ஞாயிறு, 23 அக்டோபர், 2022

கரப்பான்... குதிரை லாட நண்டு... ஜெல்லி மீன்... மனிதர்கள்!!!

410 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிரினங்கள் தோன்றியதாக அறிவியல் அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஐந்து முறை[முறையே 44 கோடி ஆண்டுகள், 41 கோடி ஆண்டுகள், 29 கோடி ஆண்டுகள், 20 கோடி ஆண்டுகள், 1/2 கோடி ஆண்டுகள்] நிகழ்ந்த பேரழிவுகளால் பல உயிரினங்கள் அழிந்துபோயினவாம்.

அழிந்த உயிரினங்களில் குறிப்பிடத்தக்கது 'டைனோசர்'.

கடலில் பெரும் பகுதி பனியால் மூடப்படுதல், அஸ்டிராய்டு[குறுங்கோள்கள்] தாக்குதல், பருவ நிலை மாற்றம், ராட்சத விண்கற்கள் பயங்கர வேகத்தில் வந்து பூமியில் மோதுதல், எரிமலை வெடிப்பு போன்றவற்றால் தூசுப் படலம் உருவாகி பூமியை மறைத்தல் என்றிவ்வாறான காரணங்களால் இந்தப் பேரழிவுகள் நிகழ்ந்தன என்கிறார்கள்.

சில வகை உயிரினங்கள் தப்பிப் பிழைத்திருக்க, புதிய உயிரினங்களும் தோன்றியுள்ளன.

அவற்றிடையே குறிப்பிடத்தக்கது மனித இனம்.

மனித இனம் தோன்றியது சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்.

பேரழிவுகளுக்கிடையே அழிந்துபோன உயிரினங்கள் பலவாயினும், அழியாத உயிரினங்களில் மிக மிக மிகப் பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பவைகளில் கரப்பான் பூச்சி, குதிரை லாட நண்டு, ஜெல்லி மீன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கரப்பான் இனத்தின் ஆயுள் 32 கோடி ஆண்டுகள்.

குதிரை லாட நண்டு... 44 கோடி.


ஜெல்லி மீன்... 55 கோடி.

நம் மனித இனம் தோன்றி 20 லட்சம் ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், மேற்கண்ட மூன்று உயிரினங்களைப் போல மனித இனமும் மிக நீண்ண்ண்ண்ட காலம் வாழுமா?

வாழ்ந்தாலும், "தனி மனிதர் என்ற வகையில், பிறக்கிற அத்தனை பேரும் செத்துத்தானே போகிறார்கள். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற நாமும் அழியத்தான் போகிறோம். நம் இனம் வாழ்வதால் தனி மனிதரான நமக்கு என்ன பயன்?" என்று கேள்வி கேட்டு எவரும் கவலைப்படத் தேவையில்லை.

மனித இனம் அழியாமலிருந்தால்.....

ஆன்மிகவாதிகளால் என்றுமே அழியாதது என்று சொல்லப்படுகிற நம் ஆன்மா, மீண்டும் மீண்டும் பல பிறவிகள்[நிறையப் புண்ணியம் செய்தால் மனிதராகவே பிறக்கலாம்] எடுத்துச் சுகபோகங்களை அனுபவிக்கலாம்; அனுபவித்துக்கொண்ண்ண்ண்ண்டே இருக்கலாம். இது நம் ஆசை.

நம் ஆசைக்கிணங்க மனித இனம் நீண்ட காலம் அழியாமலே இருக்குமா?

மறைந்த ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாய் பாபா, ரமண மகரிஷி, பகவான் ரஜினீஷ் எனப்படும் அவதாரங்களில் எவரேனும் உயிருடன் இருந்தால் இதற்கான பதிலை அவர்களிடம் கேட்டுப் பெறலாம். சொர்க்கத்தில் சுகித்திருக்கும் அவர்களுடன் நம்மால் தொடர்பு கொள்ள இயலாது என்பதால் அது சாத்தியமில்லை.

ஆனாலும், முற்றும் துறந்தவரும், முழுதும் அறிந்தவரும், தன்னில் தானே அவதரித்தவருமான பகவான் ஜக்கி வாசுதேவ்[முப்பிறவி கண்டவர்] இன்று நம்மோடு இருக்கிறார். இந்தக் கேள்வியை அவரிடம் சமர்ப்பிப்போம்.

"மனித இனத்துக்கு என்றென்றும் அழிவு இல்லைதானே பகவான் 'ஜக்கி' அவர்களே?!" 

பதிலுக்காகக் காத்திருப்போம்!

                                              *   *   *   *   *

அறிவிப்பு: பகவான் ரஜினீஸ் அவர்களின் 'வழித்தோன்றல்' என்பதால் ஜக்கி அவர்களுக்குப் 'பகவான்' என்னும் சிறப்பு அடமொழி சேர்க்கப்பட்டுள்ளது!

==========================================================================

*** "ஜக்கியை வம்புக்கு இழுக்காவிட்டால் உனக்கு உறக்கம் வராதா?" என்று எவரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு நாம் தரும் பதில்:

"தன்னைத்தானே அவதாரம் ஆக்கிக்கொண்டு அவர் செய்யும் 'அழும்புகள்' தொடரும்வரை நம் வம்புக்கிழுத்தலும் தொடரும்!"