எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 12 மார்ச், 2023

இன்றே இக்கணமே சீமானை[‘நாம் தமிழர்’]ச் சிறை செய்வீர்!!!


சீமான் அவர்கள் தமிழர்களின் நலம் காக்கும் சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அவர் வ.மா.தொழிலாளருக்கு எதிராக வன்முறையைத் துண்டும் வகையிலும், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதாக அவர் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது இன்றைய ஊடகச் செய்தி.

அரசின் வழக்குப் பதிவுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளனவோ இல்லையோ, சீமான், மேடைகளில் கனல் தெறிக்கப் பேசுகிறார் என்பதும், உள்ளக் குமுறலுடன் உணர்ச்சி பொங்கப் பேட்டி அளிக்கிறார் என்பதும், தமிழின எதிரிகள் பற்றித் தணியாத சினத்துடன் அறிக்கைகள் வெளியிடுகிறார் என்பதும் உண்மையே.


உணர்ச்சிவசப்படுவதும், கோபம் கொண்டு கொந்தளிப்பதும் நீடித்தால், அவரின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

சீமானின் பணி தமிழ் மக்களுக்கான அவசியத் தேவை என்பதால், உடல் நலம் பாதித்து, ஏதேனும் விபரீத விளைவுகள் அவருக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பது நம் கவலை. எனவே, அவர் மன அமைதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாவது/உருவாக்கப்படுவது மிக மிக அவசியம்.

தினம் தினம் மேடைகளில் முழங்குதல், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தல், அறிக்கை விடுதல் என்று ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில்  இந்த அமைதியைப் பெறுவது அவருக்குச் சாத்தியமே இல்லை.


அதைச் சாத்தியப்படுத்துவதற்கான சூழலை இப்போது உருவாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அது.....

‘கலவரத்தைத் தூண்டுகிறார்; இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கிறார்’ என்னும் குற்றச்சாட்டுகளின்[“சீமானை ஏன் கைது செய்யவில்லை?” என்று பீகாரைச் சேர்ந்த அரசியல் புரோக்கர் தொடர்ந்து கேள்விக்கணை தொடுப்பதால், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை தவிர்க்க இயலாததாக உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது] அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு.

வழக்குப் பதிவு செய்த நம் அரசு உடனடியாகச் சீமானைக் கைது செய்து சிறையில் அடைத்திட வேண்டும். அரசு அதைச் செய்தால்.....

சிறை வாழ்க்கை அவருக்கு மன அமைதியை நல்கக்கூடும்; அங்கே அவர் உணர்ச்சி வசப்படாமல் மேடைகளில் பேசவும், அமைதியாக ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும், அறிக்கைகள் வெளியிடவும் கற்பார்; சிறையிலிருந்து விடுதலை பெற்றுவந்து தன் பணிகளைத் தொடர்வார்.

இது உறுதி.

எனவே, தமிழ்நாடு அரசு சற்றும் தாமதிக்காமல் சீமானைச் சிறை செய்தல் வேண்டும் என்பது நம்மைப் போன்றோரின் கோரிக்கை.

===========================================================================================