அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 8 அக்டோபர், 2022

ஆன்மா படும் பாடு!!![வாழ்வியல் நீதிக் கதை]

'மகாபாரதம்' கதை... போர்க்களம்.

எதிரில், எதிரிகளாகப் போர்க்கோலம் பூண்டு நிற்கும் பாட்டன்களையும் பங்காளிகளையும் போரிட்டுக் கொல்லவிடாமல் அர்ச்சுனனைத் தடுத்தது அவர்கள் மீது அவன் கொண்டிருந்த பாசம்.

காண்டீபத்தைக் கையில் எடுக்கத் தயங்கினான் அவன்.

அவனின் தயக்கத்திற்கான காரணத்தைப் புரிந்துகொண்ட தேரோட்டி கண்ணன், "ஏன் தயங்குகிறாய் அர்ச்சுனா? வில்லை எடு; நாணை ஏற்று; அம்பைத் தொடு; அவர்களைக் குறி வைத்து விடு" என்றான்.

மேலும், "அவர்களைக் கொல்வதாக நினைத்து மனம் மயங்காதே. நீ கொல்லப்போவது அவர்களின் உடல்களைத்தான்; அவர்களை அல்ல, அதாவது, அவர்களின் ஆன்மாவை அல்ல. ஆன்மாக்களுக்கு அழிவில்லை. எனவே, அவர்களுக்கும் அழிவில்லை" என்று உபதேசித்தான்[கீதை].

கண்ணனின் உபதேசத்தை அர்ச்சுனன் ஏற்றுப் போர் செய்தான்.

பாரதப் போர் முடிந்தது.


ஒரு வழக்கறிஞர் இதை உதாரணமாகக் காட்டி, கொலைகாரனான தன் கட்சிக்காரனை விடுவிக்க வாதாடியதாக ஒரு நிகழ்வு[கற்பனைதான்].

"நீதிபதி அவர்களே, தாங்கள் பகவத்கீதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். போரில் கொல்லப்பட்ட அர்ச்சுனனின் உறவினர்களின் உடல்கள்தான் அழிகின்றன. அவர்களின் ஆன்மாக்களுக்கு அழிவில்லை என்பதால் அவர்களில் எவரும் அழிவதில்லை என்பதாகக் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் அல்லவா?.....

அது போலவே, என் கட்சிக்காரரால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரின் உடல்தான் அழிக்கப்பட்டதே தவிர, அவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்பதால் அவர் பிறிதொரு உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. எனவே, என் கட்சிக்காரரை விடுதலை செய்திட வேண்டுகிறேன்" என்று வாதாடினார் வழக்கறிஞர்.

வழக்கறிஞரைவிடவும் வழக்கை விசாரித்த நீதிபதி புத்திசாலி போலும். அவர் அளித்த தீர்ப்பு:

"உங்களின் கட்சிக்காரரைத் தூக்கில் போடுவதால், அவரின் உடல்தான் அழியுமே தவிர, அவர் ஆன்மா அழியாததால் அப்புறமும் அவர் உயிர் வாழ்வார் என்பதே உண்மை. எனவே உங்கள் கட்சிக்காரரின் உடலுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்."

இந்த நிகழ்வின் மூலம் யாவரும் அறியத்தக்க நீதி.....

'ஆன்மா' என்று ஒன்று இருப்பதாக நம்பி, தப்புதண்டா செய்து,  வம்புதும்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதே!

===========================================================================

மூல நூல்: 'சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு'வின் 'உலகைத் திருத்திய உத்தமர்கள்'; பூம்புகார் பதிப்பகம், சென்னை.