'திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் மாலை காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதனால், 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசைகட்டி, 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்கள்' என்பது இன்றைய[13.06.2022]ச் செய்தி.
இதை வாசிக்கும்போது மனம் படும் வேதனை விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
இம்மாதிரியான செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகின்றன.
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனப் பக்குவத்தையும், வாழ்க்கை அனுபவங்களையும் பொருத்தது என்றாலும்.....
உண்மையிலேயே இவர்கள் தரிசிக்க இருப்பது உண்மையான ஏழுமலையான் அல்ல; அவரின் சிலையைத்தான் என்பது இவர்களுக்குத் தெரியும். அந்தச் சிலை, இப்போது இருக்கும் இடத்திலேயே இனி எப்போதும் இருக்கும் என்பதும் தெரியும். விசாரித்துத் தெரிந்துகொண்டு கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் வந்து தரிசித்துச் செல்லலாம்.
இதன் மூலம், ஆட்டு மந்தைகளாகக் காத்திருக்கும் பரிதாபம் தவிர்க்கப்படும்.
ஒரு நாளில் இத்தனை பேர்தான் தரிசிக்கலாம் என்று நிர்வாகம் வரையறை செய்திருக்கலாம். செய்யாதது ஏன்?[இணையம் மூலம் முன்பதிவு செய்யும் முறையை இதற்கும் பின்பற்றலாமே?].
இப்படிப் பக்தர்கள் காத்துக்கிடந்து தரிசனம் செய்வதைக் கோயில் நிர்வாகம் பெருமைக்குரியது என்று நினைக்கிறதா?
"இல்லை" என்றால், விசேட நாட்களில் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் என்பார்கள்.
மனதுக்குப் பிடித்த சாமியைத் தரிசிப்பதற்கு ஏது விசேட நாளும் விசேடம் அல்லாத சாதாரண நாளும்?
கடவுள் நம்பிக்கைக்குள்ளேயும் ஏன் இந்தக் குருட்டு நம்பிக்கைகள்!?
இந்தக் குருட்டு நம்பிக்கைகளிருந்து பகதர்களை விடுவிப்பது மிக அவசியம்.
அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக.....
வாசிப்பு வாசனையே இல்லாத பெரும்பாலான பக்தர்களுக்குச் சிந்திக்கும் அறிவைத் தூண்டும்படியான நல்ல நூல்களை வாசிக்கத் தரலாம்.
மணிக்கணக்கில் தரிசனத்துக்காக காத்திருந்து வீணடிக்கும் நேரத்தில் ஆளுக்கொரு நூல் கொடுத்துப் படிக்கச் செய்தால் பெரும் பயன் விளையும்.
ஆனால், இதைக் கோயில் நிர்வாகம் அனுமதிக்காது.
முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பதுதானே அவர்களின் விருப்பம்.
எனவே.....
தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களிடம் பகுத்தறிவு வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வழங்கும் பணியைப் பகுத்தறிவு இயக்கங்கள் தொடங்கலாம்.
செய்வார்களா? எப்போதிருந்து?!
======================================================================================