வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு முன்னதாக வந்திருந்து வேலை பார்ப்பவர்கள் ஏராளம். பலர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். தமிழரிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் எழுந்ததில்லை[வந்தாரை வாழவைப்பதோடு ஆளவும் வைத்து வாயிளிப்பவன் இவன்].
அண்மைக்காலத்தில், ஆயிரம், பல்லாயிரம் என்று வட மாநிலத்தவர் வந்து குவிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக[செய்தி ஊடகங்களின் பங்கு மிக மிகக் குறைவு]த் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
மிக மிகச் சிறு சிறு அசம்பாவிதங்கள் நடந்தனவே தவிர[அசம்பாவிதங்களுக்கு வ.மா.தொழிலாளரும் காரணமாக இருந்திருக்கிறார்கள்] தமிழர்கள் அமைதி காக்கவே செய்தார்கள்.
அவர்களின் வரவை எதிர்த்து இவர்கள் ஊர்வலங்கள் நடத்தவில்லை; உண்ணாவிரதப் போர் நிகழ்த்தவில்லை; கலவரங்கள் செய்யவில்லை. உண்மை இதுவாக இருக்க.....
அ.மா.தொழிலாளர்[கவனிக்கவும், ‘வடக்கன்ஸ்’ என்று நான் எழுதவில்லை] அடித்து விரட்டப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும் வதந்தி பரப்பி நாடெங்கும் பதற்றத்தை உருவாக்கியவர்கள் வடநாட்டவர்தான்.
இவற்றில் எதுவும் உண்மை இல்லை என்று இரு மாநில அதிகாரிகளும், அமைச்சர்களும், அங்கிருந்து வந்த ஆய்வுக் குழுவினரும் அறிவித்தார்கள். அமைதி நிலைநாட்டப்பட்டது.
வடநாடோ தென்னாடோ கையில் செல்ஃபோன் இல்லாதவர் இன்று எவருமில்லை[குறிப்பாகத் தொழிலாளர்கள்].
அவ்வப்போது வெளியாகும் அறிவிப்புகளை அவர்களால் மிக எளிதாக அறிந்துகொள்வது சாத்தியமே.
நிலைமை இதுவாக இருக்க, நம் அரசும் காவல்துறையும் பல முறை வ.மா. தொ.களுக்குத் தைரியம் சொல்லி அறிக்கை விட்டதோடு தொழிலாளர்களை நேரிலும் சந்தித்துத் தாங்கள் விடும் அறிக்கைகள் உண்மையானவை என்று உறுதிப்படுத்தினார்கள்; படுத்துகிறார்கள்[எவரும் ‘சத்தியம்’ செய்திருக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. ஹி... ஹி... ஹி!!!].
மேலும், ‘பாஜக’ பி டீம் தலைவர்[பீகார்], அரசியல் புரோக்கர், இங்குள்ள ‘பாஜக’ எடுபிடிகள் என்று எவரெவரோ வ.மா.தொ.களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டும் எச்சரிக்கை செய்தும் தங்களின் பங்களிப்பைச் செய்தார்கள்.
நம் முதல்வரே தொழிலாளர்களை நேரில் சந்தித்துத் தைரியம் சொன்னார்.
இதற்கப்புறமும், அதிகாரிகள் வ.மா.தொ.களைச் சந்தித்துத் தைரியம் சொல்வது தொடர்ந்தது; தொடர்கிறது என்பதுதான் இந்தப் பதிவை எழுதுவதற்கான உண்மைக் காரணம்.
அவர்கள் அஞ்சும்படியாக இங்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும், அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்வது அரசின் கண்ணோட்டத்தில் தேவையாக இருக்கலாம். ஆனால், அதற்கு ஓர் அளவு இல்லையா?
நேற்றுக்கூட[10.03.2023], 'கோத்தகிரி அருகே உள்ள சோலூர் போலீஸ் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் மற்றும் போலீசார், கடந்த சில தினங்களாக, சோலூர்மட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் பேசியும், போலீஸ் உயர் அதிகாரிகளின் விழிப்புணர்வு[???] வீடியோவைக் காண்பித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்' என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. https://tamil.getlokalapp.com/tamilnadu-news/nilgiris/coonoor/the-police-had-a-discussion-with-the-north-state-workers-9488263
தமிழன் வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்ற இடமெல்லாம், உதைபட்டான்; ஓட ஓட விரட்டப்பட்டான்[இவனுக்கு உதை வாங்கித்தான் பழக்கம். உதைக்கத் தெரியாது] அங்கெல்லாம் ஆட்சி நடத்தியவர் எவரும், இப்படித் தேடித் தேடிப் போய்த் தைரியம் சொன்னதில்லை.
இந்தப் பயந்தாங்கொள்ளித் தமிழன், வ.மா.தொ.களை எதிர்த்து ஊர்வலமோ, உண்ணாவிரதமோ, கலவரமோ செய்யவில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
இதுவே உண்மை.
உண்மை இதுவாக இருக்க, வடநாட்டிலிருந்து வதந்தி பரப்பியவர்கள் எவரோ, ‘வதந்தியெல்லாம் பொய்’ என்று உண்மை நிலவரத்தைத் தங்களின் தொழிலாளர்களுக்குப் பரப்புவது அந்த அவர்களுக்குரிய கடமை.
இந்தக் கடமையை அவர்கள் செய்திருந்தால், தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவுமில்லை என்பதைச் செல்போன் வாயிலாக ஒவ்வொரு வடக்கனும், மன்னிக்கவும் வட இந்தியத் தொழிலாளியும் அறிந்திருப்பான்ர்.
[நம் மாநிலத் தொழிற்சாலைகளில்[சிறு சிறு கடைகள் ஒரு பொருட்டல்ல] வேலை செய்ய ஆள் பற்றாக்குறை உள்ளது என்று அரசோ, தொழில் நிறுவனங்களோ எத்தனை முறை அறிவிப்புச் செய்தார்கள்? விளம்பரங்கள் கொடுத்தார்கள்?[புள்ளிவிவரங்களுடன்]. இல்லைதானே? இளைஞர்களைத் தேர்வு செய்து தேவையான தொழில்நுட்பப் பயிற்சி கொடுத்திருக்கலாம். இதனால் எதிர்பார்த்த பயன் விளையாதபோது இங்கு வட நாட்டவரை அனுமதித்திருக்கலாம். செய்தார்களா?]
அவர்கள்[வட மாநிலத்தவர்] தங்களின் கடமையைச் செய்யவில்லை.
மாறாக, இங்கே உள்ளவர்கள் வ.மா.தொ.களைத் தேடித் தேடிப் போய்த் தைரியம் ஊட்டும் வேலையை வெகு சிறப்பாகச் செய்கிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால்.....
கொஞ்ச காலத்திற்கு, தமிழ்நாடு மாநிலத்தின் பெயரை, ‘வ.மா.தொழிலாளர் மாநிலம்’ என்று பெயர் மாற்றம் செய்து, அவர்களில் ஒருவரை[கொஞ்ச காலத்திற்குத்தான்]த் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்குவதும் இங்கு நடக்குமோ என்று ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இது வெறும் சந்தேகம்தான்.
* * * * *
முக்கியக் குறிப்பு:
இந்தப் பதிவின் நோக்கம் வ.மா.தொழிலாளர் நலனுக்கு எதிராக ‘வதந்தி’ பரப்புவதல்ல[அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்]; தமிழர்கள் கலவரக்காரர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்களே என்னும் மன வேதனையை வெளிப்படுத்துவது மட்டுமே.