வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

தமிழக ஆளுநருக்கு நன்றி!!![தனிச் சிறப்புப் பதிவு]

மிழ்நாடு சட்டமன்றத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட, 'நீட்' தேர்வுக்கு 'விலக்கு' அளிக்கக் கோரும் மசோதா'வைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆறு மாதம் போல கிடப்பில் போட்டு, இப்போது தூசு தட்டி எடுத்துத் தமிழ்நாடு சட்டமன்றத் தலைவருக்கு[சபா நாயகர்]அவர் திருப்பி அனுப்பியிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

நுணுகி ஆராய்ந்தால் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் பல நன்மைகள் விளையவிருப்பதை அறியலாம்.

*ஆளுநர் இதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, "அவரும் இதை நிராகரித்தால் என்ன செய்வீர்கள்?" என்னும் கேள்வியை முன்வைத்து நம் அரசையும் தலைவர்களையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

*"உச்சநீதி மன்றமே நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொல்லிவிட்ட பிறகு நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவது எவ்வகையில் சாத்தியமாகும்?" என்று நீட்டை ஆதரிப்பவர்கள் திரும்பத் திரும்ப வினா எழுப்பும் நிலையில், அதற்கும் மிகச் சரியான மாற்று வழியைக் கண்டறிவதில், கூடவிருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் குழு தீவிரம் காட்டுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

*கட்சித் தலைவர்கள் என்றில்லாமல், மாணவர்களையும் போராடத் தூண்டியிருக்கிறது ஆளுநரின் இந்த நடவடிக்கை.

*இணைய வலைஞர்கள்கூட, "ஆளுநரே திரும்பிப் போ" என்று கூட்டுக் குரல் எழுப்பிப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

*தமிழ் ஊடகங்களும் இது குறித்துப் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டுச் செவ்வனே தம் கடமையைச் செய்கின்றன.

*நீட் ரத்துக்கான நீதிமன்ற நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்துவதற்கான சூழலும் உருவாகியிருக்கிறது.

*வேறு எவ்வகையிலும் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை நிறைவேற்றிட, ஒன்றுபட்ட போராட்டம் மட்டும்தான் வழியா?" என்று கேள்வி எழுப்பும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் தமிழக ஆளுநர் மட்டுமல்லாமல், நடுவணரசின் 'நீட் விலக்கு' தொடர்பான நடவடிக்கையை[நேரடியாகவோ மறைமுகமாகவோ] ஊன்றிக் கவனிக்க வைத்திருக்கிறது.

யோசித்தால் இன்னும் பல நன்மைகள் இருப்பதை அறிவது சாத்தியமாகலாம்.

எனவே,

தூங்கிவழிந்துகொண்டிருந்த தமிழ் உணர்வாளர்களைத் தட்டியெழுப்பி, விழிப்புணர்வு பெற்றிடச் செய்தமைக்குத் தமிழ்நாடு ஆளுநருக்கு நன்றி சொல்வோம்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

==========================================================================