அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

வணக்கத்திற்குரிய குடியரசுத் தலைவிக்கு என் பணிவான வேண்டுகோள்!

ந்தியக் குடியரசின் தலைவி[தலைவர்] அவர்களே,

இன்றைய ஊடகச் செய்திகளின்படி, ‘ஈஷா’ ஆசிரம ‘மகா சிவஜக்கிராத்திரி’க் கொண்டாட்டத்தில் தாங்கள் கலந்துகொள்வது உறுதியாகிவிட்டதென நான் நம்புகிறேன்.

தன்னைக் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் ‘ஜக்கி வாசுதேவன்’ என்னும் பெயர்கொண்ட இந்த நபரைப் பற்றிச் சில நாட்களுக்கு முன்புவரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

நீங்கள் சந்திக்கவுள்ள இந்த மனிதர் பற்றி 100% உண்மைத் தகவல்களை அளிக்கவேண்டியவர்கள், அதைச் சரியாகச் செய்யாததன் விளைவே ஜக்கியின் ஈஷா ஆசிரமத்தின் நிகழ்வில் தாங்கள் கலந்துகொள்ளுவதற்கான காரணம் ஆகும்.

தங்களின் முழு நம்பிக்கைக்குரிய புலனாய்வாளர்களிடம் விசாரித்திருந்தால் இதைத் தவிர்த்திருப்பீர்கள். 

சுற்றிவளைக்காமல் அடியேனின் வேண்டுகோளைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஜக்கி நடத்தும் முழு ராத்திரிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதெனத் தாங்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே,

கலந்துகொள்ளுங்கள்.

விடிய விடிய நடத்தப்படும் கூத்துகளை[சிவராத்திரியை முன்னிட்டு உலகில் வேறு எங்குமே நடைபெறாதது]க் கண்டு ரசியுங்கள். இசைக் கச்சேரியில் பாடப்படும் பன்மொழிப் பாடல்களைச் செவிமடுத்து இன்புறுங்கள். 

தாங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால், ஜக்கியால் நிறுவப்பட்டு, நம் நாட்டுப் பிரதமரால் வழிபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஆதியோகியை[அப்படி ஒரு கடவுளே இல்லை. யோகி என்றால் ‘யோகா’ செய்பவர். ஆதிகாலத்தில் யோகா செய்தவர் என்று இதற்கு அர்த்தம். ‘யோகா’ என்பது மனிதர்களுக்கான ஒரு பயிற்சி மட்டுமே. உண்மை இதுவாக இருக்க, கடவுளை ‘ஆதி யோகி’ என்றழைத்துச் சிலை வைத்து வணங்குவது அறிவுடைமையல்ல] வழிபடுங்கள்.

இந்த நபர் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உருவாக்கி வைத்துள்ள தியான அரங்கில் தியானம் வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால்.....

ஆனால்..... ஆனால்..... ஆனால்.....

தான் பிறவி ஞானி என்றும், கடவுளுக்கும் மேலானவன்[சத்குரு= ‘சத்’>பரம்பொருள்] என்றும் சொல்லிக்கொள்ளும் இந்த ஆளின் முன்னால்.....

நம் பிரதமர் செய்தது போல்[உண்மைக் குடிமகன் என்னும் முறையில் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை என்பது என் நம்பிக்கை], வெகு பவ்வியமாகக் கைகட்டி அமர்ந்திருந்து[இது தவிர்க்க இயலாதது என்றால், இதையே பிறர் அறியாத வகையில் தனிமையில் செயல்படுத்தலாம்], இந்த நபர் செய்யும் முன்னுக்குப்பின் முரணானதும் அபத்தமானதுமான ஆன்மிகப் போதனைகளுக்குச் செவிமடுக்காதீர்கள்.


அப்படிச் செய்தால்.....

அச்செயல், இந்த நாட்டின் கவுரவத்தைக் கட்டிக் காக்கவேண்டியவர்கள் போலிச் சாமியார்களிடம் அதை அடகு வைத்துவிட்டதாக மக்கள் நினைப்பார்கள்.

அடியேனின் இந்தக் கோரிக்கையைத் தாங்கள் புறக்கணிக்கமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

==============================================================================

***ஒரு சந்தேகம்!

“நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். தமிழர்களின் சிந்திக்கும் திறனைச் சிதைக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்துமுடி” என்று சம்பந்தப்பட்டவர்களால் சர்வ சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டவரோ இந்த ஆள்?