அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 24 ஜூலை, 2022

'கதை'ன்னா புரிகிற மாதிரி சொல்லுங்க ரஜினி!

 ன்புக்கும் மரியாதைக்கும் உரிய 'உச்ச' நடிகர் ரஜினி அவர்களே,


சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற 'யோகதா சத்' சங்கத்தினுடைய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுக்கிடையே கதையும் சொல்லியிருக்கிறீர்கள்[https://www.bbc.com/tamil/india-62277476].

'ஒரு நாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருந்தது' என்பது உங்கள் கதையின் தொடக்கம்.

இந்தத் தொடக்கம் புரிந்துகொள்ள இயலாத வகையில் என்னை மலங்க மலங்க விழிக்க வைத்தது. 

காத்தாடி தானாகவே போக்கொண்டிருந்ததா? யாருமே பறக்க விடாமல்[சிறுவர்கள் பட்டம் விடுவது போல] அதுவாகவே போவது எப்படிச் சாத்தியமாயிற்று[உங்களின் பாபா படத்தையோ, ராகவேந்திரா படத்தையோ நான் பார்த்திருந்தால் இதற்கு விடை கிடைத்திருக்குமோ என்னவோ? உங்களின் படங்களைப் பார்க்காதவர்களுக்கும் புரியும்படியாக நீங்கள் பேசியிருக்க வேண்டும்].

இது ஒருபுறம் இருக்கட்டும், கதையின் மையப் பகுதிக்கு வருவோம்.

'யோகானந்தா' என்பவர் தன் சகோதரியிடம், "அந்தக் காத்தாடியை என் கைக்கு வரவழைக்கிறேன்" என்று சொல்லி, சொல்லிவாறே செய்துகாட்டினார் என்பதும், அவரின் சகோதரி, "இது ஒரு தற்செயல் நிகழ்வுதான்" என்று மடக்கவே, மீண்டும் ஒரு காத்தாடியை அவர் தன் கைக்கு வரவழைத்துக் காட்டிப் பேரதிசயம் நிகழ்தினார் என்பதும் கதை.

இந்தக் கதையைப் 'பாபா' படத்தில் வைத்ததாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வைப்பதற்கு முன்.....

"காற்றாடியைக் கைக்கு வரவழைத்தது போல் தெருவில் போகும் ஒரு கன்னிப் பெண்ணை வரவழைத்துத் தன் மடியில் உட்கார வைக்க முடியுமா யோகானந்தாவால்?" என்றொரு கேள்வி உங்களின் மூளையில் உதிக்காமல்போனது ஏன்?

இத்தக் கதையைக் குறைந்தது ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள்[உங்களின் ரசிகர்கள் உட்பட]. இந்த அறிவியல் யுகத்திலும் இதெல்லாம் நடக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிந்தது?!

"ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள் வெளிவந்த பிறகுதான் (முறையே 1985 மற்றும் 2002 இல்) அவர்களைப் பற்றிப் பலருக்குத் தெரியவந்தது. பாபா படத்தைப் பார்த்து ஏராளமான மக்கள் யோகதாவில் உறுப்பினர்களானார்கள், சிலர் இமயமலைக்குச் சென்று அனிகேத் குகையைப் பார்வையிட்டனர்" என்று பெருமைப்பட்டிருக்கிறீர்கள்.


மக்களை மூடர்கள் ஆக்கியதற்கும் ஆக்குவதற்கும் இருப்பில் இருக்கும் கடவுள்களும் அவதாரங்களும் போதும். மேலும் இரண்டு கடவுள் அல்லது கடவுள் அவதாரங்களை அறிமுகப்படுத்தியது நீங்கள் செய்த குற்றம். இப்படியொரு குற்றத்தைச் செய்துவிட்டு அதற்காகப் பெருமைப்படுகிறீர்களே, இது நியாயமா?


உங்களின் ரசிகர்கள் இருவர் யோக சன்யாசிகளாக மாறிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.


மனிதர்கள் ஐம்புலங்களோடும் ஆறறிவோடும் பிறப்பது வாழ்க்கையை அனுபவிக்கவும், பிறருக்கு உதவி செய்து இன்புறுவதற்கும்தான். இருவரைச் சன்னியாசிகளாக[இவர்களால் யாருக்கு என்ன பயன்?] ஆக்கியது உங்களுக்குத் தப்பான செயலாகத் தோன்றவில்லையா?!


கடந்தகால நிகழ்வுகளையும் எதிர்கால வாழ்வையும் பற்றிக் கவலைப்பட்டுப் பொழுதை வீணடிக்காமல், குழந்தைகளைப் போல நிகழ்கால வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்குப் போகாமலே வாழ்ந்து முடித்து மரணத்தைத் தழுவ வேண்டும் என்றும் தாங்கள் சொன்ன அற்புதமான கருத்துகள் என்னைப் பெரிதும் மகிழ்ந்திட வைத்தன. ஆனால்.....


ஓர் ஆன்மிகவாதியாக நீங்கள் சொன்ன நம்ப முடியாத கதையும், ராகவேந்திரரையும் பாபாவையும் தொடர்புபடுத்திச் சொன்ன கருத்துகளும் அந்த மகிழ்ச்சியை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிட்டன.


ரஜியான தங்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையும் தன்னடக்கமும், ஒரு நடிகராக வெளிப்படுத்திய அசாத்தியத் திறமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கின்றன; உங்களின் ஆன்மிகமும் அது குறித்த உரைகளும் முற்றிலும் விதிவிலக்கானவை.

===========================================================================