அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 19 மே, 2022

"எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை"... சொல்லும் இஸ்லாமியப் பெண்!!!

டை உடுத்துவதில் ஆணுக்குள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டு என்றாலும், பொது இடங்களில் ஆணின் கவனத்தை ஈர்க்காத அளவுக்கு உடை உடுத்துவது நல்லது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதை இஸ்லாமியப் பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். குறை சொல்ல இயலாத அளவுக்கு நடந்துகொள்கிறார்கள்.

ஆனால், இது விசயத்தில் இங்கு எப்படியோ, ஆப்கானிஸ்தான் பெண்கள் நடத்தப்படும் விதம் மனித குலத்தை வெட்கித் தலை குனிய வைப்பதாக உள்ளது.

எல்லை கடந்த, தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

பெண் உரிமையை மீட்பதற்காக மட்டுமாவது உலக நாடுகள், இவர்களுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுப்பது மிக மிக மிக அவசியம்.

மதம், கடவுள் ஆகியன குறித்தும் இஸ்லாம் பெண்கள் தங்களின் கருத்தைப் பொது வெளியில் சொல்வதற்கான சூழலும் உருவாக்கப்படுதல் வேண்டும். 

இன்றுள்ள சூழலில், ஆப்கானிஸ்தானில் வாழும் ஒரு பெண், தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று 'பிபிசி' யிடம் சொல்லியிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க செயலாகும்.

இனி, ஆப்கானிஸ்தானில், பெண்கள் தலிபான் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து  நடத்தும் போராட்டங்கள் குறித்த 'பிபிசி' செய்தியை வாசிக்கலாம்.

#"தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சந்தித்த தையல்காரரும்கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்" என்று சொல்லும் 'சோர்ச்யா' ஆப்கானிஸ்தான் நாட்டுப் பெண்.

காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் 'சோரயா'. இவர்,  இந்த வாரம் மேற்குக் காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, "தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்கடைகளுக்குள் இருந்தபடி, கடைக்காரர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் குறித்தும், தையல்காரர்களால் தயாரிக்கப்படும் பெண்களின் ஆடை  அளவு குறித்தும் விசாரிப்பதைக் காண நேர்ந்தது.  இது என் மனதில் அச்சத்தை உண்டுபண்ணியது" என்றார்.

"ஆப்கானிஸ்தானில் ஒரு பெண்ணாக இருப்பதே குற்றம் போல இருக்கிறது. எனக்கு ஆடை விஷயத்தில் அவர்கள் என்ன தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் எப்படியும் என் வீட்டை விட்டு வெளியேறும் நிலை இல்லை. நிலைமை மிகவும் நம்பிக்கையற்று இருக்கிறது" என்று தாலிபன் கையப்படுத்தியதால் வேலையை இழந்து பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் 'சனா' கூறினார்.

பெரும்பாலான ஆப்கன் பெண்கள் ஏற்கெனவே தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஹிஜாப் அணிந்துள்ளனர். ஆனால், புதிய கட்டுப்பாடுகளின்படி பெண்கள் முழு நிகாப் (கண்கள் பகுதியில் மெல்லிய இடைவெளி கொண்ட முகத்திரை) அணியவேண்டுமாம்.

அவர்களின் மஹ்ரம் அல்லது ஆண் பாதுகாவலர், பொதுவாக நெருங்கிய ஆண் உறவினராக இருப்பார். அவர்கள், வீட்டுப் பெண்களின் ஆடையைக் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அமைச்சக அதிகாரிகளைச் சந்திக்க அனுப்பப்படலாம்; நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, மூன்று நாட்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

புதிய கட்டுப்பாடுகளின் தாக்கத்தை உணர்ந்த சில பெண்கள் தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைத்துக் குரல் கொடுக்கவும் செய்கிறார்கள்.

காபூலில் ஒரு குழு இந்த வாரம், மரபு ஆப்கானிய ஆடைகளை அணிந்து ஆடை குறித்த அரசாணையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.

"கடந்த 8 மாதங்களில் தாலிபன்கள் எங்களின் ஆடைகளை கண்காணிப்பதைத் தவிர எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நிலையின்மை நிலவுகிறது. தாலிபன்கள் இந்தப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்க்கவில்லை" என்று எதிர்ப்பாளர் 'மரியம்' கூறினார்.

காபூலில் உள்ள பெண்ணுரிமை ஆர்வலர் 'அனோஷா', தானும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்ததாகக் கூறினார். "அரசாணை வெளியிடப்பட்ட முதல் நாள், நான் எனது 12 வயது மகனுடன் வேண்டுமென்றே எனது சாதாரண உடையை அணிந்துகொண்டு, என் முகத்தை மறைக்காமல் நகரப் பகுதிகளுக்குச் சென்றேன். தாலிபன் உறுப்பினரை எதிர்நோக்கி சவால்விட வேண்டும் என நினைத்தேன்" என்கிறார்.

தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் 'ஷேக்பா', அதிகாரிகளுடனான அவருடைய சண்டைக்குப் பிறகும்கூட, தான் ஆடை அணியும் விதத்தை மாற்றுவதற்கான எந்த அழுத்தத்தையும் எதிர்த்துப் போராட இருப்பதாகச் சொன்னார்.

ஷேக்பா மேலும் பேசியபோது, ஆப்கன் சமூகத்தில் தனது ஆடை விஷயத்தில், தனது குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் உட்பட அனைவரிடம் இருந்தும் எப்போதும் அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறினார்.

இது மட்டுமே அவர் எதிர்கொண்ட தடையல்ல. ஷேக்பா ஈரானில் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதற்காக முயன்றபோது, விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டார்.

"என்னுடன் யாரையும் ஈரானுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று தாலிபன்களிடம் விளக்க முயன்றேன். அவர்கள் அதைக் கேட்கவில்லை," என்று வேதனை பொங்கச் சொன்னார்  ஷேக்பா.#

'சோர்ச்சயா', 'சோரயா', 'சனா', 'மரியம்', 'அனோஷா', ஷேக்பா' என்றிவர்கள் போல், ஆப்கானிஸ்தானில் தங்களின் மனக் குமுறலை வெளிப்படுத்த இயலாமல் முடங்கிக் கிடப்பவர்கள் எத்தனைப் பேரோ?!

==================================================================

https://www.bbc.com/tamil/global-61472257