பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 24 பிப்ரவரி, 2022

'உக்ரைன் போர்'... ஒரு பகிர்வு!

இன்று பிற்பகலில்[24 Feb, 2022, 3:19 pm] 'இந்து' நாளிதழின் இணைப்பான 'காமதேனு'வில் வெளியான 'உக்ரைன்'அதிபர் 'வொலதிமீர் ஸெலன்ஸ்கி' ரஷ்ய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆற்றிய உரையை எந்தவித மாற்றமும் இன்றிப் பதிவு செய்கிறேன்.

அந்த உரை, ரஷ்ய நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஆனது என்பதால் இந்தப் பகிர்வு.

இந்த உரைச் செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பினும் மீண்டும் ஒருமுறை வாசிப்பதில் தவறேதுமில்லை.

#உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி ஆற்றிய உரை தற்போது மிகுந்த கவனம் ஈர்த்திருக்கிறது. தன் நாட்டு மக்களுக்காக மட்டுமல்லாமல் ரஷ்ய மக்களுக்குச் சென்றுசேரும் வகையில் இந்த உரையை அவர் நிகழ்த்தியிருக்கிறார். மனித வாழ்வில் போர்கள் ஏற்படுத்தும் பேரழிவுகளை உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறது அவரது உரை.

அவரது வார்த்தைகள் இதோ:

“இன்று ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபரை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், மவுனம்தான் பதிலாகக் கிடைத்தது. டோன்பாஸும் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான், நான் ரஷ்ய மக்களுடன் உரையாற்ற விரும்புகிறேன். நான் ஒரு அதிபராக உங்களிடம் (ரஷ்யர்களிடம்) உரையாற்றவில்லை. ஓர் உக்ரைன் குடிமகனாகத்தான் உங்களிடம் பேசுகிறேன்.

2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட பொது எல்லை நம் இரு தேசங்களையும் பிரிக்கிறது. அந்த எல்லை அருகில், ஏறத்தாழ 2 லட்சம் போர் வீரர்கள், ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்களுடன் உங்கள் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. அவை இன்னொரு நாட்டின் எல்லைக்குள் முன்னோக்கி நகர உங்கள் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். இந்த நகர்வு, ஐரோப்பா கண்டத்தில் மிகப் பெரிய போரின் தொடக்கமாக அமையக்கூடியது ஆகும்.

ஒரு பனிப்போரோ அல்லது அனல் போரோ அல்லது இரண்டும் கலந்த போரோ எதுவாகினும் சரி, நமக்குப் போர் என்ற ஒன்றே தேவையில்லை என நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், எதிரிப் படையால் நாங்கள் தாக்கப்பட்டால், அவர்கள் எங்கள் நாட்டை எங்களிடமிருந்து கைப்பற்ற முயன்றால், எங்கள் சுதந்திரத்தை, எங்கள் வாழ்வை, எங்கள் குழந்தைகளின் உயிர்களை எடுக்க முயன்றால், நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்வோம். அது தாக்குதல் அல்ல, எங்களைத் தற்காத்துக்கொள்வது. நீங்கள் எங்களைத் தாக்கும்போது நீங்கள் எங்கள் முகங்களைத்தான் பார்ப்பீர்கள். எங்கள் புறமுதுகுகளை அல்ல, எங்கள் முகங்களை!

போர் என்பது ஒரு பேரழிவு. பெரும் விலையைக் கோரும் பேரழிவு. அர்த்தம் பொதிந்த வார்த்தை இது. மக்கள், பணத்தை இழப்பார்கள். கண்ணியத்தை, வாழ்க்கைத் தரத்தை, சுதந்திரத்தை இழப்பார்கள். முக்கியமாக, தங்கள் அன்புக்குரியோரை இழப்பார்கள். ஏன், தங்களையே இழப்பார்கள்!

ரஷ்யாவுக்கு உக்ரைன் ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறது என அவர்கள் உங்களிடம் கூறியிருக்கிறார்கள். கடந்த காலத்திலும் அப்படி (நாங்கள்) இருந்ததில்லை. நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும்கூட அப்படி இருக்கப்போவதில்லை. நேட்டோவிடம் நீங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் கோருகிறீர்கள். நாங்களும் பாதுகாப்பு உத்தரவாதத்தைத்தான் கோருகிறோம். உங்களிடமிருந்து, ரஷ்யாவிடமிருந்து உக்ரைனுக்குப் பாதுகாப்பு கோருகிறோம். புடாபெஸ்ட் ஒப்பந்தம் வழங்கிய பிற உத்தரவாதங்களையும் கோருகிறோம்.

ஆனால், உக்ரைனில் அமைதியும், எங்கள் மக்களின் பாதுகாப்பும்தான் எங்கள் முக்கிய இலக்கு. அதற்காக நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும், எந்த வடிவிலும் எந்தத் தளத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் - உங்களுடன்கூட. போர் என்பது எல்லோரிடமிருந்தும் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பறித்துவிடும். யாருக்கும் எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் இருக்காது. அதில் மிக மோசமாகத் துயருறுவது யார் தெரியுமா? மக்கள்தான். அந்தச் சூழலை முற்றிலுமாக விரும்பாதவர்கள் யார்? மக்கள்தான். இதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? மக்களால்தான். அப்படியானவர்கள் உங்கள் மத்தியில் இருக்கிறார்களா? எனக்கு உறுதியாகத் தெரியும்.

ரஷ்ய தொலைக்காட்சியில் எனது உரையை அவர்கள் (ரஷ்ய அரசு) ஒளிபரப்ப மாட்டார்கள் என எனக்குத் தெரியும். ஆனால், ரஷ்ய மக்கள் இதைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காலம் கடப்பதற்குள் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த இந்த உண்மை அவர்களுக்குத் தெரிய வேண்டும். ஒருவேளை ரஷ்யத் தலைவர்கள் அமைதியை நிலைநாட்ட எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாவிட்டாலும், அவர்கள் உங்களுடன் பேச வருவார்கள். ரஷ்யர்கள் போரை விரும்புகிறார்களா? பதில் தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். ஆனால், அந்தப் பதில் ரஷ்யக் கூட்டமைப்பின் குடிமக்களான உங்களைப் பொறுத்ததுதான்.”#

==========================================================================

நன்றி:

https://kamadenu.hindutamil.in/international/war-is-a-disaster-says-ukraine-president