செவ்வாய், 5 ஜூலை, 2022

வேதமாம் வேதம்... வெங்காய வேதம்!

பரிணாம வளர்ச்சியால் மனிதர்களுக்கு வாய்த்த  ஆறாம் அறிவை வளரவிடாமல் தடுத்ததில் மதவாதிகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.

அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவி 'வேதம்'.

மதங்கள் தோற்றுவிக்கப்பட்டபோதோ, சில காலம் கழித்தோ, அவற்றின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள், கடவுள் அருளியதாகச் சொல்லித் தத்தமக்கென ஒரு நூலை எழுதி வைத்துக்கொண்டு,  'வேதம்' என்று பெயர் சூட்டித் தொடர் பரப்புரை மூலம் அவற்றைப் புனிதமானவை ஆக்கிவிட்டார்கள்.

"கடவுள் என்னும் ஒருவர் இருப்பதே உறுதி செய்யப்படாத நிலையில், மனிதரால் படைக்கப்பட்டவற்றை[வேதங்கள்]  கடவுள் வழங்கியதாகச் சொல்கிறீர்களே, இது நியாயமா?" என்று எவரும் கேள்வி எழுப்புவதில்லை.

காரணம், கடவுள் தண்டிப்பார் என்னும் பயம். அந்த அளவுக்கு மக்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள்.

மரணங்கள் இயற்கையானவை.

இயற்கை மரணங்கள் நிகழ்ந்து தொலைக்கட்டும். இயற்கைக்கு மாறாக.....

தீராத நோய்களாலும், மதக் கலவரங்களாலும், வறுமையாலும் கோடானுகோடி மக்கள்[பிற உயிர்கள் உட்பட] சித்திரவதைப்பட்டுச் செத்தொழிந்திருக்கிறார்கள்; செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வேத மந்திரங்களை ஓதி இந்த மதவாதிகள் இவற்றைத் தடுத்து நிறுத்தாதது ஏன்?"

விசேச நாட்களில் மந்திரம் ஓதுகிறார்கள். தினம் தினம் ஓதுகிறார்கள்.

இப்படி இவர்கள் ஓது ஓது என்று ஓதிச் சாதித்ததது என்ன?

ஒரு வெங்காயமும் இல்லை.

கொஞ்சம் சிந்தித்தால், இப்படி வேதங்களை வெங்காயத்தோடு ஒப்பிடுவதே தவறு என்பது புரியும். ஏனென்றால். வெங்காயத்தால் விளையும் பயன்கள் ஏராளம்.


ஒரு பட்டியல்:


*வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

  1. *முருங்கைக்காயைவிட அதிகப் பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
  2. *குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் வலியைப் போக்குகிறது. அழற்சியை உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளையும் சிதைத்து விடுகிறது; விஷத்தையும் முறித்து விடுகிறது.
  3. *சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தப் பழக்கத்தைத் தொடர்பவர்களுக்குச் சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களைக் கரைத்து, அழற்சியைக் குறைத்துக் கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
  4. *யூரிக் அமிலம் அதிகமாகச் சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்தக் கற்கள் கரைந்துவிடும்.
  5. *முதுமையில் வரும் மூட்டு அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும், வலி குறைந்துவிடும்.
  6. *செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க வெங்காயத்தைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காகப் பயன்படுத்தலாம்.
  7. *சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
  8. *புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்கிறது.
  9. *நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  10. *வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
  11. *வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
  12. *வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.
  13. *அடிக்கடிப் புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டுவர நுரையீரல் சுத்தமாகும்.
  14. வெங்காயத்தின் பலன்களைத் தொகுத்தளித்த, Mohan kumargurumoha.blogspot.com க்கு நன்றி.