திங்கள், 6 ஜூன், 2022

புரியவே புரியாத 'பஞ்சபூதங்கள்'!!!

ந்த உலகம் பஞ்சபூதச் சேர்க்கையால் ஆனது. இந்த உடலும் பஞ்சபூதச் சேர்க்கையால் ஆனதுதான் என்று பரம்பரையாகச் சொல்லி வருகின்றனர். 

'பூதம்' என்பதற்கு இந்நாள்வரை சரியான விளக்கம் சொல்லப்படவில்லை. விஞ்ஞானிகள்கூட ஏதும் சொன்னதாக அறியப்படவில்லை.

'elements' எனப்படும் தனிமங்களுடன் இதைத் தொடர்புபடுத்துவார் உளர். அது தவறு.

பஞ்சபூதம் என்பதே தவறான ஒரு சொற்பயன்பாடு['பூதம் என்னும் வடசொல்லுக்கு[?] மிகச் சரியான பொருள்வரையறை செய்தவரும் இலர்].

1. நிலம், 2. நீர், 3. காற்று, 4. நெருப்பு, 5. வான் என்னும் ஐந்தும் சேர்ந்தே உலகமும் உடலும் உருவாகின்றன என்றால், இந்த ஐந்தும் தனிப் பொருட்களாக(தனிமங்களாக) இருத்தல் வேண்டும். இவை அவ்வாறு இல்லை. 

உரிய விளக்கங்கள் பின்வருமாறு:

நீர்: 

ஹைட்ரஜன்+ஆக்ஸிஜன் என்ற இரண்டு வாயுக்களும் ஒன்றிணைந்து அழுத்தத்திற்கு உட்படும்போது நீர் உருவாகிறது. ஆக, நீர் என்பது ஒரு சேர்மம்; தனிப் பொருள்[தனிமம்] அல்ல.

காற்று: 

இதுவும் ஒரு சேர்மமே. இதில் ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் என்று பல வாயுக்கள் அடங்கியுள்ளன. 

நிலம்: 

இதுவும் ஒரு தனிப் பொருள் அல்ல. இதில், மண், எண்ணெய்ப் பொருட்கள் என்று எண்ணற்ற கனிமப் பொருட்கள் உள்ளன. 

நெருப்பு:

இது பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றல்[உரசுவதன் வெளிப்பாடு]. ஆற்றல் வேறு, பொருள் வேறு. மின்னாற்றல், காந்த ஆற்றல் போல நெருப்பு என்பது வெப்ப ஆற்றல். இது தற்காலிக வெளிப்பாடு.

ஆகாயம்[விண்வெளி]: 

ஆகாயம் என்பது ஒரு பொருளே அல்ல. உயரே தெரிவதால், அது ஏதோ ஒரு திரை போன்ற ஒன்று என்று கருதப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் உயரே இல்லை.

ஆகாயம் என்றால் வெறுமை; அதாவது வெளிப்பரப்பு(வெட்டவெளி). சென்று கொண்டேயிருந்தால் எதுவும் தென்படாது. நமக்குத் தெரிகிற திரை போன்ற காட்சி நமது கண் பார்வையின் எல்லைக்குட்பட்டது. அவ்வளவே!

வெறுமை என்றால் ஒன்றும் இல்லாதது. எனவே, வெறுமை என்பது ஒரு பொருள் அல்ல.

இவ்வாறு பஞ்சபூதங்கள் என்று கூறப்படுகின்ற எந்த ஒன்றும் தனிப் பொருள் அல்ல[பேய், பிசாசு வரிசையில் இடம்பெறும் பூதம்தான் நினைவுக்கு வருகிறது]. 

இவை சேர்ந்து இந்த உடல் உருவாகிறது என்பதும், இந்த உலகம் உருவாகிறது என்பதும் மிகத் தவறான நம்பிக்கைகள் ஆகும்!

உடல் என்ன, உலகங்கள் என்ன அனைத்துமே அணுக்களால் ஆனவை என்று சொல்லிக்கொள்வதில் தவறேதும் இல்லை!

======================================================================================

நன்றி: