திங்கள், 13 மார்ச், 2023

நாய்களுக்குத் திருமணம்! முதலிரவுக்கும் ஏற்பாடு நடக்கிறதாம்!!

‘ரியோ’, ‘ரியா’ என்று இரண்டு நாய்கள்[ஊர், பேர் எதுவும் தெரியவில்லை]. ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தெருவில் திரியும் சொறி நாய்கள் அல்ல; செல்ல நாய்கள்.

இவற்றை வளர்த்த ஓர் அறிவுஜீவிக் குடும்பத்தார்[செய்தி ஊடகம் இவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை] திருமணம் செய்துவைக்க விரும்பினார்கள்[ஜோதிடரை அணுகிப் பொருத்தம் பார்த்தார்கள்].

ஒரு நல்ல நாளும் அதுவுமாக, சுபமுகூர்த்ததில், இந்திய முறைப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்து திருமண செய்துவைத்துள்ளனர்.

திருமணம் நடைபெறும் இடத்திற்கு ரியோ ஒரு சிறிய ரோபோ காரில் அழைத்து வரப்பட்டது. அதற்குத் திருமண ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது[அழகு நிலையத்தில் ஒப்பனை செய்யப்பட்டதை ஊடகம் குறிப்பிடத் தவறிவிட்டது].

மணமகன் ரியோவும் மணப்பெண் ரியாவும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்த்தப்பட்டார்கள்.

[மங்கள வாத்தியம் முழங்க[விடுபட்ட செய்தி], மாப்பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ரியாவுக்கும், மணமகள் வீட்டாரில் ஒருவர் ரியோவுக்கும் மலர் மாலை அணிவிக்க[!!!], திருமணம் நடந்தேறியது.

இரு குடும்ப உறுப்பினர்களும் ஆடல் பாடலுடன் நாய்களுக்கு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்க, திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் கல்யாணச் சாப்பாடும் போடப்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஊட்டியுள்ளதாம் இந்த நிகழ்ச்சி குறித்த காணொலி. https://tamil.news18.com

* * * * *

கடந்த இரண்டு நாட்களாக இரவுபகலாகத் தேடியும் அந்தக் காணொலியைக் கண்டறிய இயலவில்லை.

ஆயினும்,

ரியோவுக்கு ரியாவுக்குமான ‘முதலிரவு’க் காணொலி மட்டுமல்லாமல், ரியாவுக்கான வளைகாப்புக் கொண்டாட்டக் காணொலியும் வெளியாகும்போது, அவற்றை அவசியம் என்னுடன் பகிர வேண்டும் என்று வலையுலக நண்பர்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளேன்.

வெளியாகும் காணொலிகளில், ரியோவும் ரியாவும் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில் எப்படியெல்லாம் கூடிக் களிக்கவிருக்கிறார்கள் என்பதைக் கண்டு உவப்பதற்கு மிக்க ஆவலுடன் காதிருக்கிறேன்.

ரியோவும் ரியாவும் வாழ்க! அரியதொரு உலக சாதனை நிகழ்த்திய [இது நம் புண்ணிய பாரத நாட்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம்]கூரறிவுக் குடும்பத்தாரும் வாழ்க வாழ்க வாழ்கவே!!

https://tamil.news18.com/news/trend/family-made-their-dogs-to-get-married-in-indian-style-ceremony-907766.html

நாய்களுக்கு நடத்தப்பட்ட திருமணம்

குறிப்பு: கடந்த பல நாட்களாக, அதிர வைப்பனவும் பதறத் தூண்டுவனவுமான பதிவுகளை எழுதி மனம் சோர்ந்துவிட்டது. ஒரு மாறுதலுக்காக இந்தப் பதிவு!