பெற்றெடுத்த பிள்ளைகளையும் கல்யாணம் கட்டியவனையும் துறந்து கண்டவனோடு ஓடிப்போவது, கண்டித்தால் கொலை செய்வது, தற்கொலை புரிவது என்றிவ்வாறான அசம்பாவிதங்கள் அன்றாடச் செய்தி ஆனதால், மனம் நொந்து ஊன் உறக்கமின்றி இரவு பகலாகச் சிந்தித்ததில் 'கள்ளக் காதல்"ஐ ஒழிப்பதற்கான கொஞ்சம் வழிமுறைகளை என்னால் கண்டறிய முடிந்தது.
சிறந்ததொரு சமுதாயக் கடமை என்று கருதி அவற்றைத் தொகுத்தளிக்கிறேன்.
வழிமுறைகள்:*கள்ளக் காதலர்கள் ஈருடல் ஓருயிராய் உடலுறவுச் சுகத்தில் திளைத்துக் கிடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் 'காணொலி' ஆக்கி, சமூக வலைத்தளங்களிலும் 'யூடியூப்'தளத்திலும் வெளியிடுவோருக்குப் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்றும், அவர்கள் குறித்த தகவல்கள் வெளிடப்பட மாட்டா என்றும் அரசு அறிவிக்கலாம். இந்தக் காணொலிகளைக் காணும் ஆண்களும் பெண்களும் கனவிலும் கள்ள உறவு கொள்ளத் துணிய மாட்டார்கள் என்பது 100% நிச்சயம்.
*'கள்ளக் காதலில் ஈடுபடுவோர் அடுத்தடுத்து வரும் பிறவிகளில் தெரு நாய்களாகப் பிறந்து, அந்தரங்கச் சுகம் அனுபவிக்கும்போதெல்லாம் சிறுவர்களிடம் கல்லடிபடுவார்கள்' என்று 'சத்துக்குரு' ஜக்கி[தன் முற்பிறவி பற்றிச் சொன்னவர்] போன்ற மகான்களைக் கொண்டு அறிவித்தால், அவர்களின் கோடானுகோடித் தொண்டர்கள் தங்களின் கற்பொழுக்கம் காப்பதில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்பது உறுதி.
*பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் 'பிக்பாக்கெட்' திருடர்களுக்கான பெயர்களைப் புகைப்படங்களுடன் விளம்பரம் செய்து வைத்து எச்சரிப்பது போல, அகப்பட்டுக்கொண்ட காதலர்களையும் இப்படி விளம்பரப்படுத்தினால் பொதுமக்கள் அவற்றைப் பார்த்துக் குதூகளிப்பதுடன், விழிப்புணர்வும் பெறுவார்கள்.
*நம் கடவுளர்கள் பலரின் கள்ள உறவுகளையும் அவற்றால் நேர்ந்த விபரீதங்களையும் அப்பட்டமாகப் படம் பிடிக்கும் புராண இதிகாசக் கதைகளை நூல்களாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கினால் அவற்றிலிருந்து இவர்கள் நிறையவே பாடம் கற்பார்கள்; கள்ள உறவுக் கொடுமைகள் வெகுவாகக் குறையும்.
*கள்ளக் காதல் குற்றங்களில்[கடத்தல், வன்புணர்வு, அடிதடி, வெட்டு, குத்து, கொலை போன்றவை] ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்களின் துயர அனுபவங்களைச் 'சிறப்பு நேர்காணல்கள்' மூலம் பதிவு செய்து, அவற்றை ஊடகங்கள் மூலம் பெருமளவிலான மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம்.
மேற்கண்ட தந்திர உத்திகளைக் கையாண்டும் எதிர்பார்த்த/பார்க்கும் பலன்கள் கிட்டவில்லையெனின்.....
*மிகப் பல ஆண்டுகள் கள்ள உறவில் ஈடுபட்டுச் சாதனை நிகழ்த்தியவர்களை அடையாளம் கண்டு, விழாக்கள் எடுத்து அவர்களைச் சிறப்பித்தால், நல்ல உறவுக்கான மதிப்பைக் கள்ள உறவும் பெறுவதற்கான சூழல் உருவாகும்.
*கள்ள உறவில் ஈடுபடுவது குற்றச் செயலல்ல என்று நீதிமன்ற ஒப்புதலுடன் அரசாங்கமே அறிவிக்கலாம். அவ்வாறு செய்வதோடு, 'கள்ள உறவென்ன, நல்ல உறவென்ன இரண்டுமே அசிங்கமான உறவுகள்தான்' என்பது போன்ற தத்துவப் போதனைகளைப் பரப்புரை செய்தால், கள்ள உறவைப் பெரிய குற்றமாகக் கருதாத நிலை உருவாகும்; குற்றச் செயல்கள் குறையும்.
*ஆசை இருந்தும் 'அந்த' உறவில் ஈடுபடத் தயங்கும் 'தில்' இல்லாத ஆண்களுக்காக, 'சிக்கிக்கொள்ளாமல் 'கள்ளக் காதல் செய்வது எப்படி?' என்று நூல் வெளியிட்டு 'மலிவு' விலையில் விற்பனை செய்தால், க.கா.குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து, இதைக் குற்றமாகக் கருதுவோர் எண்ணிக்கை குறைய, இதனால் விளையும் விபரீதங்கள் மட்டுப்படும்.
* * * * *
மேற்கண்ட ஆலோசனைகள் அடியேனின் 'சிறுமதி'யில் உதித்தவை. குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருள்க! ஹி... ஹி... ஹி!!!
=====================================================================================