடந்தது. எரிமலை வெடிப்புகள் காரணமாகவே பூமியில் ஒளி பரவியது.
ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், மூட்டமாக இருந்த மேகங்கள் சிதறி, நீர்த்துளிகளாக மாறி, பூமி மீது மழையாகப் பொழிந்தன.
இதுவே பூமியில் பெய்த முதல் மழையாகும்!
மழை தொடர்ந்தது.
மழை என்றால் மழை! மாமழை! ஓயாத ஒழியாத மழை! பெரு மழை!
மழை கொட்டியது; கொட்டிக்கொண்டே இருந்தது! நாட்கணக்கில், வாரக்கணக்கில், ஆண்டுக்கணக்கில், ஏன், நூற்றாண்டுக் கணக்கில் பெய்தது; பெய்துகொண்டே இருந்தது.
பூமிப் பரப்பிலிருந்த குண்டுகுழிகள், இண்டுஇடுக்குகள், பள்ளம் படுகுழிகள் நீரால் நிரம்பின. எண்ணற்ற நீர்நிலைகளும் ஆறுகளும், கடல்களும், பெருங்கடல்களும் உருவாயின.
மேற்பரப்பின் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது!
==========================================================================
நன்றி: ‘கடவுள் படைப்பா உயிர்கள்?’, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு[மூன்றாம் பதிப்பு, 2010], சென்னை, 600 007. ஆக்கியோர்: டாக்டர் ஜி. குமார மாணிக்கவேல் & ந. வெற்றியழகன், எம்.ஏ., பி.எட்.