உயிரினங்களின் தனித்தன்மைக்குக் காரணமான இந்த வஸ்துவைப் பிரித்தெடுப்பதில் அறிவியலார் அடைந்த வெற்றியே இன்று மரபுப் பொறியியலாகப் பரிணமித்து, நேற்றுவரை இயற்கையின் கைப்பாவையாக இருந்த பரிணாமத்தை விஞ்ஞானத்தின் தத்துப் புத்திரியாக மாற்றி அமைத்துள்ளது.
மாறுபட்ட வண்ணங்களைக் கலந்து வேறுபட்ட நிறங்களைத் தோற்றுவிக்க முடிகிறதல்லவா? அது போல, மாறுபட்ட ஜீன்களை இணைப்பதன் மூலம் விதம் விதமான விந்தை உயிர்களைப் படைத்து அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது அறிவியல்.
ஒன்றன் உடலிலிருந்து ஜீன்களைப் பிரித்தெடுத்து அதை மற்றொரு தாவரம் அல்லது விலங்கினுள் செலுத்திப் புதிய உயிரினத்தை உருவாக்க முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
சான்றுகளாகச் சில சாதனைகள்.....
கல்கத்தா உயிரியல் விஞ்ஞானிகள், பெண் சிங்கத்தின் ஜீனையும் ஆண் புலியின் ஜீனையும் இணைத்துப் புதிய விலங்கினமான ‘புலிங்கம்’[Tigon] படைத்துள்ளனர்.
இங்கிலாந்து உயிரியலார், குதிரையையும் வரிக்குதிரையையும் இணைத்துக் ‘குதிரைவரி’ என்ற புதிய மிருகத்தை உருவாக்கி மக்கள் பார்வைக்காக லண்டன் மிருகக் காட்சி சாலையில் உலவ விட்டார்கள்.
நீல ரோஜாவை உருவாக்கும் வேலை ஆஸ்திரேலியாவில் மும்முரமாக நடக்கிறது [முயற்சி வெற்றி பெற்றதா என்பதை அறிய இயலவில்லை].
நாம் உண்ணும் காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்றவை இவ்வாறு உருவாக்கப்பட்டவையே.
இவ்வகையில் ஏராளமான நாய் இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘கிரேட்டன்’ என்ற நாய் வலுவிலும் உருவிலும் ஒரு சிறிய குதிரையை ஒத்தது.
சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொஞ்சுவதற்குக் கைக்கு அடக்கமான நாயும் உருவாக்கப்பட்டுள்ளது.
மரபுப் பொறியியல் மூலம், ஒரு D.N.A இழையை வேண்டியவாறு பிரித்து அல்லது, துண்டித்து, அதை மற்றொரு வகை D.N.A வுடன் இணைத்து, கலப்பு D.N.A [Recombinat D.N.A]வை இன்றைய உயிரியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.
வைக்கோலை விதைத்தே நெல் நாற்றுகளை முளைக்க வைக்கும் விவசாய முறை வெகு விரைவில் தொழில் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம்.
விதைப்புக்காக ஒதுக்கப்படும் பெருமளவு தானியம் உணவுக்குப் பயன்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள்.
ஒரே ஒரு மரத்தின் கிளைகளில், சமையலுக்குத் தேவையான பல வகைக் காய், கனிகள் காய்த்துப் பழுத்துத் தொங்கும் காலமும் விரைவில் வரும் என்று நம் காதில் தேன் சொரிகிறார்கள் விஞ்ஞானிகள்.
கூந்தலில் சூடுவதற்கான மலர்களுக்கென்றே சில கிளைகள் ஒதுக்கப்படுமாம்!
பலவித மாமிசத் துண்டங்கள் காய்க்கும் கிளைகள்கூட அதே மரத்தில் இடம்பெறுமாம்!
மரபணு சிகிச்சை மூலம் தீராத நோய்களைக்கூடக் குணப்படுத்தலாமாம். விவசாயத்தில் விளைச்சலின் அளவைப் பன்மடங்கு பெருக்கவும் முடியும் என்கிறார்கள்.
ஆக, மற்றத் துறைகளுக்கிடையே ‘மரபுப் பொறியியல்’ சூப்பர் ஹீரோவாக இன்று வலம் வந்துகொண்டிருக்கிறது என்று துணிந்து சொல்லலாம்.
==========================================================================இராஜா பாலச்சந்தர் எழுதிய, ‘பாதை அமைக்கும் பரிணாமம்’ [மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம். முதல் பதிப்பு: மார்ச் 2004] என்னும் நூலிலிருந்து ஆசிரியரின் அனுமதியின்றி எடுத்தாளப்பட்டது.
ஆசிரியருக்கு என் மனப்பூர்வ நன்றி.