அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 23 மே, 2022

விந்தணுப் பாதிப்பும் சேமிப்பும்!

தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓர் இளைஞனின் பெற்றோர் விசித்திரமான மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுவை வழங்க, 'சர் கங்கா ராம்' மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆனால், கங்காராம் மருத்துவமனை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சட்ட ரீதியான காரணங்களைச் சொல்லி, தான் சேமித்து வைத்துள்ள இளைஞனின் விந்துவை வழங்க இயலாது என்று தெரிவித்தது.

இது, 'பிபிசி'யில்[https://www.bbc.com/tamil/india-60343302   -11 பிப்ரவரி 2022] வெளியான செய்தி.

விந்து சேமிக்கப்பட்டதற்கான காரணமும் செய்தியில் இடம்பெற்றுள்ளது. அது.....

அந்த இளைஞர் ஜூன், 2020ஆம் ஆண்டு, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் புற்றுநோய்ப் பாதிப்பு இருந்தது.

அவருக்குத் திருமணம் ஆகவில்லை. சிகிச்சையின்போது, கதிர்வீச்சு உடலில் எதிர்மறையான விளைவுகளையும் மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பதால், கீமோதெரபிக்கு முன் நோயாளியின் விந்துவைப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது விந்தணு பாதுகாக்கப்பட்டது. பின்னர் நோயாளி வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்.

இந்த நோயாளி செப்டம்பர் 2020ஆம் ஆண்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நோயாளியின் மரணத்திற்குப் பிறகு, 'சர் கங்கா ராம்' மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த விந்தணுவை, அவரின் பெற்றோரிடம் திருப்பித் தர மறுத்ததால்  விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்தச் செய்தி வெளியானபோது, வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

இச்செய்தியின் மூலம், ஆடவர்களின் விந்தணு புற்று நோயால் பாதிக்கப்படும் என்பதை அறிய இயலுகிறது.

லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்ட 'கொரோனா' தொற்றாலும் உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College London) ஆய்வின்படி, கோவிட்-19(Coronavirus) காரணமாக, விந்தணு எண்ணிக்கை(Sperm Count) மற்றும் விந்தணு இயக்கம் ஆகியவற்றில் பாதிப்பு உள்ளது. கோவிட் நோயிலிருந்து மீண்டு பல மாதங்களாகியும் ஆண்களின் விந்தணுவின் தரம் மோசமாகவே உள்ளது[https://zeenews.india.com/tamil/world/surprising-claim-surfaced-does-corona-affect-sperm-count-377902]. இந்தச் செய்தி அதற்குரிய ஆதாரமாக உள்ளது.

ஆக, இந்த இரு நோய்கள் தவிர வேறு தொற்று நோய்களாலும், அவற்றிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் எதிர் விளைவுகளாலும், உயிரணுக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று உறுதிபடச் சொல்லலாம்.

மேற்குறிப்பிடப்பட்ட இளைஞனுக்கு நிகழ்ந்தது போல், தங்களுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று அஞ்சி, எதிர்காலத்தில், திருமணம் ஆகாத இளைஞர்களும், மணமாகியும் குழந்தைக்குத் தந்தை ஆகாதவர்களும், குழந்தை இருந்து இன்னும் வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் தம் விந்தணுக்களைச் சேமித்துக்கொள்ளும் நிலை உருவாகலாம்.

இந்தச் சேமிப்பு முறை இப்போதே நடைமுறையில் உள்ளதாகவும் தெரிகிறது[பொதுவாக ஆண்களுக்கு வயதாகும்போது ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டுக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. எனவே, வயதான காலத்தில்கூட, குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் ஆண்கள் இந்த செயல்முறையை செயல்படுத்தலாம்.https://tamil.samayam.com/lifestyle/health/sperm-freezing-for-future-fertility-procedure-and-risks-in-tamil/articleshow/79693060.cms?story=1]. ஆனால், மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றிடவில்லை.

இனியேனும், வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சேமிப்பு நிலையங்கள் மீது முழு நம்பிக்கை வைப்பது சாத்தியம் ஆகாத நிலை உருவானால், அவரவர் வீட்டிலேயே விந்தணுவை ஆண்டுக்கணக்கில் பாதுகாத்துக்கொள்வதற்கான சாதனங்கள் கண்டுபிடிக்கப்படும் நாளும் வரக்கூடும்.

இளவட்டங்கள் அந்த நாளுக்காகக் காத்திராமல், புகைத்தல், மது அருந்துதல், போதைக்கு அடிமையாதல் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களை வெறுத்தொதுக்கி, உடல்நலம் பேணுவதில் அதீதக் கவனம் செலுத்துதல் மிக மிக மிக அவசியம்.

==================================================================