வறுமையின் காரணமாக என் குடும்பத்தினர், என்னைவிட வயதில் மிகவும் மூத்தவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார்கள். அவருக்கு வயது 50, எனக்கு வெறும் 20 வயதுதான்.
என் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே என் கணவர் இறந்துவிட்டார். குழந்தையுடன் ஆதரவற்ற சூழலில் தவித்தேன். மனம் விரும்பி எனக்கு உதவும் நிலையில் உற்றார் உறவினர் என்று எவரும் இல்லை.
ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்ததால், ஏதாவது கடைகண்ணிகளில் வேலை செய்து பிழைத்துவிடலாம் என்று நம்பினேன். வேலை தேடிச் சென்ற இடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானபோது அந்த நம்பிக்கை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது.
ஒரு கட்டத்தில் என் குழந்தைக்குப் பால், பிஸ்கட் வாங்குவதற்குக் காசில்லாமல் மனம் துவண்டுபோன நிலையில், பாலியல் தொழிலில் அனுபவமுள்ள ஒரு நடுத்தர வயதுப் பெண் உதவ முன்வந்தார்.
வேறு வழியில்லாமல்,அவரின் யோசனைக்கு இணங்கி இத்தொழிலில் ஈடுபட்டேன்.
ஒரு நபரிடம் உடல் உறவு வைத்துக்கொண்டால் உடனே பணம் கிடைக்கும். அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பணப் பிரச்னை இருக்காது.
வாடிக்கையாளர்களாக வந்தவர்களில் சிலரே, “என்னோடு மட்டும் இருந்துடு. காலமெல்லாம் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லி, சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டுக் காணாமல் போனவர்கள் உண்டு.
கண்ட கண்ட நேரத்தில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்து என்னோடு இருந்துவிட்டுப் பைசா கொடுக்காமல் மிரட்டிவிட்டுப் போகும் ரவுடிகளை நினைத்தால் இப்போதும் மனம் நடுங்குகிறது.
இவர்களிடமிருந்து தப்பிக்க, ‘கணவர் போல’ ஒருவர் வாய்த்தால் அவருடனேயே வாழ்ந்து முடித்துவிடலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை.
“காசு கொடுத்திருக்கிறேன். அதனால் நான் சொல்வதைச் செய்” என்பார்கள். உடலுறவு கொள்ளும் நேரத்தில் ஆபாசமாகக் கத்தச் சொல்வார்கள், சினிமா மற்றும் பாலியல் படங்களில் வருவதைப் போல "உணர்ச்சி அதிகமாவதற்கு அசிங்கமாக ஏதாவது செய்" என வற்புறுத்துவார்கள். உண்மையில் அதுபோன்ற உட்சபட்ச உணர்வுநிலை ஒருசிலருக்கு மட்டும்தான் சாத்தியம், அதுவும் ஒரு நாளில் ஒருமுறை ஏற்படலாம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
பாலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஒருமாதிரி என்றால், அதிகமாகத் தெரிந்துகொண்டவர்கள் ஆபத்தானவர்கள்.
ஒரு சிலர், வாய்வழி உறவுக்கு வற்புறுத்துவார்கள். என் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொன்னால்கூட விடமாட்டார்கள். அதனால், ஒரு சில நாட்கள் தீவிர உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாவேன்.
“அதிகம் அனுபவப்படாத டீன் ஏஜ் பொண்ணுக இருந்தா ஏற்பாடு செய். ரேட் ஒரு பொருட்டல்ல” என்று என்னிடமே கேட்பவர்களும் உண்டு. மனசு நொந்து புழுங்கிப்போய், தொழிலையே விட்டுவிடலாம் என்றுகூட நினத்திருக்கிறேன். உயிர் பிழைக்கவும், இருந்த ஒரு மகனை வளர்த்து ஆளாக்கவும் வழியில்லாததால் இந்தச் சாக்கடையிலிருந்து மீளவே முடியவில்லை.
மகன் வளர்ந்து ஆளாக்கிக்கொண்டிருந்தான். நான் செய்யும் தொழில் மகனுக்குத் தெரிந்துவிடாமலிருக்க வேண்டுமே என்ற புதிய கவலைக்கும் உள்ளானேன்.
பலமுறை, நானோ, சக தோழிகள் யாராவதோ காவல்துறையிடம் மாட்டிக்கொண்டால், நாங்கள் உதவி கேட்கும் வழக்கறிஞர், கைது செய்த காவலர்கள் எனப் பலரும் எங்களிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டால்தான், வழக்கிலிருந்து விடுதலை பெற முடியும்.
ஆரம்பத்தில் உறவு வைத்துக்கொள்ளும்போது அதிகம் உணர்ச்சிவசப்பட்டேன் என்பது உண்மைதான். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, வயித்துக்கு சோறு போடுகிற ஒரு சில மணிநேர வேலை இது என்றளவில் என் மனம் மறத்துப்போய்விட்டது.
இப்போதும், இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில்தான் என் மகனைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொழிலில் சிக்கிக்கொண்டால் இதிலிருந்து வெளியேறுவது சவால்தான்.
ஒரு சிலருக்கு உண்மையில் பாலியல் புரிதல் இருக்காது. சந்தேகம் என்ற பெயரில் ஆபாசமாக பேசுவார்கள், என்னையும் பேசச் சொல்வார்கள்.
ஒருசிலர் காண்டம் அணிந்துகொள்ள மறுப்பார்கள். இவர்களைப் போன்றவர்களைச் சமாளிப்பது இன்னும் சிரமம்தான்.
ஒரு சிலர் என் உறுப்புகளைக் காயப்படுத்தி சந்தோஷம் காண்பார்கள். தன் மனைவியிடம் செயல்படுத்த முடியாதவற்றை என்னிடம் பரிசோதிப்பார்கள். காயங்களுடன், அடுத்த கஸ்டமரிடம் செல்வதற்குக் கூச்சமாக இருக்கும். அதை அறிந்தவுடன் அந்த நபரும் மோசமாகத் திட்டி, உறவு வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது.
ஓய்வு இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தூக்கமின்மை, பால் உறுப்புகளில் வலி என உடல் உபாதைகள் ஒரு கட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கின.
இளமைப் பருவத்தை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறேன் என்பதை நான் உணர்ந்தேன். வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டேன்.
இத்தொழிலில் உள்ள பலர் இணைந்து, எங்களுக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதில் தற்போது சென்னை மற்றும் திருவள்ளூரில் 1,200 பாலியல் தொழிலாளர்களை இணைந்துள்ளார்கள்.
எச்ஐவி எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு தரும் தொண்டு நிறுவனத்திலும் வேலை செய்கிறேன். நானும் என் தோழிகளும் இணைந்து பாலியல் தொழிலில் சிக்கியுள்ள 40 பெண்களுக்குத் தமிழக அரசின் சமூக நலத்துறையிடம் பேசித் தொகுப்பு வீடுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.
சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில், வயது வந்தவர்கள், சுயவிருப்பதின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால், அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யக்கூடாது என்றும் பாலியல் தொழிலாளர்களைக் கண்ணியமாக நடத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், என்னைப் போன்ற பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதும், காவல்துறையினரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதும் குறையும். உலகத்தின் பழைய தொழில் பாலியல் தொழில் என்பார்கள். அந்தத் தொழிலுக்கு இப்போது நீதி வழங்க நீதிமன்றம் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.