*நாம் உறும் துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் இயற்கை நிகழ்வுகளும், வாழ்க்கைச் சூழலும், சிந்தித்துச் செயல்படுவதில் உள்ள குறைபாடுகளுமே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், இவை அனைத்திற்கும் விதி, அல்லது, நாம் செய்த பாவ புண்ணியங்கள் காரணம் என நம்புகிறார்கள். இதனால் சிந்திக்கும் ஆற்றல் படிப்படியாகச் சிதைவுறுகிறது.
*தாங்க இயலாத இழப்புகளையோ, விடுபட முடியாத இடுக்கண்களையோ எதிர்கொள்ளும்போது, எல்லாம் 'அவன்' செயல் என்றெண்ணி அவனைச் சரணடைகிறார்களே அல்லாமல், அவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனத் திண்மையை மேம்படுத்திக்கொள்ள முயலுவதில்லை கடவுளை நம்புகிறவர்கள்.
*இயற்கை, எளிதில் விடுவிக்க இயலாத பல 'புதிர்'களை உள்ளடக்கியது. 'ஏன்?, எப்படி?, எப்போது?' போன்ற வினாக்களை எழுப்பி, சளைக்காமல் சிந்தித்துக்கொண்டே இருந்தால்தான் அப்புதிர்களை ஒவ்வொன்றாக விடுவிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்[மனித வாழ்வை மேம்படுத்தும் வகையிலான பல கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் நிகழ்த்தியது இவ்வகைச் சிந்தனையால்தான்]; அந்த அறிவால் தொடர் துன்பங்களைக் களைவது, ஆயுளை நீட்டிப்பது போன்ற பயன்களைப் பெறுதல் சாத்தியமாகும். எல்லாம் கடவுளின் செயல் என்று நம்புவது இம்முயற்சிக்கு வைக்கும் முற்றுப்புள்ளி ஆகும்[மிகப் பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுளைப் பொருட்படுத்தாதவர்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது].
*கடவுளைக் கொண்டாடி வழிபடுவதால் இந்நாள்வரை மக்களுக்கு எந்தவொரு நன்மையும் விளைந்ததில்லை என்பதை உணர மறுக்கிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்[தற்செயலாக விளையும் நன்மைகளைக் கடவுளின் செயல் என்று போற்றுவது வழக்கமாகியுள்ளது]. காரணம், கடவுளை நிந்தித்தால் தண்டிக்கப்படுவோம் என்னும் அச்ச உணர்வு அவர்களின் மனங்களில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான்.
*"நான் கடவுளை நேரில் பார்த்தவன்", "நனே கடவுள்", "நான் கடவுளின் குரு" என்றிப்படிப் பொய்யுரைத்துக் கோடி கோடியாய்ப் பணம் சம்பாதித்த அயோக்கியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் கடவுள் பித்துதான்.
*கடவுள் நம்பிக்கையால்தான் மதங்கள் உருவாயின என்பதும், அவை மூட்டிய கலவரங்களால் கோடிக்கணக்கான மனித உயிர்கள் பலியிடப்பட்டன என்பதும் மறக்க இயலாததும், மறக்கக்கூடாததுமான கொடூர நிகழ்வுகளாகும்.
*கடவுளை வழிபட்டால் நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கை திணிக்கப்பட்டதால், அவரைத் துதிபாடத் தம் நேரத்தையும் பொருளையும் நிறையவே செலவழித்தார்கள்/செலவழிக்கிறார்கள் மக்கள். இதனால், சக மனிதர்களுக்கு உதவும் இரக்கக் குணம் போதிய அளவுக்கு வளர்ச்சியடையவில்லை.
*இவ்வுலகம் மட்டுமல்லாது, இங்கு வாழும் பல உயிரினங்களும் மனிதருக்காகவே கடவுளால் படைக்கப்பட்டவை என்று சில மதங்கள் மக்களை நம்ப வைத்ததால், அவ்வுயிர்கள் ஈவிரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகின்றன; உணவாக்கப்படுகின்றன.
*மதவாதிகள், தங்களின் 'மத நூல்கள்[வேதங்கள்] கடவுள்களால் வழங்கப்பட்டவை என்று அன்று முதல் இன்றுவரை ஆணித்தரமானதொரு பொய்யைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி, அம்மதங்களைப் பின்பற்றுவோரை நிரந்தர மடையர்கள் ஆக்கிவிட்டார்கள். அதற்கு அவர்களுக்கு உதவிகரமாக அமைந்தது கடவுள் நம்பிக்கைதான்.
***கடவுள் நம்பிக்கையால் பெரும் தீங்குகள் விளைந்தன என்னும் மேற்கண்ட கருத்துரைகளை அலட்சியப்படுத்தி, "கடவுள் நம்பிக்கையால்தான் மக்கள் நல்லவர்களாக வாழ்கிறார்கள்; தவறு செய்ய அஞ்சுகிறார்கள்" என்று ஆன்மிகர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான நம் பதில்:
கொடூரமான குணம் வாய்ந்த உயிரினங்களுக்கிடையே, அமைதியாகவும் பிற உயிரினங்களைத் துன்புறுத்தாமலும் வாழ்கிற உயிரினங்களும் உள்ளன. மனிதர்களிலும் இப்படி வாழ்பவர்கள் உள்ளனர். இது இயற்கையாய் அமைந்த வாழ்வியல் முறையாகும். இது தவிர, மக்கள் நல்லவர்களாக வாழ்வதற்குச் சீரிய சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களும், கடவுளை முன்னிலைப்படுத்தாத சில சமயங்களின் வழிகாட்டலும் காரணங்களாக அமைந்தன என்றும் சொல்லலாம்.
எனவே, கடவுள் எனப்படுபவருக்கும் மக்கள் நல்லவர்களாக வாழ்வதற்கும் எள்ளத்தனைத் தொடர்பும் இல்லை என்பதும், கடவுள் நம்பிக்கையால் தீமைகளே மிக மிக அதிகமாக விளைகின்றன என்பதும் அறியத்தக்கனவாகும்.
===========================================================================