செவ்வாய், 11 அக்டோபர், 2022

தமிழ் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவின் கவனத்திற்கு.....

பெருமதிப்பிற்குரிய, 'தமிழ் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுத் தலைவர்' அவர்களுக்கு வணக்கம்.

'தமிழ்ப் பயிற்று மொழி' விரிவாக்கம் குறித்த என் எண்ணங்கள்:
வேலை வாய்ப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டுதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான பயிற்று மொழியைத் தேர்வு செய்கிறார்கள். காரணம், தங்களின் தாய்மொழியான தமிழின் நலனைவிடவும் பிள்ளைகளின் நலனே பெரிது என்று எண்ணுவதுதான். பெற்றோர்களைப் பொருத்தவரை, மொழியுணர்வு, இனவுணர்வெல்லாம் வருமானம் ஈட்டலுக்கு அப்புறம்தான். 

ஆகவே, தமிழில் கல்வி கற்றால், எவ்வெவ் வழிகளிலெல்லாம் வேலை வாய்ப்பைப் பெறுதல் சாத்தியம் என்பதை உரிய வகையிலான பரப்புரைகளின் மூலம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துதல் அரசின் மிக மிக முக்கியமான கடமையாகும்.


தமிழ் மொழியில் கற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். தவறினால்.....


இப்போதைய புதிய தலைமுறையைச் சார்ந்த இளைஞர்கள்&மாணவர்களில் கணிசமானவர்களுக்கு, தமிழில் உரையாடத் தெரியுமே தவிர, எழுதத் தெரியாது. அரசு மேற்குறிப்பிடப்பட்ட வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


அடுத்த கட்டமாக, தமிழில் எழுதத் தெரியாததோடு பேசவும் தெரியாத தலைமுறை உருவாகலாம். இதன் விளைவு, தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராக ஆகும் நிலை உருவாகும். பெரும்பான்மை மொழி பேசுவோருக்குக்[குறிப்பாக இந்தி]  கட்டுப்பட்டு வாழும் பரிதாப நிலைக்குச் சிறுபான்மைத் தமிழர்கள் தள்ளப்படுவார்கள்.


இத்தகையதொரு அவல நிலைக்குத் தமிழர்கள் ஆளாகாமல் தடுத்திட, தமிழ் மொழி வழியாகக் கல்வி கற்போருக்கான வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்குவது உடனடித் தேவை ஆகும்.


வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்யும் மொழிகள் மட்டுமே காலம் கடந்து வாழும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறு, பயிற்று மொழிக் குழுவினரை அன்புடன் வேண்டுகிறேன்.


நன்றி. 


குறிப்பு:

தமிழ்ப் பற்றாளர்கள் பலரும், 'தமிழ்ப் பயிற்று மொழி'யின் இன்றியமையாமை பற்றி மிகப் பயனுள்ள பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருப்பார்கள் என்பதால், ஒரு குறிப்பிட்ட கோணத்திலான, இது குறித்த என் எண்ணங்களை மட்டும் குழுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளேன் என்பது அறியத்தக்கது.

===============================================================================

இப்பதிவினை எழுதிடத் தூண்டுதலாக அமைந்த மதிப்பிற்குரிய இ.பு.ஞானப்பிரகாசம்[அகச் சிவப்புத் தமிழ்] அவர்களுக்கு நன்றி.