ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

வீடுதோறும் "ஜன கண மன....."!!!

ங்கிலேயரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த இனிய நாளைக் கொடி ஏற்றிக் கொண்டாடுகிறோம்.

கொடி ஏற்றும்போது நாட்டுப்பண்["ஜன கண மன..."] இசைப்பதும் மரபாக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே இந்நிகழ்வு கொண்டாடப்பட்ட நிலையில், இவ்வாண்டு வீடுதோறும் கொடி ஏற்றுதல் வேண்டும் என்று நடுவணரசு அறிவுறுத்தியுள்ளது.


வீடுதோறும் கொடி ஏற்றுவதால் நாட்டுப்பற்று வளருமா?

வளரலாம். ஆனால், எதிர்பார்க்கும் அளவுக்கு அது இராது என்பது உறுதி.

'எதற்காகக் கொடி ஏற்றுகிறோம்' என்று எண்ணிச் செயல்படுபவர்கள் எண்ணிக்கை இங்கு மிக அரிது.

நாட்டுப் பற்றை அனைவருக்கும் ஊட்டும் பணியைச் செய்யத்தான் நாட்டுப்பண்['தேசியக் கீதம்'] இயற்றப்பட்டது.

இந்திய நாட்டை நம் தாயாக உருவகித்து, நாட்டின் பல்வேறு மாநிலங்கள், மக்கள் பேசும் மொழிகள், இயற்கைச் செல்வங்கள், இங்கு வாழ்ந்து சென்ற மாமனிதர்கள் என்று பல்வகைச் சிறப்புகளையும் அவள் பெற்றிருப்பதாகச் சொல்லி வாழ்த்துவதன் மூலம் இந்திய மக்களை ஒன்றுபடுத்துகிற பணியைச் செய்கிறது நம் 'ஜன கண மன...' நாட்டுபண்[விளக்கம் அரைகுறையானது. பாடலில் உள்ள குறைபாடுகளும் களையப்படுதல் வேண்டும்].

எனவே.....

வீடுதோறும் கொடி ஏற்றியவுடன், குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் இணைந்து தேசியக் கீதம் இசைப்பது மிகவும் அவசியமான[அரசு கவனத்தில் கொள்ளுமா?] ஒன்று.

இசைத்தல் சாத்தியம். அதன் பொருளைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை.

இந்தப் பாடலை அத்தனை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்தால்[தேர்ந்த கவிஞர்களைக் கொண்டு இனிய சந்தத்துடன் மொழியாக்கம் செய்யலாம்] மட்டுமே அது சாத்தியப்படும்.

இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் நாட்டுப்பண்ணின் பொருள் புரிந்து அதனை இசைக்கும் நிலை உருவாகும். 

பொருள் புரியாதவரை, நகராட்சி, மாநகராட்சி போன்ற அரசு அமைப்புகள் வீடுதோறும் கொடி கொடுத்து 20 ரூபாய் வசூல் செய்கிறார்கள்[கடைகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு தேசியக் கொடி வாங்குகிறார்கள் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்ச் செய்தி] கொடிகளைக் கட்டி வைப்பதால் எதிர்பார்க்கும் அளவுக்குப் பயன் கிட்டாது என்பதை அரசு உணர வேண்டும்.

"இந்தியா ஒரே நாடு. பாடலை ஒரே மொழியில்['ஜன கண மன...' வங்காள மொழி]  இசைப்பதே சரியானது" என்று சொல்வது 'ஒரே நாடு, ஒரே மொழி' என்று சொல்லித் திரிவது போன்றதொரு ஏமாற்று வேலை ஆகும்[வங்காள தேசம் உருவான பிறகு, உருது மொழியில் பாடப்பட்ட அந்நாட்டு நாட்டுப்பண் வங்காள மொழியில் பாடப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது].

வங்காள மொழியில் பாடப்படும் கீதத்தை மாநில மொழிகளில் பாடுவதால் வங்காள மொழிக்கு இழிவு ஏதும் நேர்ந்துவிடாது. அதைப் போற்றிக் காப்பது அந்த மாநில மக்களின் கடமை.

எனவே,

அடுத்துவரும் குடியரசு நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாகவே, தேசியக் கீதம் எனப்படும் நாட்டுப்பண்ணை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யும் பணியை நடுவணரசு செய்து முடித்தல் வேண்டும் என்பது தாய்மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்டோரின் மேலான விருப்பம் ஆகும்.

வாழ்க இந்தியத் திருநாடு! வளர்க அனைத்து மாநில மொழிகளும் மக்களும்!!
===========================================================================