மேற்கே சூரியன் மறையும் ரம்மியமான காட்சியை ரசிக்கும் மனநிலையில் அவர் இல்லை.
காரணம் அவரின் சிந்தை முழுக்கப் பிரபஞ்சத்தின் தோற்றம், இருப்பு போன்றவை குறித்த கேள்விகளே நிறைந்திருந்தன. அன்றைய தினம்வரை அவற்றிற்கான விடைகள் கண்டறியப்படவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.
தீவிரமான சிந்தனைக்கிடையே, சற்றுத் தொலைவில் ஒரு மனிதர் கடல் அலைகளை அணுகுவதும், கரைக்குத் திரும்புவதுமாக இருப்பதைக் கண்டார்.
அவரின் நடவடிக்கை அரிஸ்டாட்டிலை வெகுவாக ஈர்த்தது.
அவரை நெருங்கி, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"இந்தச் சிறு கரண்டியால்[spoon] கடல் நீரை மொண்டுவந்து இதோ இங்கே இருக்கும் சிறு குழியில்[hole] கொட்டிக் கொட்டிக் கடலைக் காலி ஆக்கப்போகிறேன்" என்றார் அவர்.
வாய்விட்டு நகைத்தார் அரிஸ்டாட்டில்; சொன்னார்: "இது மகா மகாப் பெரிய சமுத்திரம். இதிலுள்ள நீரை இந்தச் சிறு கரண்டியால் மொண்டுவந்து குழியில் கொட்டிக் கடலைக் காலி செய்யப்போவதாக நீங்கள் சொல்வது அபத்தம். இது முட்டாள்தனமான செயல்" என்றார்.
"உண்மைதான். இனி இச்செயலில் நான் ஈடுபடமாட்டேன்" என்று சொன்ன அந்த மனிதர், "உங்களிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்" என்று சொல்லித் தொடர்ந்து பேசினார்.
"என் செயல் முட்டாள்தனமானது என்பது சரியே. இந்தப் பிரபஞ்சம் என்பது இந்தக் கடலைவிடவும் பல கோடி கோடி கோடி மடங்கு பெரியது. இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தைச் சிந்தனை என்னும் கரண்டியால் அளந்து, உங்களின் மூளை என்னும் சிறு குழிக்குள் இட்டு நிரப்ப முயற்சிக்கிறீர்களே, இது அபத்தம் இல்லையா?" என்று கேட்டார், அரிஸ்டாட்டில் ஒரு தத்துவ ஞானி என்பதை அறிந்திருந்த அந்த மனிதர்.
அவ்ர் கேள்விக்குப் பதில் தராத அரிஸ்டாட்டில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.
* * * * *
பிரபஞ்சம் குறித்த ஆகச் சிறந்த தத்துவம் இது; அரியதொரு வாழ்க்கைத் தத்துவமும்கூட.
"ஐம்புலங்களால் அறியப்படும் பொருள்களின் தோற்றத்திற்கான நோக்கம் பற்றி 0001%[எத்தனை சுழியும் போடலாம்] உண்மையைக்கூடக் கண்டறியாத மனிதர்கள், ஆளாளுக்குக்கு ஒரு கடவுளைப் படைத்து வைத்துக்கொண்டு அவற்றை வழிபட்டுக் கொண்டாடிக் கூத்தடிப்பதும், மதங்களின் பெயரால் கலகம் விளைவித்து அடித்துக்கொண்டு லட்சக்கணக்கில் செத்தொழிந்ததும், இப்போதும் செத்துக்கொண்டிருப்பதும்[எண்ணிக்கை கூடக்குறைய இருக்கலாம்] இங்கே நிரந்தரம் ஆகிப்போன ஒன்று" என்றெண்ணி வேதனைப்படுவதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!
குறிப்பு:https://moralstories26.com/aristotle-man-on-beach-life-greek-philosopher/ என்னும் தளத்தின் ஆங்கிலக் கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்திருக்கிறேன்; தேவை என்று நினைத்த மாற்றங்களையும் செய்திருக்கிறேன்.
=================================================================