ஞாயிறு, 9 அக்டோபர், 2022

'ஓஷோ' அவதாரமா, அரைவேக்காடு ஞானியா?!

14 வயதிலேயே[1946] 'ஆன்மிகத் தேடல்' நிகழ்த்துவதாக அலைந்து திரிந்து உடல் நலம் கெட்டு, சாவைத் தழுவ இருந்த ஒரு கிறுக்கன்ர் இந்த ரஜினீஸ்.

1953இல், "இன்றோடு என் 'மனம்' ஒழிந்தது. அதிலிருந்த 'வெளி உலகம் மறைந்தது" என்று உலகுக்கு அறிவித்த மனிதரை 'அரைவேக்காடு ஞானி' என்று சொல்லாமல் வேறு எப்படி அடையாளப்படுத்துவது?

['செக்ஸ் சாமியார்' என்னும் செல்லப் பெயரால் அழைக்கப்பட்டவர்]

"இனி என் வாழ்க்கை 'உள்மையத்தன்மை'யின்[Consciousness] சட்டப்படிதான் இயங்குமே தவிர, உங்களின் தத்துவங்களின்படியோ சாஸ்திரங்களின்படியோ அல்ல" என்றும் சொல்லியிருக்கிறார் இவர்.

மனம் என்று ஒன்று இல்லாத நிலையில் வாழ்க்கை உள்வயத்தன்மையின்படி இயங்குவது எப்படி? கொஞ்சமேனும் புரிகிறதா?ஞானிகளின் பேச்சு உன் போன்ற கடை நிலை மனிதர்களுக்குப் புரியாது என்கிறீர்களா?

இருக்கலாம்[ஹி... ஹி... ஹி!!!].

குடும்பத்தாரின் வற்புறுத்தலால் கல்லூரியில் சேர்ந்து படித்து, தத்துவத்தில்[தத்துவப் பித்தன்!] எம்.ஏ பட்டம் பெற்று, பல்கலைக் கழகத்தில் 8 ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராகப் பணியாற்றி, அதிலிருந்து விடுபட்டு, தியான முகாம்களை நடத்தினார் ரஜினீஸ்; மதங்களைச் சாடுவதைத் தன் பிறவிக் கடனாகச் செய்தார்.

பூனாவில் ஆசிரமம் அமைத்து, 'மதம் அற்ற மதம்' உருவாக்கித் தொடர் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

சொற்பொழிவுக்கிடையே சுவாரசியக் கதைகள் சொல்லிக் கேட்போரைத் தன்வயப்படுத்துவதில் வல்லவர் என்பதால், மக்கள் பெரும் எண்ணிக்கையில் இவரைத் தேடிச் சென்றார்கள்.

இவரிடம் கேட்கப்பட்ட 7500 கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் 650 புத்தகங்களாக வெளியிடப்பட்டது மிகப் பெரிய அதிசய நிகழ்வாகும்.

ரஜினீஸ் என்னும் 'ஓஷோ'['ஓ'... வணக்கத்திற்குரியவர். 'ஷோ'... கடல் போல் விரிந்து பரந்த பிரபஞ்சத்துடன் ஐக்கியம் ஆனவர்] உலகப் புகழ் பெற்றார்.

எல்லாம் நல்லபடியாகவே நடந்துகொண்டிருந்தபோது.....

'மௌனமாகப் பேசுதல்[Heart-Heart communication] என்னும் நடப்பியல் சாத்தியமற்றதும் புதுமையானதுமான ஒரு தொடர்பு முறையை அறிமுகப்படுத்தினார்[திருவண்ணாமலை ரமண மகரிஷி இப்படிப் பேசியதாக ஒரு கட்டுக்கதை இன்றளவும் உலகெங்கும் உலா வந்துகொண்டிருக்கிறது] இதன் விளைவோ, வேறு காரணமோ, ஓஷோவுக்குக் கடுமையான முதுகு வலி உண்டானது[எண்ணங்களின் பிறப்பிடமும் உறைவிடமும் ஆன மனதையே[மூளை] தூக்கிக் கடாசிய முற்றும் துறந்த இந்த அவதாரத்துக்கு முதுகுவலி வரலாமோ?].

சீடர்களும் மருத்துவர்களும் இவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார்கள்; 'ஓரிகான்' என்னும் இடத்தில் 64000 ஏக்கர் பாலைவன நிலத்தை வாங்கி, 'ரஜினீஷ்புரம்' உருவாக்கினார்கள்.

உலகெங்கும் இதன் கிளை ஆசிரமங்கள் உருவாயின.

இவரின் வளர்ச்சி, கிறித்தவ மதத்தவரையும், அமெரிக்க அரசையும் நடுநடுங்க வைத்தது.

ஏற்ற சூழல் அமைந்தபோது, அரசாங்கம் இவர் மீது 113 குற்றங்களைச் சுமத்தியது. 2 குற்றங்களுக்காவது பொறுப்பு ஏற்றால்தான உயிர் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஓஷோ.

['ஒஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை. ஒர் அவதாரமாக இந்தப் பூமிக்கு வந்தவர்' என்று இவரின் தொண்டர்கள் இவரைப் புகழ்வது வழக்கம். இப்படியொரு அவதாரப் புருசனுக்கு நேர்ந்த இந்தக் கதிதான், "ஓஷோ அவதாரமா, அரைவேக்காடு ஞானியா?!" என்று கேள்வி கேட்க வைத்தது].

ஓஷோ நாடு கடத்தப்பட்டார்[அமெரிக்காவிலிருந்து வெளியேறியபோது அங்கிருந்த தொண்டர்கள் விலை உயர்ந்த 93 'ரோல்ஸ்ராய்ஸ்' கார்களைப் பரிசளித்தார்களாம்[பரிசுகளைப் பணமாக்கியிருப்பாரா ஓஷோ?].

உலகின் எந்தவொரு நாடும் புகலிடம் அளிக்கவில்லை.

வேறு வழியில்லாமல் பிறந்த ஊரை[இந்தியா]த் தேடிவந்தார்.

பூனாவிலிருந்த ஆசிரமத்தைப் புதுப்பித்து எஞ்சிய வாழ்நாளை அங்கேயே கழித்தார்.

தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாத வகையில் தத்துவம் என்னும் பெயரில் எதையெதையோ பேசிப் பேசிப் பேசி, ஏராளமானோரைச் சுய சிந்தனை அற்றவர்களாக மாற்றிய சாதனையாளர் 'ஓஷோ' என்பதில் எள்ளத்தனையும் சந்தேகத்திற்கு இடமில்லை.

அவர் விட்டுச் சென்ற இந்த அரைவேக்காட்டு ஆன்மிகப் பணியை நம் வெள்ளியங்கிரி அவதாரம் ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதா, கண்டிக்கத்தக்கதா?

சிந்தித்து முடிவெடுங்களேன்!

===========================================================================

'ஓஷோ ஈஸா உபநிஷத உரை'[நர்மதா பதிப்பகம், சென்னை, சனவரி 1995] என்னும் நூலை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டது இந்தப் பதிவு.