சனி, 25 டிசம்பர், 2021

கடவுளும் தட்டாம்பூச்சியும்!!

அவருக்குத் தோற்றம், அழிவு என்று எதுவுமே கிடையாதாம். எப்போதும் இருந்துகொண்டே இருப்பாராம். நமக்கெல்லாம் அற்ப ஆயுள். 

அவர் சக்தி வடிவானவராம். அவருக்கு இணையான சக்தி படைத்தவர் எவரும் இல்லையாம். எதையாவது தின்று ஜீரணித்துக் கழிவை வெளியேற்றினால்தான் நம்மால் உயிர் வாழ்ந்திட முடியும். உண்ண உணவு இல்லையேல் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்.

அவர் எந்தவொரு விருப்பு வெறுப்புக்கும் உள்ளாகாதவர். ஆசை, பாசம், காமம், கருமாந்தரம் என்று ஏதேதோ உணர்ச்சிகள், நோய்கள் போன்றவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகி,  எண்ணற்றத் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்த பிறகே அழிவை எதிர்கொள்வது நமக்கான விதி[அதை வகுத்தவரும் அவர்தானாம்]. 

அவர் படைப்பாளி. நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள்; இருக்கும்வரை அவர் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடி ஓய்ந்து உருக்குலைந்து மறைந்துபோகிற அற்ப ஜீவன்கள்.

அவர் கடவுள்; நல்லவராம்; கருணை வடிவானவராம்.

100% நல்லவர் என்றால்... 100% கருணை வடிவானவர் என்றால், நம்மையும் ஏனைய உயிர்களையும் அவரின் 'மறுபிரதி'[True Copies]களாகத்தான் படைத்திருத்தல் வேண்டும். மனம்போன போக்கில் ஏறுமாறாகவும், எக்குத்தப்பாகவும் படைத்துவிட்டார்.

இந்தத் தவற்றைச் செய்ததால் அறிவுஜீவி மனிதர்கள் இவரைக் கடுமையாகச் சாடுகிறார்கள்.

படைத்தல், துடைத்தல்[அழிப்பது] என்று எதையும் செய்யாமல் 'சும்மா'வே இருந்திருந்தால்[படைப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பு 'சும்மா'தானே இருந்திருப்பார்?] சாடல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

சும்மா இருப்பதில் சுகம் ஏதுமில்லை என்றால், மூலக்கூறுகள்[பஞ்சபூதங்கள்], நட்சத்திரங்கள், கோள்கள் என்று எதை வேண்டுமானாலும் படைத்து, வான்வெளியில் உலவவிட்டும், சுழலவிட்டும், வெடிக்கவிட்டும் வேடிக்கை பார்த்துப் பொழுதைக் கழித்திருக்கலாம்.

இப்படியாக எதையும் செய்யாமல், உயிர்களைப் படைத்து, போராடவிட்டு வேடிக்கை பார்த்து இவர் குதூகளிப்பது, தட்டாம்பூச்சி[தும்பி]யின் வாலில் நூல் கட்டிச் சிறுவர்கள் விளையாடி மகிழ்வது போல உள்ளது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று போற்றப்படும் இவரின் தகுதிக்கு இது ஏற்றதல்ல.

படைத்தலும் காத்தலும் அழித்தலும் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்பார்கள். வருங்காலத்தில், இருப்பவை அழித்துப் புதியவை படைக்கும்போதாவது கடவுள் தன்னைத் திருத்திக்கொள்வார் என்று நம்பிவோம். ஹி... ஹி... ஹி!!!

==========================================================================