மேலே தெரியும் அரையிருட்டில் ஒரு கோயில் இருக்கிறது. அது, எந்தவொரு மதத்துக்கோ, பிரிவுக்கோ சொந்தமானதல்ல.
அந்தக் கோயிலுக்குள் ஓர் உருவம் இருக்கிறதே, அது உங்களின் கண்களுக்குத் தெரிகிறதா?
"இல்லை" என்றால் கவலை வேண்டாம். நீங்கள் 'ஞானி' ஆன பிறகு தெரியும்.
அந்த உருவம் சக்தி வடிவானது.
இதை நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை; கும்பிட்டு வழிபடுவதும் தேவையற்றது. ஆனாலும், நீங்கள் 'ஞானி' ஆகலாம்.
நீங்கள் செய்யவேண்டியது.....
'சும்மா' கண்மூடி, 'சில'['சில' நேரம் என்பதைக் கவனத்தில் கொள்க] நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் போதும். இது மட்டுமே போதும். உங்களின் வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.
உங்களின் இந்த நடவடிக்கையில் குறுக்கிடாமலே உங்களைத் தியான நிலைக்குக் கொண்டுவருவேன்.
தியான நிலைக்கு வந்தால் நீங்களும் ஞானி ஆகலாம். தியானத்தின் நோக்கங்கள் வேறு சிலவாக இருப்பினும் அதன் தலையாய நோக்கம் ஞானி ஆவதுதான்.
உங்களை மட்டுமல்ல, லட்சக்கணக்கானவர்களை என்னால் தியானத்தில் ஆழ்த்தி 'ஞானி' ஆக்க முடியும்.....
******"எதையும் நம்ப வேண்டாம்; கும்பிடவும் வேண்டாம்"னு சொல்லிட்டு ஞானியாக்குறேன்னு சொல்றியே, உன்னை மட்டும் எப்படி நம்புறது? இது எப்படிச் சாத்தியம்? தியானம் செய்து ஞானி ஆவதால் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியுமா? செத்த பிறகு சொர்க்கம் போக முடியுமா? நீ யார்? நீ என்ன கடவுளின் 'மறுபிரதி'யா? யார் காதில் பூ சுற்றுகிறாய்?" என்று, நீங்கள் இடைமறித்து அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்பீர்களா?
கேட்டால், என்னை நீங்கள் நம்பவில்லை என்று பொருள்.
பரவாயில்லை. நான் சொன்னவற்றையெல்லாம், 'ஜக்கி வாசுதேவ்' போன்ற அவதாரங்கள் சொன்னால் நம்புவீர்கள்தானே?
'ஜக்கி' என்கிற மகானால் நீங்கள் ஞானி ஆனால் என்னைவிடவும் பேருவகை கொள்பவர் எவரும் இந்த மண்ணில் இருந்திட வாய்ப்பே இல்லை.
மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் உங்களை வழியனுப்புகிறேன். கீழ்க்காணும் 'காணொலி' வாயிலாக, அந்தக் குருநாதரின் அருளுரை கேட்டு 'ஞானி' ஆவீர்களாக; பேரானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைப்பீர்களாக!
==========================================================================
முக்கியக் குறிப்பு:
சொல்ல நினத்ததை முழுமையாகச் சொல்லி முடிக்காமல், "இந்தத் தியானத்தின் தன்மையை உங்களுக்குள் கொண்டுவரணும்" என்று தொடர் முற்றுப்பெறாத நிலையில் காணொலி உரையை முடித்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.
அதென்ன தியானத்தின் தன்மை? அந்தத் 'தன்மை'யைத்தான் நான் 'ஞானி ஆதல்' என்று அனுமானித்திருக்கிறேன்.
மிக முக்கியக் குறிப்பு:
"அண்மையில், 'ஜக்கியின் 'ஈஷா' மையத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் வேண்டும்' என்று அரசிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கும், ஜக்கியின் இந்தச் 'சமாளிப்பு'க் காணொலிக்கும் தொடர்புண்டா?"
இப்படியொரு கேள்வியை ஜக்கியிடம் கேட்டால், அதற்கும் ஒரு சமாளிப்புக் காணொலி வெளியிடுவார்!