அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 22 ஜூன், 2022

ஒரு 'தாசி' தாரம் ஆன கதை!!!


     

"தரகர் முத்தண்ணா பேசுறார்.” -கைபேசியை மகள் ஆனந்தியிடம் நீட்டினாள் மரகதம்.

வாங்க மறுத்த ஆனந்தி, “தொழிலைக் கை கழுவிட்டதா ஏற்கனவே அவர்கிட்டே சொல்லிட்டேன். தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லிடு" என்றாள்.

"நாலு நாளா போன் பண்றவங்களுக்கெல்லாம் இதையே சொல்லச் சொல்லுறே. வீடு தேடி வர்ற வாடிக்கைக்காரங்களையும் இனி வரவேண்டாம்னு சொல்லித் திருப்பி அனுப்புறே. ஏன் இப்படிப் பண்ணுறே?” என்றாள் மரகதம் மிதமிஞ்சிய குழப்பத்துடன்.

"அதான்... தொழிலைக் கைகழுவிட்டதாச் சொன்னேனே, அப்புறம் என்ன?" என்றாள் ஆனந்தி, குரலில் சற்றே சினம் துளிர்க்க.

இனிப் பிழைப்புக்கு வழி?" -கேட்டாள் மரகதம்.

"இங்கிருந்தா வாடிக்கையாளருங்க தொல்லை இப்போதைக்குக் குறையாது. ஓரளவுக்குச் சேமிப்பு இருக்கு. வெளியூர் போயி ஒரு கடைகண்ணி வைச்சிப் பிழைச்சுக்கலாம்.”

புத்தி பேதலிச்சிப் போச்சா?” -கடுகடுத்தாள் மரகதம்.

நல்ல புத்தியோடுதான் பேசுறேன். ஆரம்பத்திலிருந்தே எனக்கு உடம்பை விலை பேசிப் பொழப்பு நடத்துறதில் இஷ்டமில்லை. என்னைப் பத்தாவதோடு நிறுத்திட்டு, நீ இருந்த இந்த நரகத்திலேயே என்னையும் தள்ளி விட்டுட்டேஇப்போ இதிலிருந்து விடுபட்டுக் கவுரவமா பிழைப்பு நடத்தணும்னு முடிவு பண்ணிட்டேன்.....

கொஞ்சம் இடைவேளி கொடுத்துத் தொடர்ந்தாள் ஆனந்தி. “எனக்கு வயசு முப்பது ஆயிடிச்சி. ஒரு புள்ள பெத்துக்கணும். நீ போனதுக்கப்புறம் எனக்கு ஒரு துணை வேணும்" என்றாள் ஆனந்தி.

நீ ஒரு விபச்சாரி. உன்னை எவனும் கட்டிக்க மாட்டான். தொழிலையும் விட்டுட்டேங்கிறே. அப்புறம் எப்படிப் புள்ள பெத்துக்குவே?” -நக்கலடித்தாள் தாயார்க்காரி.

இப்போ ஊரூருக்கு செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்கள் இருக்கு.”

இதுக்குச் சில லட்சங்கள் செலவாகும். இது நமக்குச் சரிப்பட்டு வராது. ஒழுங்கா நான் சொல்லுறதைக் கேளு. வாடிக்கையாளர் மூலமாவே ஒரு குழந்தையைப் பெத்துக்கோ. அப்புறமா தொழிலை விட்டுட்டு வெளியூர் போயிடலாம்.”

ஆனந்தியிடமிருந்து பதில் இல்லை..

என்ன யோசிக்கிறே?”

மாசம் ஒரு தடவை போல வந்து போவாரே குமரேசன், அவரைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

ரொம்பச் சாதுவானவர். தங்கமான மனுசன். வரும்போதெல்லாம், டாக்டரைப் பார்த்து உடம்பைச் செக்கப் பண்ணினியான்னு கேட்பாரே, அவருக்கு என்ன?” என்றாள் மரகதம்.

அவர் மூலமா குழந்தை பெத்துக்க ஆசைப்படுறேன்.”

நீ ஆசைப்பட்டாப் போதுமா, அவர் சம்மதிப்பாரா?"

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே பெண்டாட்டி இவரை விவாகரத்துப் பண்ணிட்டுப் போய்ட்டாங்க. சின்ன வயசிலேயே அப்பாவை இழந்தவர். போன வருசம் அம்மாவும் இறந்துட்டாங்க. இப்போ தனி ஆளாத்தான் இருக்காரு. கொஞ்ச நாள் அவரோடு மட்டும் இருந்தா அவரைப் போலவே நல்ல குணம் உள்ள குழந்தை பிறக்கும்னு நம்புறேன். போன் பண்ணி வரவழைச்சி என் விருப்பத்தைச் சொல்லலாம்னு இருக்கேன்.”

“இதுதான் உன் முடிவுன்னா நான் குறுக்கே நிற்கல. நேரம் காலம் எதுவும் பார்க்கத் தேவையில்ல. இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணு.”

கைபேசியை எடுத்துக் குமரேசனின் பேசி எண்களைப் பதிவு செய்து அவனின் தொடர்பு கிடைத்ததும், “வாடிக்கையாளரா இல்ல, ஒரு நல்ல நண்பரா உங்ககூடப் பேசணும். புறப்பட்டு வருவீங்களா?” என்றாள் ஆனந்தி.

சம்மதம் சொன்னான் குமரேசன்.

சொன்னபடியே சில நாட்களில் ஆனந்தியின் வீடு தேடி வந்தான் அவன்.

விபச்சாரத் தொழிலுக்குத் தலை முழுகுவதான தன் முடிவை அவனிடம் சொன்னதோடு ஒரு குழந்தைக்குத் தாயாகும் தன் ஆசையையும் வெளிப்படுத்தி, “நான் கருவுறும்வரை அதுக்கு வாய்ப்புள்ள நாட்களில் என்னோடு இருக்க நீங்க சம்மதிக்கணும்.....

.....நீங்கள்தான் இந்தக் குழந்தைக்கு அப்பான்னு சொல்லி உங்க சொத்தைப் பறிக்கும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். இது சத்தியம். என்னை நீங்க நம்பலாம்" என்று குரல் தழு தழுக்கச் சொன்னாள் ஆனந்தி.

வாய்விட்டுச் சிரித்தான் குமரேசன்.

நான் ஒரு மருந்து உற்பத்தி நிறுவன ஊழியன். வழக்குப் போட்டுப் பறிக்கும் அளவுக்கு என்கிட்டப் பெரிதாகச் சொத்து எதுவுமில்லை. அதில்லாம உன் நல்ல குணம் எனக்குத் தெரியும்" என்றான்.

அப்படியானா, என் விருப்பத்தை நிறைவேற்றுவீங்கதானே?” என்று ஆர்வம் பொங்க, குரலில் தாபம் வழிந்திடக் கேட்டாள் ஆனந்தி.

மீண்டும் சிரித்தான் குமரேசன். இந்தச் சிரிப்பில் நிறையவே சோகம் கலந்திருந்தது. சொன்னான்: “என்னை ரொம்பவே சாதுவான ஆள்னு நீ நம்பிட்டிருக்கே. அது தப்பு.....

..கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே என் பெண்டாட்டி என்னிடமிருந்து விவாகரத்து வாங்கிட்டுப் போய்ட்டாள்னு உன்கிட்ட சொல்லியிருக்கேனே தவிர, அதுக்கான காரணத்தைச் சொன்னதில்லை. இப்போ சொல்லுறேன்.....”

கொஞ்ச நேரம் பேசுவதை நிறுத்தித் தொடர்ந்தான். “நான் சந்தேகப் பேர்வழி. அடிக்கடி சந்தேகப்பட்டுக் கேள்விகள் கேட்டு அவளை நோகடிச்சிருக்கேன். சந்தேகப்படும்படியா அவளுடைய நடத்தையும் இருந்தது. அதனால, பிரிவை நினைச்சி ரெண்டு பேருமே வருத்தப்பட்டதில்ல..... 

