வியாழன், 23 ஜூன், 2022

'தில்லை நடராசனே தீட்சிதன்தான்! தீட்சிதனே தில்லை நடராசன்!!

"தில்லை மரங்கள்[மரங்களில் ஒரு வகை] சூழ்ந்த, அடர்ந்த காட்டில்[தில்லை-சிதம்பரம்] எழுந்தருளியிருந்த சிவபெருமான்[பூசாரிகள் தனக்குப் பூஜை செய்வது பிடிக்காமல்], கைலாய மலையிலிருந்து  3000 தீட்சிதர்களை[2999+1... விவரம் கீழே] தனக்குச் சேவை செய்வதற்காக அழைத்து வந்தார்" என்கிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள்[தினகரன் 23.06.2022], பக்கம் 14; கோவைப் பதிப்பு]

தீட்சிதர்கள் என்றால், பூசாரிகளைக் காட்டிலும், கல்வி, ஞானம், வேதாகமப் பயிற்சி என்றிவற்றால் மட்டும் மேம்பட்டவர்கள் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. "அவர்கள் முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கு இணையானவர்கள் ஆவார்கள்."

சொல்வது யார்?

சொன்னவர்கள்/சொல்பவர்கள் இன்றும் தில்லையில்[சிதம்பரம்] வாழ்ந்துகொண்டிருக்கும் தீட்சிதர்கள்தான்.

அத்ற்கு ஆதாரமாக ஒரு கதையையும் அவர்களே சொல்கிறார்கள். அது.....

கயிலை மலையிலிருந்து புறப்பட்டுத் தில்லை[சிதம்பரம்] வந்து சேர்ந்த 3000 தீட்சிதர்களில் ஒரு நபர் காணவில்லையாம். கவலை மீதூர 2999 பேரும் அவரைத் தேடிக் கானகமெங்கும் அலைந்தபோது வான் வெளியிலிருந்து அசரீரியாக ஒரு குரல் ஒலித்தததாம். அந்த அசரீரி.....

"பேசுவது தில்லை நடராசனாகிய நான்தான். நீங்கள் தேடும் அந்த ஒரு தீட்சிதரும்[2999+1] நானேதான்[3000ஆவது நபர்] என்பதை அறிவீர்களாக. உடன் வந்த நான் பின்னர் மறைந்தேன்" என்று சொல்லி அவர்களை ஆற்றுப்படுத்தியதாம்!

இந்த நிகழ்வின் மூலம் நம் போன்ற முழு மூடர்கள் அறியத்தக்கது என்னவென்றால்.....

அன்று தீட்சிதன் உருவில்  வந்த சிவபெருமானுடன் வருகை புரிந்த அந்த அந்தக் கால 2999 தீட்சிதர்கள் மட்டுமல்ல, இன்று சிதம்பரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனைத் தீட்சிதர்களும், கடவுளாம் தில்லை நடராசனின் பரம்பரையினர்[தில்லை நடராசன்களே] என்பதுதான்.

எனவே, சிவபெருமானை நேரில் தரிசிக்கும் பேறு பெறாத பாவிகளாகிய தமிழர்கள், தீட்சிதர்களைத் தரிசித்து, இயலுமெனின், காணுமிடத்திலேயே காணிக்கை செலுத்திப் புண்ணியம் சேர்த்து வீடுபேறு பெறலாம் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது!

======================================================================================