இந்த நிகழ்வுக்கான பின்னணியை https://makkalosai.com என்னும் தளத்தில் மிகத் தெளிவாக அறிதல் சாத்தியமாயிற்று.
சாமி ஊர்வலத்திற்குப் பின்னர் நடந்தது.....
சுமார் 20 அடி ஆழம் கொண்ட அந்தக் குளத்தில் அதிக அளவில் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. எனவே, தன்னார்வலர்கள் 25 பேர் முதலில் குளத்தில் இறங்கி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப் பாதுகாப்பு வளையமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி சங்கிலிபோல் நின்றுகொண்டனர்.
அர்ச்சகர்கள் சாமியைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாகச் சங்கிலி போல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர்[அர்ச்சகர் அல்ல], திடீரென நிலைதடுமாறிக் குளத்தில் இருந்த சேற்றில் கால் வைத்துவிட்டார். இதில் சிக்கி அவர் நீரில் மூழ்கித் தத்தளித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக தன்னார்வலர்கள், ஒருவர் பின் ஒருவராக அவரைக் காப்பாற்ற முயன்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களும் அடுத்தடுத்து, நீரில் மூழ்கிச் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
அர்ச்சகர்கள் எல்லாரும் பாதுகாப்பாகக் குளத்திலிருந்து வெளியேறினார்கள். அவர்களில் எவரும் நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை[தன்னார்வலர்களே குளத்தில் இறங்கி, ஐவரில் நான்கு பேர்களைச் சடலமாக மீட்டிருக்கிறார்கள். ஐந்தாவது நபரை மீட்டவர்கள் தீயணைக்கும் படை வீரர்கள்.
தன்னார்வலர்களாகச் செயல்பட்ட 5 பேரைக் காப்பாற்றும் முயற்சியில் அர்ச்சகர் எவரும் ஈடுபடவில்லை என்பது ஒரு பொருட்டல்ல. தாங்கள் குளிப்பாட்டிய தர்மலிங்கேஸ்வரக் கடவுளைப் பத்திரமாகக் கரை சேர்த்தார்களா என்பதே அவசியம் அறியத்தக்கது.
ஒருவேளை.....
தப்பித்தோம் பிழைத்தோம் என்று, தர்மலிங்கேஸ்வரரைச் சேறும் சகதியும் நிறைந்த குளத்துக்குள்ளேயே மூழ்கவிட்டுவிட்டுக் கரையேறியிருப்பார்களோ அர்ச்சகர்கள் என்று எழும் சந்தேகம் தவிர்க்க இயலாததாக உள்ளது.
‘தர்மலிங்கேஸ்வரர் குளத்துச் சேற்றில் சிக்கி மூச்சுத் திணறி.....’ -நினைக்கும்போதே நெஞ்சு நடு நடுங்குகிறது.
தீர்த்தவாரி விபத்து குறித்து விலாவாரியாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்களில் எந்தவொன்றும் தர்மலிங்கேஸ்வரரின் ‘கதி’ பற்றிச் செய்தி வெளியிடாதது கண்டிக்கத்தக்கதும் தண்டிக்கத்தக்கதும் ஆன செயலாகும்!
=========================================================