"வாழ்க்கையில் மனுசங்க அனுபவிக்கிற சந்தோசங்களைக் காட்டிலும் படுகிற கஷ்டங்கள்தான் அதிகம். காலங்காலமா இதுதான் நடந்திட்டிருக்கு. கடவுளைக் கும்பிடுறதால இதுல எந்தவித மாறுதலும் உண்டாகல. இதை உங்ககிட்ட பல தடவை சொல்லியிருக்கேன். எனக்குச் சுத்தமா கடவுள் நம்பிக்கை கிடையாதுங்கிறதும் உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்குக் கோயிலுக்குப் போ போன்னு கட்டாயப்படுத்துறீங்க?" -கொஞ்சமாய், செல்லக் கோபம் காட்டினான் கந்தசாமி.
"தொழிலில் நட்டம். வாங்கின கடனைத் திருப்பித் தர முடியல. உன் அப்பா தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். அவர் உயிர் வாழணும்; தொழிலும் நல்லா நடக்கணும். கோயிலுக்குப் போயி நீட்டிப் படுத்து அம்மனைக் கும்பிட்டா நல்லது நடக்கும்னு நான் நம்புறேன்பா. எனக்கு உடம்பு சரியில்லாததாலதான் உன்னைப் போகச் சொல்லுறேன்....."
சற்றே நிறுத்தி, கலங்கிய கண்களுடன் மகனை உற்று நோக்கிய பழனியம்மா, "பிடிவாதத்தைக் கைவிட்டுட்டுக் கிளம்புப்பா. உனக்காக வேண்டாம்; எனக்காகவும் அப்பாவுக்காகவும் இதைச் செய் கந்தசாமி" என்றார்.
மவுனமாக வெளியேறினான் கந்தசாமி.
அவன் வீடு திரும்பியதும், “கோயிலுக்குப் போனாயா?” என்று வினவுவது போல் பார்த்தார் பழனியம்மா.
“கோயிலுக்குப் போகல. கடன் கொடுத்த எல்லாரையும் தேடிப் போனேன். ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து கும்பிட்டேன். நமக்குக் கடன் கொடுத்தவங்க ரொம்ப நல்லவங்க. 'உன் அப்பாவைப் பத்தியும் உன்னைப் பத்தியும் எங்களுக்கு நல்லாவே தெரியும். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலை மெதுவா சம்பாதிச்சுக் குடுங்க'ன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.
அம்மா மவுனமாக நடந்து உள்ளறையிலிருந்த முருகன் படத்தின் முன்னே நின்று கைகூப்பினார்; தழுதழுத்த குரலில் ஏதோ சொல்லத் தொடங்கினார்.
விழிகளில் பாசம் பொங்கி வழிந்திட, பெற்ற தாயை உற்று நோக்கினான் கந்தசாமி; 'பாவம் அப்பாவி அம்மா' என்று மனதுக்குள் முணுமுணுத்தான்.
==========================================================================