செவ்வாய், 24 மே, 2022

மனமும் மணமும்!!

நாற்றம் எனும் சொல் முதலில் நறுமணம் என்னும் பொருளில்தான் வழங்கி வந்திருக்கிறது. ‘கருப்பூரம் நாறுமோ; கமலப்பூ நாறுமோ; திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று கடவுளாகக் கருதப்படும் கிருஷ்ணனின் வாய் மணத்தை ஆண்டாள் பாடிப் பரவசமடைந்தார்.

மலர்கள் என்றாலே அனைத்து மலர்களுமே நல்ல மணம் கொண்டவை என்றுதான் நினைக்கிறோம்.

சில மிருகங்களின் கழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் மணம் உடையதாக இருக்கிறது. பசுச் சாணத்தின் மணத்தை உதாரணமாகச் சொல்லலாம். புனுகுப் பூனையின் கழிவு, வாசனைத் திரவியம் போல நறுமணம் உடையது. 'paradoxurus hermaphroditus' என்ற பெயர் கொண்ட புனுகுப் பூனை, காபிப் பழங்களை விரும்பிச் சாப்பிடும். காபிக் கொட்டைகள் அதன் கழிவுடன் சேர்ந்து வெளிவந்துவிடும். அதன் உணவுப் பாதையில் உள்ள என்சைம்களின் செயலால் காபிக் கொட்டையில் இனிய மணம் ஏறுகிறது. இப்படி வெளிவந்த கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காபிக்குக் ‘கோப்பி லுவாக்’ எனப் பெயர். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் அபார மணம் கொண்ட இந்தக் காபியின் விலை, கோப்பை ஒன்றுக்கு நூறு டாலர் வரை!

பெண்ணுக்கென்று தனி வாசனை உள்ளது என்பது கலப்படமில்லாத கற்பனை. ஆணென்ன, பெண்ணென்ன நாலு நாள் குளிக்காவிட்டால் உடம்பு நாறிப்போகும்.

நல்ல மணத்துக்குப் பதிலாகக் கெட்ட மணம் வீசும் மலர்களும் உண்டு.

‘அமோர்ஃபோஃபாலஸ் டைட்டானம்’ என்னும் தாவரம் சுமத்ரா மழைக்காடுகளில் இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய பூங்கொத்து உடைய தாவரம் என்ற சிறப்புப் பெற்றது இது. இதன் பூங்கொத்து அழுகிப்போன பிணத்தின் நாற்றத்தைக் கொண்டிருக்கும்!

‘தீக்குச்சி மரம்’ என்றழைக்கப்படும் Ailanthesexcelsa  மரத்தின் மலர்களோ மிகவும் துர்நாற்றம் கொண்டவை.

பூக்களில் மரபியல் மாற்றங்களைச் செய்து வாசனையைக் கூட்டவோ குறைக்கவோ இயலும் என்பதை ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். 

சில வாசனைகள் சிற்றின்ப நுகர்வைத் தூண்டுவனவாக அமைவதுண்டு. உதாரணத்துக்கு மாலை நேரங்களில் பெண்கள் விரும்பிச் சூடும் மல்லிகை வாசம்! முதலிரவு அறையில் ஊதுபத்தி மற்றும் நறுமண மலர்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. 

சில வாசனைகளுக்குச் சிலர் ‘அடிமை’ ஆகிவிடுவார்கள். பெட்ரோல் நிலையங்களில் வேலை பார்க்கும் சிலர் கைக்குட்டையைப் பெட்ரோலில் நனைத்து முகர்ந்துகொண்டே இருப்பார்களாம்! பெயின்ட் வாசனை சிலருக்குப் போதையைத் தருவதுண்டு!

வாசனையறியும் குறைபாட்டுக்கு தலைக்காயம், ஹார்மோன் கோளாறுகள், சைனஸ், பல் பிரச்னைகள், மருந்துகளின் பக்க விளைவுகள், புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் கதிர்வீச்சுச் சிகிச்சை, புகை பிடித்தல், முதுமை போன்ற பல காரணங்கள் உண்டு.

வாசனைகளை அறிவதில் ஏற்படும் குறைபாட்டுக்கு ‘ஹைப்ஸ்மியா’ என்றும், அறவே வாசனைகளை உணர இயலாத குறைபாட்டுக்கு ‘அனோஸ்மியா’ என்றும் பெயர். பொருட்களின் அசல் வாசனைக்குப் பதிலாக வேறு வாசனையை நுகர்வதாக உணரும் ‘டைசோஸ்மியா’, இல்லாத வாசனைகளைக் கற்பனையாக உணரும் ‘ஃபாண்டோஸ்மியா’ எனப் பல குறைபாடுகளும் இதில் இருக்கின்றன.

வாசனையை எப்படி அறிகிறோம்? உள்மூக்கின் அடிப்பகுதித் திசுக்களில் ஆல்ஃபேக்டரி சென்சரி நியூரான் எனப்படும் வாசனையறியும் செல்கள் பொதிந்து காணப்படும். இவை மூளையுடன் நேரிடையாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செல்லும் தனிப்பட்ட வாசனையை அறியும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத நுண் மூலக்கூறுகள் வெளியாகிக்கொண்டே இருக்கும். அவற்றை இனங்கண்டு இந்த நியூரான்கள் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன. மூளை அதை இனம் கண்டு வாசனைகளை அறிகிறது.

வாசனைகளை நாசித் துவாரத்தின் மூலம் மட்டுமே உணர்வதாக நினைத்திருக்கிறோம் அல்லவா? தொண்டையின் மேற்பரப்பில் உள்ள சேனல் ஒன்றும் மூக்கோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நாம் உணவு உண்ணும்போது அறியும் வாசனைக்கு இங்கு உள்ள நியூரான்களும் காரணமாகும். ஜலதோஷம் வந்தால் இந்தச் சேனல் தடைப்படுவதால்தான், அப்போது வாசனைகளைச் சரிவர நுகர முடிவதில்லை.

ஒரு குற்றம் நிகழ்ந்ததும் சம்பவ இடத்துக்கு வரும் துப்பறியும் நாய்களுக்கு உறுதுணையாக இருப்பது அவற்றின் வாசனை[மோப்பம்] அறியும் சக்திதான். 

70 முதல் 80 சதவீதம் பேருக்கு வாய் நாற்றம் இருக்கிறதாம். தங்களுக்கு இப்படி ஒரு குறை இருப்பதே தெரியாமல்தான் பலரும் இருக்கிறார்கள். வாய்த் துர்நாற்றம் உள்ளவர்கள் உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். 

டாக்டர்கள் வாய் நாற்றத்தை ‘ஹாலிடோஸிஸ்’ என்கிறார்கள். சரியாகப் பல் துலக்காதது, வாயில் புண் இருப்பது, ஈறுகளில் நோய்க் கிருமிகள் தொற்றுவது, தொண்டையிலும், நுரையீரலிலும் நோய்கள் இருப்பது போன்றவை வாயில் துர்நாற்றம் உண்டாவதற்கான காரணங்களில் சிலவாகும்.

=================================================================

நன்றி:http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=788&id1=6&issue=20110131