செவ்வாய், 21 ஜூன், 2022

'Sound-transmission-through-bones'... காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பதிவு!

பொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக்காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். 'காக்ளியா' என்ற இடத்தில் அது மின்காந்த அலையாக மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். மூளையில் காதுக்கான பிரத்யேகப் பகுதியில், அந்த ஒலி உணரப்படுகிறது.

காற்றுடன் கலந்து செவிக்குள் நுழையும் ஒலியானது, உள்காதில் இருக்கும் காக்ளியா என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்குச் செல்கிறது. அங்கிருந்து செவிப்பறை மூலம் ஒலியானது நரம்புகள் வழியாகக் கடத்தப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்படுகிறது.

நாம் பேசும்போது, நம் பேச்சின் ஒரு பகுதி நம் மூளைக்கு எலும்புகள் வழியாகவே சென்று சேர்கிறது[என்பது நாம் அறியாத தகவல்]. இப்படி எலும்புகள் மூலம் ஒலி கடத்தப்படுவதை எலும்பு ஒலிக்கடத்தல் என்கிறார்கள்.

ஒலியை அதிர்வுகளாக மாற்றி தலையில் எலும்புகளுக்குக் கொடுத்து அதிரவைத்தாலும் ஒலி கேட்கும். இந்தத் தொழில்நுட்பத்தில் இசை கேட்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், விலை சற்று அதிகம். காதுக்கு முன்புறம் கீழ்த்தாடை எலும்புகள் வந்து சேருமிடத்தில் அவை பொருத்தப்பட்டு தாடை எலும்பு வழியாக காக்ளியா பகுதிக்குத் தகவல் செல்லும்.

செவிக்குழாயில் குறைபாடு, செவிப்பறையில் குறைபாடு, ஒலியைக் கடத்தும் நரம்புகளில் குறைபாடு என இந்த மூன்று வகையான குறைபாடுகள் இருந்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும்.

செவிக் குழாயிலேயே பாதிப்பு இருந்தால் உட்புகும் ஒலியானது தடுக்கப்பட்டுச் செவிப்பறையை அடைதல் சாத்தியம் இல்லாமல் போகும்.

செவிப்பறையில் பாதிப்பு இருந்தால், காதுக் குழாய் வழியாகச் செலும் ஒலியானது செவிப்பறையில் மோதி அதிர்வுகளை உண்டுபண்ணுவது  நடைபெறாது.

காதுக் குழாயிலும், செவிப்பறையிலும் பழுது ஏதும் இல்லாமலிருந்து, நரம்புகளில் மட்டும் கோளாறு இருந்தாலும்.....

உள்நுழைந்த ஒலி செவிப்பறையில் மோதி அதிர்வுகளை ஏற்படுத்தியபோதும், அவ்வொலியானது நரம்புகளால் கடத்தப்படுவதில்லை; மூளைக்குச் சென்று சேர்வதும் இல்லை. 

இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எலும்புகள் மூலம் ஒலி செலுத்தும் உபகரணங்களைக் கொண்டு கேட்கும் திறனைத் திரும்பப்பெற வைக்கலாம் என்கிறார்கள்  உடல்கூறு மருத்துவர்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் கருவிகள் காதுக்குள் பொருத்தப்படுவதில்லை.

காதுக்குள் இது பொருத்தப்படாததால், கருவியைப் பொருத்திக்கொண்டவரால் சுற்றுப்புற ஒலிகளைக் கேட்க முடியும் என்பதோடு பிறருடன் தொடர்புகொண்டு உரையாடவும் முடியும்.

சமீபகாலமாக மேலை நாடுகளில் மாரத்தான் ஓட்டக்காரர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்கள் ஆகியோரிடையேயும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்கிறார்கள்.

புகழ்பெற்ற இசை மேதை பீத்தோவன், கேட்கும் திறனை இழந்ததும் தன் பியானோவில் ஒரு இரும்புக் கம்பியை இணைத்து அதைப் பல்லில் கடித்துக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இசையமைத்ததாகச் சொல்லப்படுவதும் ஈண்டு அறியத்தக்கதாகும்.

கேட்புத் திறன் பாதிக்கப்பட்ட எளியவர்களுக்கும்[இவர்களில் நானும் ஒருவன் ஹி... ஹி... ஹி!!!] பயன்படும் வகையில் காதுக் கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வருதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

ஆதாரம்: https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2022/02/22210205/Sound-transmission-through-bones.vpf  

=====================================================================================