அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 அக்டோபர், 2022

ஆண் கொசுக்களுக்கு 'மரபணு' மாற்றம்! பெண் கொசுக்களுக்கு?!

கொசுக்களில் 3000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றாலும், நோய்க் கிருமிகளைச் சுமந்து திரியும் சில குறிப்பிட்ட இனக் கொசுக்களே மனிதர்களுக்கு நோய்களைப் பரப்புகின்றன. இதனால், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.


ஆண் கொசுக்களின் மரபணுவை மாற்றி அமைப்பதன் மூலம் இதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். 

2020 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிறுவனமான 'Oxitec', 2021ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் புளோரிடாவிலும், கலிபோர்னியாவிலும் 750 மில்லியன் மரபணு மாற்றப்பட்ட[ஆய்வகங்களில்] கொசுக்களை வெளியிட உள்ளது உரிய வகையிலான ஒப்புதல் கிடைத்ததால்.

மாற்றியமைக்கப்பட்ட இனங்களின் குறியீட்டுப் பெயர் OX5034 என்பதாகும்.

ஏடிஸ் ஈஜிப்டி கொசுக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் கொசுக்களுக்கு இந்த மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றம் செய்யப்பட்டதால், இவ்வகை ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணைந்து உற்பத்தி செய்யும் லார்வாக்கள்[குஞ்சுக் கொசுக்கள்] வயதுக்கு வருவதற்கு முன்பே இறந்துவிடுமாம்.  

அது மட்டுமல்லாமல், மாற்றப்பட்ட புதிய மரபணுவானது, லார்வாக்கள் உருவாவவதற்குத் தேவையான அத்தியாவசியப் புரதங்களின் உற்பத்தியைச் சீர்குலைத்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் லார்வாக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது.

பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து நோய்களைப் பரப்புபவை. மரபணு மாற்றப்பட்டவை உட்பட ஆண் கொசுக்களால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவதில்லை; சுற்றுச்சூழலுக்கும் மாசு உண்டாவதில்லை.

கொசுக்களைப் போலவே, நோய் பரப்பும் மற்றப் பூச்சி இனங்களுக்கும் மரபணு மாற்றம் செய்வது குறித்து அறிவியல் அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

இவை எல்லாம் நல்ல செய்திகளே.

நற்செயல் புரியும் அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆண் கொசுக்களுக்குச் செய்தது போலவே, பெண் கொசுக்களுக்கும் மரபணு மாற்றம் செய்து, கோடி கோடி கோடியாய் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குங்கள். அந்தக் கொசுக்கள்.....

கட்டிய பெண்டாட்டி போதாதுன்னு, கள்ளக்காதல், வன்புணர்வுன்னு[வன்புணர்வுச் செய்தி வெளியாகாத நாளே இல்லை] அலைகிற ஆண்களின் காம வெறி கலந்த குருதியை மட்டுமே விரும்பிச் சுவைக்கணும். அந்தக் கொசுக்கள் கடிச்ச உடனே அவங்க புத்தி பேதலிக்கணும், அல்லது மண்டையைப் போடணும். இப்படியான மரபணு மாற்றப் பெண் கொசுக்களை நீங்கள் உற்பத்தி செய்தால் உங்களுக்கு ரொம்பவே புண்ணியம் சேரும்.

செய்வீர்களா விஞ்ஞானிகளே?

===========================================================================

https://bgr.com/science/2-billion-genetically-modified-mosquitos-are-about-to-be-released-in-the-us/

-மார்ச் 10, 2022 பிற்பகல் 3:52