அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 22 அக்டோபர், 2022

போற்றி போற்றி! 'மோடிஜி'யின் வழிபடு கடவுள் சிவபெருமான் போற்றி!!

'பிரமதராகப் பதவியேற்ற பின், மோடி தற்போது ஆறாவது முறையாகக் கேதர்நாத்திற்கும், இரண்டாவது முறையாகப் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்றுள்ளார்' என்பது அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி.

'அவரின் வருகையைத் தொடர்ந்து இருகோயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது[கடவுள்கள் கண்டுகொள்வதில்லையா?!]. மேலும், பூக்களால் அக்கோயில்கள் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.  இன்று காலை கேதர்நாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. அங்கு எடுத்த புகைப்படம் அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  பகிரப்பட்டுள்ளது' -இவை கூடுதல் செய்திகள்.

பயணத்தின்போது, "மிகப்பெரும் மலையோரங்களை ரசித்தேன். அங்கிருந்த முனிவர்களையும் வணங்கினேன். தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் ஆகியோராலும், பெரும் பாம்புகளாலும் சூழப்பட்ட கேதாரப் பெருமானான சிவபெருமானையே நான் வணங்குகிறேன்" என்று சொன்னது சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.

பிரதமர் 'மோடி' பெரும்பான்மை இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரதமர் என்ற முறையில் இந்திய மக்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர்.

எனவே, தம் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட, அனைவராலும் அவர் மதிக்கப்படும் வகையில் வாழ்ந்துகாட்டுவது நல்லது.

அதற்கான வழி.....

மதம், மொழி, இனம், ஜாதி என்னும் எந்தவொரு கட்டுக்கும் உட்படாதவராகத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதே ஆகச் சிறந்த வழியாகும்.

அவர் அந்த வழியைப் பின்பற்றினால் அவரையடுத்து வரும் பிரதமர்களும் அவரைப் பின்பற்ற முயல்வார்கள். அமைச்சர்களும் அதே வழியில் செல்வார்கள்.

இது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கும் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பது உறுதி.

அப்படிக் கலந்துகொள்வது தவிர்க்க இயலாதது என்றால், அம்மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொள்வது எந்தவொரு ஊடகத்திலும் செய்தியாக வருவதைத் தடுப்பது அவசியம்.

ஆகவே, கேதர்நாத் சென்ற பிரதமர் அவர்கள், "தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், உள்ளிட்டவர்களாலும், பாம்புகளாலும் சூழப்பட்ட கேதாரப் பெருமானான சிவபெருமானையே நான் வணங்குகிறேன்" என்று சொன்னது தவிர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதே அறிஞர் உலகில் தீவிர ஆய்வுக்கு உள்ளாகியிருக்கும் இந்த அறிவியல் யுகத்தில், தேவர்களாலும், அசுரர்களாலும், யக்ஷர்களாலும், பாம்புகளாலும் சூழப்பட்ட சிவபெருமானே என் கடவுள்" என்று உலகறிய அறிவிப்புச் செய்தது முகம் சுளிக்கச் செய்வதாக உள்ளது.

இச்செயலை இவர் செய்ததால் சிவபெருமானை வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரிக்குமா?

இந்து மதம் மேலும் மேலும் வளர்ச்சி அடையுமா?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்!

================================================================