அதிருக்கட்டும், என் மூலமா ஒரு குழந்தை பெத்துகிட்டா அது நல்ல குணங்கள் உள்ளதா இருக்கும்னு நீ நினைக்கிறே இல்லையா, அதுல எனக்கு முழு நம்பிக்கை இல்ல. ஆனாலும், உன் நல்ல மனசு எனக்குப் பிடிச்சிருக்கு"  என்று சொல்லி ஆனந்தியின் முக பாவனையை ஆராயத் தலைப்பட்டான் குமரேசன்.

மௌனமாக வீட்டு வாசலை வெறித்தவாறு இருந்தாள் அவள்.

அவன் தொடர்ந்தான். "நீ நினைக்கிற மாதிரி குழந்தையின் குணத்துக்கு மரபணு காரணமாக இருந்தாலும், பெற்றோர் அதை வளர்க்கிற முறையும், அது ஆளான பிறகு வளர்கிற சூழ்நிலையும்தான் அதன் குணத்தை உருவாக்குதுன்னு சொல்லலாம். அதனால, வசதி இருந்தா ஒரு மருத்துவரை அணுகிச் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெத்துக்கலாம். வசதி இல்லேன்னா, அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். தீர யோசனை பண்ணி ஒரு முடிவெடு" என்றான் குமரேசன்.

மௌனம் கலைந்தாள் ஆனந்தி.

உடல் சுகத்துக்கு மட்டும் நீங்க என்னைத் தேடி வந்ததில்ல. நோய்வாய்ப்பட்டு ஒரு மாதம் போல மருத்துவமனையில் இருந்தபோது அதுக்கான செலவை நீங்கதான் ஏத்துகிட்டீங்க. உள்ளூர் ரவுடிகள் எனக்குத் தொல்லை கொடுத்தபோது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது, அவங்களை எச்சரிக்கை பண்ணுறதுன்னு பல வகையிலும் எனக்கு ஆதரவா இருந்தீங்க. அதனால, உங்க முன்னாள் மனைவிக்கு எப்படியோ, என்னளவில் நீங்க ரொம்ப யோக்கியமானவர்தான். இதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன். என் முடிவிலேயும் எந்த மாற்றமும் இல்லை.....

.....உங்க பதிலுக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பேன். அது எனக்குச் சாதகமானதா இருந்தா ரொம்பவே சந்தோசப்படுவேன்" என்று சொல்லி முடித்தாள்.

எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். அப்புறம் ஒரு நாள் சந்திப்போம்" என்று விடைபெற்றான் குமரேசன்.

ஒரு மாதம் போல் கழிந்த நிலையில் ஆனந்தியைச் சந்தித்தான்.

“நான் வேலை பார்க்குற நிறுவனம் என்னைச் சென்னைக் கிளைக்கு மாறுதல் பண்ணியிருக்கு. உன் அம்மாவை அழைச்சிட்டு என்னோடு வந்துடு. உனக்கு நான் தாலி கட்டினால் ஆணாதிக்கக் குணம் தலைதூக்கும். அதனால, நல்ல நண்பர்களாகவே சேர்ந்து வாழ்வோம். ஒருத்தருக்கொருத்தர் துரோகம் செய்யாம வாழ முயற்சிக்கலாம். பிடிக்கலேன்னா பிரிஞ்சுடலாம்....."

கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்து பேசினான் குமரேசன்.

".....தையல் தொழில் தெரியும்னு சொல்லியிருக்கே. ஒரு மிஷின் வாங்கிடலாம்; கடை நடத்த வசதியா ஒரு வீடு பார்த்துடுவோம். நீயும் உன் சொந்தக் காலில் நிற்கலாம்.

குழந்தை பிறந்தா அதுக்குப் பாசமுள்ள பெற்றோரா இருப்போம்; நல்ல புத்திசாலியா வளர்ப்போம்.

எப்பவும் நல்லதே நடக்கும்னு நம்புவோம். சம்மதம்னா புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனி" -சொல்லி முடித்துத் திடமானதொரு பார்வையை ஆனந்தி மீது படரவிட்டான் குமரேசன்.

வாய் திறந்து பேசவில்லை ஆனந்தி; கண்களில் ததும்பும் கண்ணீர்த்துளிகளில் அவளின் சம்மதம் தெரிந்தது.

=======================================================================