சனி, 11 மார்ச், 2023

"அப்படிப் போடு ராஜா!”... கன்னட[கர்னாடகா] சகோதரருக்கு நம் பாராட்டுகள்!!

தன்னுடைய ஆட்டோவில் ஏறிய பயணிகள் கன்னடத்திற்குப் பதிலாக இந்தியில் பேசியதால் உணர்ச்சிவசப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், இந்தியில் பேசுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு குறித்த காணொலி ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இந்தக் காணொலி[வீடியோ] இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது கர்நாடகாவில் சரியாக எங்கே நடந்தது என்று துல்லியமாகத் தெரியவில்லையாம். 


“இது பெங்களூரில்தான் நடந்தது” என நெட்டிசன்கள் கூறுகிறார்களாம்.


இந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர், "இது கர்நாடகா. நீங்கள் கன்னட மொழியில்தான் பேச வேண்டும். நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்?" என்று கூறுகிறார்[அதைப் பயணம் செய்த பெண் பயணிகள்தான் வீடியோவாக எடுத்துள்ளனர்]. 


இரு தரப்புக்கும் எப்படி, ஏன் இந்த வாக்குவாதம் தொடங்கியது என்பது தெரியவில்லை. எனினும், டிரைவர் பேசத்தொடங்கிய பிறகு உள்ள காட்சிகள்தான் சுற்றி வருகின்றன.


ஓட்டுநர் கன்னடத்தில் பேசச் சொல்ல, ஒரு பெண் பயணி, "முடியாது.. நாங்கள் கன்னடத்தில் பேச மாட்டோம்" என்று கூறியதோடு, டிரைவரிடம், "நாங்கள் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும்" என்று கேட்கிறார்.


அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர், "நீங்கள் வட இந்தியர்கள், இது எங்கள் நிலம்; உங்கள் நிலம் அல்ல. இங்கு நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு என்னை ஏன் இந்தியில் பேசச் சொல்கிறீர்கள்? நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்" என்று கேட்கிறார்[பயணிகள் தமிழராயிருந்து, தமிழில் பேசச் சொல்லியிருந்தாலும் -தெரிந்தால் பேசுங்கள் என்று கேட்பதில் தவறில்லை- ஓட்டுநர் இதே பதிலைத்தான் சொல்லியிருக்க வேண்டும்]. இது காணொலியில் பதிவாகியுள்ள தகவல்கள்.


எது எப்படியோ, இந்தித் திணிப்புக்குக் கர்னாடகாவில் ஓர் ஆட்டோ ஓட்டுநர் எதிர்ப்புத் தெரிவிப்பது, இந்தித் திணிப்பை விரும்பாத அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வே.

https://tamil.oneindia.com/news/bangalore/why-i-should-speak-hindi-heated-argument-between-karnataka-auto-driver-passenger/articlecontent-pf877687-502513.html

===========================================================================================