திங்கள், 15 ஆகஸ்ட், 2022

கோயில்தோறும் பெரியார் சிலை!

"தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் திருவரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வழிபட வருகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்கிற யாரோ ஒருவரின் சிலை கோயிலின் எதிரே உள்ளது. அந்தச் சிலை[2006இல் நிறுவப்பட்ட பெரியாரின் வெண்கலச் சிலை] உடைக்கப்படும் நாள்தான் இந்துக்கள் மேன்மை பெறும் நாள்" என்று ஒருவர் பேசியிருக்கிறார்.

இவர்[கனல் கண்ணன்] இந்து முன்னணியின் கலை&பண்பாட்டுப் பிரிவின் தலைவராம்.


இவருக்கும் இவரைப் போன்றவர்களுக்கும் நாம் சொல்ல விரும்புவது.....

கடவுள் நம்பிக்கை எப்போது உருவானதோ அப்போதே 'கடவுள் இல்லை' என்ற அதற்கான மாற்றுக் கருத்தும் உருவாகிவிட்டது.

இந்த இருவேறு நம்பிக்கைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அன்றிலிருந்து இன்றளவும் நிகழ்த்தப்படுகின்றன.

கருத்தளவில் மிகக் கடுமையாக மோதிக்கொண்டாலும் உடலளவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளாத நாகரிகமும் இந்தத் தமிழ் மண்ணுக்குச் சொந்தமானதுதான்.

கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட ஏராள மூடநம்பிக்கைகளின் சுமைதாங்கிகளாக உள்ள உங்களைப் போன்ற பக்தர்கள் கோயிலுக்கு வரும்போதாவது கொஞ்சம் சிந்திக்கப் பழகுதல் வேண்டும் என்பதற்காகத்தான் கோயிலுக்கு[கோயில் கட்டியதில் உங்கள் மூதாதையருக்கு மட்டுமல்ல, உங்களால் வெறுக்கப்படுபவர்களின் மூதாதையருக்கும் பங்குண்டு] எதிரே பெரியாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

சொல்லப்போனால், நாட்டிலுள்ள அத்தனைக் கோயில்களுக்கு எதிரிலும் பெரியார் சிலை நிறுவப்படுதல் வேண்டும். இதற்கான காலமும் மலரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எதிர்காலத்தில், கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பெரியாரின் சிலைக்கு மிக அருகில் உள்ள ரங்கநாதர் கோயில் அகற்றப்படுதல் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தால் அப்போது உங்களைப் போன்ற ஆத்திகரின் நிலை என்னவாக இருக்கும்?

கொஞ்சமே கொஞ்சம் சிந்தியுங்கள் கண்ணன்.

அன்புள்ள கனல் கண்ணன், 'கனல்' என்பது உங்களுடைய பெயரின் அடைமொழியாக மட்டுமே இருக்கட்டும்; உங்களின் உள்ளத்தில் அதற்கு இடம் தரவேண்டாம். அது, உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஒருபோதும் நன்மை பயக்காது!

===========================================================================

https://www.msn.com/en-in/news/other/tamil-stunt-choreographer-arrested-for-call-to-break-periyar-statue/ar-AA10FC4Q?ocid=msedgdhp&pc=U531&cvid=2b89302570b549b7972338b6c53f9160