அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 18 ஜூன், 2022

ஜக்கி வாசுதேவ் யோகியா, சுகபோகியா, ஞானியா, கடவுள்களின் குருவா?... அடையாளப்படுத்துவது அரசின் கடமை!

வெறும் யோகா மாஸ்டராகக் கோவை வந்த ஜக்கிக்கு இன்று வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அறக்கட்டளையின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்து; சொகுசுக் கார்கள்; கோடிகளில் வாங்கிய ஹெலிகாப்டர். 

யோகா சொல்லிக் கொடுத்தா இவ்வளவு சம்பாதித்தார்?

நன்கொடையில் வசூலானது என்றால், அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள் யாரெல்லாம்? எதற்காகக் கொடுத்தார்கள்? 

மக்கள் நலம் நாடுவோர் கேட்கிறார்கள். ஜக்கியிடமிருந்து நேரடியான பதில் இன்றுவரை இல்லை.

துறவிகள் என்னும் பெயரில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் நிரந்தரமாக அங்கே தங்கியிருப்பதாகத் தெரிகிறது. எல்லோரும் குடு குடு கிழவிகள் அல்ல; வாலிப வயசுக்காரிகள்.

அனைத்திற்கும் அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறாரா ஜக்கி?

அவர் முற்றும் துறந்த முனிவராயினும் அரசின் அனுமதி அவசியம்.

அண்டை அயலில் வாழும் உயிரினங்கள் அஞ்சி ஓட, வெள்ளியங்கிரி மலைத் தொடரே அதிரும் வகையில், 'நவராத்திரி விழா' என்னும் பெயரில் ஆட்டம்பாட்டம், கூத்து, கும்மாளம் எல்லாம் நடக்கிறது ஈஷா மையத்தில். இதற்கெல்லாம் அரசு அனுமதி வழங்கியிருக்கிறதா?

இந்த விழாவில் கவர்ச்சி நடிகைகள்கூடக் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கலாம். ஆனால், வாலிப உள்ளங்களைச் சனப்படுத்துவதால் அவர்களின் வரவு தவிர்க்கப்படுதல் வேண்டும் என்பது நம் எண்ணம்.

ஆக.....

ஈஷா யோகா மையம் பொதுமக்கள் புழங்கும் இடம் என்பதால் அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை முறைப்படி அரசின் பிரதிநிதிகள் கண்காணிப்பது அவசியம்.

உரிய முறையில் கண்காணிக்கிறார்களா?

"இல்லை" என்றால், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிற இந்த மையத்தில் ஜக்கிக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது ஏன்? எப்படி?

கேள்வி கேட்கும் ஊடகக்காரர்களை, "இங்கே அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறது; அதிகாரிகள் இருக்கிறார்கள். நீங்கள் யார் கேள்வி எழுப்ப?" என்று மிரட்டுகிறார் இவர்.

ஆன்மிகம் வளர்க்கிறேன், காடு வளர்க்கிறேன், மண் வளத்தைப் பாதுகாக்கிறேன் என்று உலகறிய விளம்பரம் செய்து உயர் ரக வாகனங்களிலும், ஹெலிகாப்டரிலும் உலகம் சுற்றிவிட்டு வருகிறார். இந்த நாட்டின் பிரதமரே வரவேற்றுப் பாராட்டுகிறார்.

இவரின் அறிவிப்பு எல்லாமே வெறும் வாய்ச் சவடால்தான். பயன் ஏதும் விளைந்தததாக அறியப்படவில்லை.

அழகழகாகவும் ஆடம்பரமாகவும் உடை உடுத்துகிறார்; பிரபல நடிகைகளைத் தன்னுடன் மேடையில் அமர்த்தி, ஜாலியாக உரையாடுகிறார். வெட்கப்பட்டு அந்த நடிகைகள் இவரைப் போலவே குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பது காண்போர் மனங்களை மயக்குகிறது; கெடுக்கிறது.

வெகு வேகமாக இவர் பேசும் ஆங்கிலம், இவர் பெரிதாக ஏதோ தத்துவம் பேசுகிறார் என்று நம்ப வைக்கிறது.

சுருங்கச் சொன்னால்.....

"தனக்குத் தானே 'சத்குரு' என்று வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டு, மனம்போன போக்கில் பேசுகிற இவர் எப்படி இந்த அளவுக்கு வசதி படைத்தவர் ஆனார்?" என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் மதி மயங்குகிறார்கள் நம் மக்கள். எனவே.....

ஜக்கி பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் என்பதால், மேற்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதோடு, ஜக்கியை மக்களுக்கு முழுமையாக அடையாளப்படுத்துவது அரசின் கடமையாகும்.

அரசு செய்யுமா? 
             
                                            *   *   *   *   *
ஜக்கி-சமந்தா நேர்காணல்... காணொலி: