அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 20 ஜூன், 2022

'சாகாவரம்' சாத்தியமா? எப்போது?!

நிறம், ஞாபகத்திறன், பார்வை, எலும்புகளுக்கான ஊட்டச்சத்து என்று உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூலமாக இருப்பவை அணுக்களே. அவை தம்மைப் புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தினால் ஓர் உறுப்புகூடச் செயல்படாது. 

அந்தப் புதுப்பித்தல் திறன் குறைவதால்தான் முதுமையை எய்துகிறோம். அந்தத் திறனை அதிகரிக்க முடியுமா?

இது குறித்து அயராமல் ஆய்வு நிகழ்த்துபவர்கள் அறிவியல் அறிஞர்கள். அவர்கள் இந்நாள்வரை கண்டறிந்த உண்மைகளின்படி மேற்கண்ட கேள்விக்கான பதில்:

நமது மரபணுக்கள் நீளமான அமைப்புகொண்டவை. 

ஒரு மரபணுவை நுண்ணோக்கி மூலம் உற்றுநோக்கினால், இரண்டு பக்கங்களிலும் வெள்ளையாகவும் பளபளப்பாகவும் ஒன்று தெரியும். அந்த ஒன்றுக்குப் பெயர் டெலோமியர் (Telomere). 

அனைத்து மரபணுக்களிலும் இந்த 'டொலோமியர்கள்' உள்ளன.

மரபணுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பவை இவைதான்.

உடம்பானது தொடர்ந்து செயல்படுவதால் அனைத்து அணுக்களுமே தேய்வுக்கு உள்ளாகின்றன.

மற்ற அணுக்களைப் போலவே மரபணுக்களும், 'டி என் ஏ'க்களும், குரோமோசோம்களும் தொடர்ந்து செயல்படுவதால் அவையும் தேய்மானம் அடைபவைதான். 

மேற்கண்டவற்றில், மரபுசார்ந்த பல தகவல்கள்  சேமிக்கப்பட்டிருக்கும்.

இவை தேய்மானம்[சேதம்] அடையும்போது அவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் மரபு சார்ந்த தகவல்கள் சேதம் அடைகின்றன. அடைவதால் முதுமையை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம்.

நமக்கு வயதாகும்போது, இவற்றைப் பாதுகாக்கிற டொலோமியர்களும்கூட அணுக்களைப் போலவே தேய்மானதுக்கு உள்ளாகிப் பலவீனம் அடைகின்றன. பலவீனம் அடைவதோடு இவை அழியவும் செய்யும்.

இந்த இக்கட்டான நிலையில், அதாவது, இவையும் டொலோமியர்களும் பலவீனம் ஆகும் நிலையில், நமக்குத் தக்க சமயத்தில் உதவும் உற்ற துணைவனாக இருப்பது 'டெலோமிரேஸ்'(Telomerase) என்னும் என்ஸைம்[இங்கு, டொலோமியர் வேறு, Telomerase  வேறு என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்].

இந்த இயக்குநீர்[என்ஸைம்], டி.என்.ஏ அழியும் நிலைக்குத் தள்ளப்படும்போது, அழியாமலிருக்கும் டி.என்.ஏ. வைத் தேர்வு செய்து அதன் ஒரு பக்கத்தில் ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொண்டு, அழியவிருக்கும் 'டி என் ஏ'விலுள்ள தகவல்களைக் கடத்தி ஒரு புதிய 'டி என் ஏ' உருவாக்குகிறது.

ஆக, ஒரு பக்கம் 'டி என் ஏ'வின் அழிவு நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில் புதிய 'டி என் ஏ' உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இதையே 'அணு புதுப்பித்தல்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

அழியும் டி.என்.ஏ-விலிருக்கும் அனைத்துத் தகவல்களும் புதிய டி.என்.ஏ-வாக மாறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இது ஆர்.என்.ஏ-விற்குள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படுவது முடிவு பெறும்வரை, இரண்டையும் இணைத்துப் பிடித்துக்கொண்டு கச்சிதமாகப் புதிய மரபணுவை உருவாக்கிவிடுகிற இந்த இயக்குநீரின்[டெலோமிரேஸ்] செயல்பாடு வியக்கத்தக்கதாகும். 

இந்த்ச் செயல்பாடு நிகழ்வதால்தான், உடல் இருக்கும்வரை உடலின் டி.என்.ஏ-க்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

அழிவற்ற இந்த டெலோமிரேஸ்கள், உடலின் அனைத்து அணுக்களிலும் செயல்படுவதில்லை. மரபணுக்கள் மற்றும் இனப்பெருக்கத்திற்கான உயிரணுக்களில் மட்டுமே அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏதோவொரு காரணத்தால் மற்ற சாதாரண அணுக்கள் இந்த டெலோமிரேஸ்களைத் தங்களுக்குள் அனுமதிப்பதில்லை. ஆனால், புற்றுநோய் அணுக்கள் இவற்றை அபரிமிதமாக ஏற்றுக்கொள்வதால் அவை சுலபமாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.

சிகிச்சையின் மூலமும், மருந்துகளின் மூலமும் டெலோமிரேஸ்கள் புற்றுநோய் அணுக்களோடு சேர்வதைத் தடைசெய்தால், அவற்றின் வளர்ச்சியைத் தடுத்து அழித்துவிடலாம். அதன்மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேலும் எளிமைப்படுத்த முடியும். இதைப்பற்றிய ஆராய்ச்சியின்போது மருத்துவர்கள் மற்றுமொரு பரிசோதனையும் முயற்சி செய்தனர். அதுதான் முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான திறவுகோலாக அமைந்துள்ளது. 'புற்றுநோய் அணுக்களோடு சேராமல் டெலோமிராஸ்களைத் தடுக்க முடியுமானால், மற்ற அணுக்களோடு அவற்றை ஏன் சேர்க்க முடியாது?' என்று கேள்வி எழுப்பினார்கள்; ஆய்வு மேற்கொண்டார்கள்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் 'யினான் சென்' தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகள் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகின. 

அந்த ஆய்வில், டெலோமிராஸ்களைத் சாதாரண அணுக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணித்து ஆய்வுசெய்ததில் அவை அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டன. ஆனால், அது ஏன் தானாக[திணிக்கப்படாமல்] ஏற்றுக்கொள்வதில்லை என்பதைக் கண்டறியாமல் இந்த ஆராய்ச்சி முழுமையடையாது. என்பதை அறிந்தார்கள். அது ஏனென்று தெரிந்தால்தான், அந்தத் தடையை உடைத்துச் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அணுக்களைச் சீரமைக்க முடியும். அப்படிச் செய்துவிட்டால், முதுமையற்ற வாழ்வை மட்டுமல்ல அழிவற்ற வாழ்வை அதாவது சாகாவரம் கூடப் பெறமுடியும் என்று சொல்கிறார்கள்.

டெலோமிரேஸ்கள் மூலம் இளமையைத் தக்க வைக்க முடியும் என்றும், இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்றும் நிரூபித்த அவர்களுடைய ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து மரபணு ஆராய்ச்சித் துறையில் இதுகுறித்த ஆய்வு தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இதே ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் எலிகளின் டி.என்.ஏ-க்களில் செலுத்திச் செய்த பரிசோதனையில், எலிகளுடைய அயுட்காலம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற ஆய்விதழில் அதுகுறித்த ஆய்வுக்கட்டுரையும் வெளியாகியுள்ளது.

உண்மையில் சாகாவரம் என்பது சாத்தியமா? பொறுத்திருந்து பார்ப்போம். கேள்விகள் உண்டென்றால் விடைகளும் இருக்கத்தானே செய்யும். ஆனால், அந்த விடை நம் எதிர்காலத்திற்கு நல்லதா, என்ற துணைக் கேள்விக்கும் விடை தேடியாக வேண்டும்.

குறிப்பு:

விகடனில் வெளியான இது தொடர்பான கட்டுரை மிகப் பெரியது. அணுக்கள் புதுப்பிக்கப்படுதலுக்கு உரிய தகவல்களை மட்டும் ஒருங்கிணைத்துச் சுருங்கிய வடிவிலான இப்பதிவை உருவாக்கியுள்ளேன். விகடனுக்கு நன்றி.

======================================================================================https://www.vikatan.com/science/inventions/can-we-stay-young-forever