ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

இவர் தேசியவாதியா, தேசத் துரோகியா?!?!

வர் பெயர் மகேந்திர பட்; உத்தரகாண்ட் மாநில 'பாஜக' தலைவராம்.


"வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்களைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள்[நான் பார்த்துக்கொள்கிறேன்]" என்று 'பாஜக' தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிக்கைவிட்டு, கொடி ஏற்றத் தவறுபவர்களை இவர் மிரட்டியிருக்கிறார். இது  https://tamil.oneindia.com செய்தி[13.08.2022].

இவர் வெளிப்படையாகப் பேசியது பாராட்டுக்குரியது. சூழ்நிலை காரணமாகக் கொடி ஏற்ற இயலாதவர்கள் கொஞ்சம் நாட்களுக்கு எங்காவது ஓடி ஒளிந்துகொள்ளலாம்.

இவரைப் போல் அப்பட்டமாகப் பேசி மக்களை அலறவிடாமல், கமுக்கமாக இருந்துகொண்டு கொடி ஏற்றாதவர்களைக் குறிவைத்துத் தண்டிக்கக் காத்திருக்கும் 'பாஜக' தலைவர்கள் மற்ற மாநிலங்களிலும் இருப்பார்கள்தானே?

தேசப் பற்று உடம்பு முழுக்க ஊறிக் கிடந்தாலும், கொடியேற்றுவதை ஒரு பொருட்டாக நினைக்காதவர்கள் நாடெங்கும் இருக்கவே செய்வார்கள். மூன்று நாளென்ன, மாதத்தில் முப்பது நாட்களும் தன் வீட்டில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளும் இந்த மண்ணில் இருக்கவும்கூடும்.

இந்த மிக எளிய உண்மையைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவில்லாத ஆசாமிகளெல்லாம் ஆளும் கட்சியின் மாநிலத் தலைவராக[தலைவர்களாக] இருப்பது இந்த நாட்டுக்கு நன்மை பயக்குமா, பெரும் தீங்கு விளைவிக்குமா"

உரிய ஆதாரம் ஏதும் இல்லாமலே, பேட்டை ரவுடியைப் போல், மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய இந்த 'மகேந்திர பட்'டை எதிர்க்கட்சியினர் கண்டித்திருக்கிறார்கள்.

பலதரப்பட்டவர்களிடமிருந்து வந்த கண்டனங்கள் காரணமாக, 'பாஜக'  தொண்டர்களைத்தான் தான் கொடியேற்றும்படிக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்லிச் சமாளித்திருக்கிறார் இந்த மகேந்திர பட்.

இவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்ததாகச் செய்தி வெளியாகியிருக்கிறதே தவிர, 'பாஜக' தலைவரும் இந்த நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி அவர்களிடமிருந்து எந்தவொரு கண்டனமோ, கண்டித்துத் திருத்தும் அறிக்கையோ வெளியானதாகத் தெரியவில்லை.

"இவர் மாதிரி அடாவடித்தனமாகப் பேசும் மிரட்டல் உருட்டல் ஆசாமிகளும் தன் கட்சிக்குத் தேவைதான் என்று மோடிஜி நினைக்கிறாரோ?!" என்றொரு சந்தேகம் நம்முள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

===========================================================================

https://tamil.oneindia.com/news/india/country-won-t-trust-those-who-don-t-hoist-tricolour-in-their-homes-says-uttarakhand-bjp-chief-470644.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read