'காளிதேவி'யின் பரம பக்தரான ராமகிருஷ்ண பரமஹம்சர் என்னும் ஞானி கடவுளை நேரில் கண்டவர் என்பதாக, ஆன்மிகவாதிகளால் காலங்காலமாகச் செய்யப்படும் பரப்புரை நம்மில் பெரும்பாலோர் அறிந்ததே.
மோசஸ், புனித பால் முதலானோர் கடவுளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.
அதிசய நிகழ்வாகக் கருதப்படும் அந்நிகழ்வுகள் உண்மையானவையா என்னும் கேள்விக்கு இன்றைய அறிவியலறிஞர்கள் விடை சொல்லியிருக்கிறார்கள்.
'வென் திகே' என்னும் கிறித்தவப் பெண், "நான்தான் ஏசுவைப் பெற்றெடுத்தேன்" என்று சொன்னதாகவும் ஒரு செய்தி உலக அளவில் உலா வந்ததுண்டு.
மேற்கண்ட நிகழ்வுகளை இன்றளவும் நம்புகிறவர்கள் உளர். இதை மறுத்துரைக்கிறது இன்றைய அறிவியல்.
எப்படி?
"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்'[Temporal Lobe] என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.
மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுமாறாகச் செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான 'ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
ஆன்மிகர்கள் என்றில்லை, இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 'ருடி அபால்டர்' என்ற ஒரு நாத்திகர்கூட, உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானாராம்.
'செவன்த் டே அட்வன்டிஸ்ட்' பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான 'எல்லன் ஒயி' என்ற பெண்ணுக்கு(1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது[இதற்கு ஆதாரமும் உள்ளது]. "இதன் பிறகுதான் ஏசு அவர் முன் 'தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ்.
மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீகச் சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.
"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மேற்கண்டவாறான உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
ஒருவேளை மூளையில் கடவுள் குடியிருக்கும்'(God spot) இந்தப் பகுதியை அறுத்து அகற்றுவோமானால், அந்த அறுவைச் சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்?
அதனை, வாசக்டமி போல 'காடெக்டமி'[Godectomy] என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாகக் குறிப்பிட்டாராம் இந்த அறிவியலறிஞர்!. .https://134804.activeboard.com/t48934696/topic-48934696/