செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

கேட்கப்படாத கேள்விகளும் தடுக்கப்படாத பிள்ளையார் சதுர்த்தியும்!!!


"பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது, தன் அழுக்கைத் திரட்டிப் பொம்மையாக்கிக் அந்த ஆற்றில் எறிய, அது யானைத்தலை கொண்ட விநாயகராக வெளிப்பட்டது" என்று அன்று ஒருவன் கதை சொன்னபோதே.....

"மனிதர்களுக்கு உள்ளதுபோல் கடவுள்களுக்கும் உடம்பு உண்டா? அதில் அழுக்குச் சேருமா? சேகரித்த அழுக்கை உருட்டி ஆற்றில் வீசினால் அது கரையுமே தவிர, யானைத் தலை கொண்ட மனிதனாக மாறுமா?" என்று இன்னொருவன் கேள்விகள் கேட்டு மடக்கியிருந்தால், கதை சொன்னவன் காணாமல் போயிருப்பான்.

"அம்மை, தன் மேனி அழுக்கால் உருவாக்கிய பிள்ளையைக் காவலுக்கு நிறுத்தி நீராடியபோது, அங்கு வந்த பரமசிவனைப் பிள்ளை தடுக்க, அதன் தலையைச் சிவனார் கிள்ளி எறிய..." என்று தொடங்கி, வெறும் முண்டமாக நின்ற பிள்ளைக்கு யானைத் தலையை வெட்டிவந்து பொருத்தியதாக முடியும் கதையை ஒருவன் சொன்னபோதே.....

"கடவுள்கள் குளிப்பார்களா? அம்மை மறைவான இடத்தில் நீராடும்போது, அங்கு வந்த பரமசிவனார், அம்மை நீராடுவது தெரிந்தும் மறைவிடத்தில் நுழைவாரா? முண்டமாக நின்ற பிள்ளைக்கு, வெட்டி எடுத்துவந்த யானைத் தலையைப் பொருத்தாமல் கிள்ளி எடுத்த தலையையே பொருத்தியிருக்கலாமே" என்று பிறிதொருவன் கேள்விக்கணைகள் தொடுத்திருந்தால், கதை சொன்னவன் தலை தெறிக்க ஓடி மறைந்திருப்பான்.

யானைத் தலையுடனான பிள்ளையாரைத் தொழும் மூடப் பழக்கம் தோன்றியிருக்காது.

பிள்ளையார் கங்கையில் பிறந்தவர்[முதல் கதையின்படி] என்பதால் தொடக்கத்தில் கங்கையில் மட்டும் சிலையைக் கரைத்த நிலை மாறிக் கடலிலும் ஆறுகளிலும் குளங்களிலும் கரைக்கும் பழக்கம் உருவாகியிருக்காது; அது சமூக வழக்கமாகவும் மாறியிருக்காது.

கற்பனைதான் என்றாலும், உலக அளவில் எத்தனை எத்தனையோ கடவுள்கள் இருக்க, சிந்திக்கவே தெரியாத சிலரால் கற்பிக்கப்பட்ட இந்தப் பிள்ளையாரைக் கொண்டாடுவதில் நம்மவர்கள் காட்டும் பிடிவாதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

"இங்கே இஸ்லாம் வளருது, கிறித்தவம் வளருது" என்று நாளும் கவலைப்படுவோர் இம்மாதிரியான மூடப் பழக்கங்களைக் கைவிட்டால் இந்துமதமும் வளரும்[அவர்களிடம் ஒப்பீட்டளவில் மூடநம்பிக்கைகள் குறைவு].

சிலையைத் தூக்கிச் சென்று கரைப்பதற்குப் பதிலாக, ஏழை எளியவருக்குத் தேவையான உடைகளையும், உணவுப் பொருள்களையும் சுமந்து அவர்களை நாடிச் சென்று உதவலாம்.

பேரிடர்க் காலங்களில் குழுக்கள் அமைத்து இயன்றவரை நற்பணிகளைச் செய்யலாம்.

இவ்வாறான மனிதாபிமானச் செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே இந்துமதம் வளரும்.

மாறாக, வண்ண வண்ணக் களிமண் பிள்ளையார் சிலைகளைப் பல்லாயிரக் கணக்கில் சுமந்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதால்[ஆண்டுக்கு ஒரு நாள் கரைப்பதால், ஆற்றில் களிமண் சேர்ந்து ஓடும் நீர் மண்ணில் சேமிக்கப்படும் என்பது வெறும் சமாளிப்பு] அவை மாசுபடுவதோடு, மனிதர்களுக்கான பயனுள்ள பொழுதும் வீணாகிறது என்பதைப் பிள்ளையார்ப் பக்தர்கள் மறவாமலிருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் நல்லது!

===========================================================================