அவர் பெயர் ஹூபர்ட். அவரின் பிரிய மனைவியின் பெயர் ‘ஜூன் மாலிகோட்’.
ஒரு விருந்தளிப்பு நிகழ்வுக்குப் பிறகு ஜூன் மாலிகோட் நோய்வாய்ப்பட்டார்.
நோயின் தாக்கம் கடுமையானதாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருமணம் ஆகி 79 ஆண்டுகள் இணைபிரியாமல் பாசப் பிணைப்புடன் வாழ்ந்த இருவருமே 100 வயதைக் கடந்தவர்கள்.
மோசமாக இருந்த ‘ஜூன் மாலிகோட்’டின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவரின் உயிர் பிரிந்தது.
உயிர் பிரிந்த அந்தக் கணங்களில் அவரின் கையை ஹூபர்ட்டின் கை இறுகப் பற்றியிருந்தது. சில மணி நேரங்களில் அவரும் மரணத்தைத் தழுவினார்.
தன் உயிர் பிரியவிருந்த கடைசி நொடிவரை தனக்குரியவளைப் பிரிந்திருக்க விரும்பாத ஹூபர்ட்டையும், அந்த அளவுக்கு அவருடன் மனம் கலந்து அன்பைப் பொழிந்து வாழ்ந்த ஜூன்மாலிகோட் ஆகிய தம்பதியரைப் போன்று ஓர் இணையை இந்த உலகம் கண்டிருக்குமா? அதற்கான வாய்ப்பு இனியேனும் அமையுமா?
இவர்கள் வாழ்ந்த வாழ்வை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால், இவர்களும் இவர்களைப் போன்ற இணையர்களும் இணைக்கப்பட்டுப் பின் மரணத்தின் மூலம் பிரிக்கப்படுவதை எண்ணும்போது நெஞ்சம் வெகுவாகக் கனக்கிறது.
எத்தனைக் கொடூரம் இது?
‘மரணம்’ என்னும் பெயரில் இணைத்துப் பின் பிரிக்கும் இந்தச் செயலைச் செய்வது யார்?
இந்த இழிசெயலைச் செய்த அந்தப் படைப்பாளன்[கடவுள்] பண்பில்லாதவன் என்கிறார் சங்ககாலப் புலவர் ஒருவர்.
“படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்” என்று, அனைத்தையும் படைத்தவனான கடவுளையே கடிந்துகொள்ளும் அவர், புறநானூற்றுப் புலவர் ‘பக்குடுக்கை நன்கணியார்’[பாடலும் பொருளும் கீழே] என்பவர்.
பக்குடுக்கை நன்கணியார் நம் போற்றுதலுக்கும் பின்பற்றுதலுக்கும் உரிய சீரிய சிந்தனையாளர் ஆவார்!
பாடல்:
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்...’
உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.
======================================================================================================