வெள்ளி, 24 டிசம்பர், 2021

மண்ணுலகம் 'மயான பூமி' ஆகும் அந்தக் கணங்களில்.....

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு சுமார் 149,600,000 கிலோமீட்டர்கள். சூரியன் ஒரு பெரிய நெருப்புக் கோளமாக உள்ளது; பூமியைவிடவும் 13 லட்சம் மடங்கு பருமன் உடையது.

சூரியன் பூமியைப் போல் திண்மையாக இல்லை. சாதாரண விண்மீன்களைப் போல் இதுவும் ஹைட்ரஜன் வளிமத்தால் ஆனது.

ஒரு நொடிக்குள் 'அணுக்கரு வினை' புரியும் ஹைட்ரஜனின் நிறை லட்சம் கோடிப் பவுண்டுகள். குத்துமதிப்பாக 45 கோடி டன்கள்.

இந்த ரீதியில் போனால், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியன் தன்னிடமுள்ள ஹைட்ரஜன் முழுவதையும் இழந்து 'செம்பூதமாக[Red Giant]' மாறிவிடக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்நிலையில், அதன் அருகிலுள்ள புதனும் வெள்ளியும் சூரியச் சூட்டில் உருகிப்போகும்.

பூமியிலுள்ள கடல்கள் வற்றி ஆவியாக மாறிட, இங்கே வெறும் பாறைகள் மட்டுமே மிஞ்சும். மரங்கள் செடிகொடிகள் என்று எல்லாமே முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகும். மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில், இந்தப் பூமி ஒரு முழு மயானமாகக் காட்சியளிக்குமாம்.['விண்வெளி விந்தைகள்', தி.பட்டாபி சீத்தாராமன்; அழகுப் பதிப்பகம், சென்னை].

இந்த மண்ணுலகம் இத்தகையதொரு அவலத்துக்கு உள்ளாகும் நிலையில் இங்குள்ள கணக்கற்ற கடவுள்கள் இதை அழியாமல் காப்பாற்றுவார்களா?

மாறாக, இவர்கள் எல்லோரும்[அனைத்து மதக் கடவுள்களும்], கும்பிடுவதற்கும், கட்டுக்கட்டாய்ப் பணத்தையும், கொத்துக் கொத்தாய்த் தங்க நகைகளையும் உண்டியலில் போடும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் கோள்களைத் தேடிக் கண்டறிந்து அங்கெல்லாம் குடியேறுவார்களா?

முனியப்பன், கருப்பனார், ஐய்யனாரப்பன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற அசைவக் கடவுள்களும் அவர்கள் போன பாதையில் தங்களின் பயணத்தைத் தொடர்வார்களா?

சாமிகளை விடுங்கள், இங்கு ஆசாமிகள் உருவில் நடமாடியபோது, சாமிகளுக்குச் சமமாக மதித்து வழிபடப்பட்ட மகான்களும் அவதாரங்களும் சொர்க்கத்தில்தான் இருந்துகொண்டிருப்பார்கள். அங்கிருந்தவாறே இந்தப் பூமி மயானமாகக் காட்சி தருவதைக் கண்டு மனம் கலங்குவார்களா?

மயான பூமியை, மீண்டும் மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கேற்ற பழைய புண்ணியப் பூமியாக மாற்றுவதற்கு ஆவன செய்வார்களா?

'செய்திட வேண்டும்' என்று அவர்களைத் துதிபாடும் பக்தகோடிகள் இக்கணமே கோரிக்கை வைக்கலாம்!

=======================================================================