சனி, 10 செப்டம்பர், 2022

ஓடிப்போன ஒரு குடும்பத் தலைவி வாடகைத் தாய் ஆன கதை!!!

"ஆறு மாசத்தில் அரை ஆளா ஆயிட்டியே. உடம்பு கறுத்துப்போய் ரொம்பவே மெலிஞ்சுட்டே. வரும்போதெல்லாம் மனசைத் தேத்திக்கோன்னு சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்கமாட்டியா மாப்ள?" கடிந்துகொண்டார் செல்லப்பன், துரைசாமிக்குத் தாய்மாமன்.

"என்னைத்தான் பிடிக்கலேன்னா பெத்த புள்ளயையும் அம்போன்னு விட்டுட்டுக் கள்ளப் புருசனோடு என் பெண்டாட்டி ஓடிப்போனா. அடுத்த நாளே அம்மாவும் மாரடைப்பில் செத்துட்டாங்க. அதிர்ச்சியிலிருந்து அப்பாவும் முழுசா விடுபடல. இதெல்லாம் தாங்கக்கூடிய வருத்தமா மாமா" என்றான் துரைசாமி. சொல்லி முடிப்பதற்குள் அழுதுவிடுவான் போலிருந்தது.


"கல்யாணம் ஆனதிலிருந்தே உன்கிட்ட அவள் விசுவாசமா இல்ல. புள்ளயப் பெத்துக் குடுத்துட்டு ஒரு தறுதலைகூட ஓடிப்போனா. ஒழிஞ்சது சனியன். அவள் யாரோ நீயாரோன்னு இருக்கப் பழகிக்கோ" -அவனின் தோள் பற்றி ஆதரவாக அணைத்துக்கொண்டார் செல்லப்பன்.

"தாலி கட்டின பெண்டாட்டி ஆச்சே. அது அத்தனை சுலபமா மாமா?"

"கஷ்டம்தான். அதைச் சுலபமாக்க வழி இருக்கு. அவள் உன் பெண்டாட்டி அல்ல. ஒரு பிள்ளையைப் பெத்துத் தர்றதுக்காக வரதட்சணை கொடுத்து, அவள் விருப்பப்பட்டதால் தாலியும் கட்டிக் கூட்டிட்டு வந்த வாடகைத் தாய்னு நினைச்சிக்கோ. நாள் ஆக ஆக அதுவே மனசில் ஆழமாப் பதிஞ்சுடும்." -ஒரு குழந்தை போல் தேம்பி அழ ஆரம்பித்த துரைசாமியை மார்போடு அணைத்து, அவனின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கலானார் செல்லப்பன்.

===========================================================================