பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 6 ஏப்ரல், 2023

‘மந்த புத்திக் கந்தசாமி!’[100% பொழுதுபோக்கு]

நான் ‘அகவை’ 60ஐக் கடந்தவன் என்பது அவ்வப்போது மறந்துபோகிறது[துல்லியமான வயதை என் புகைப்படங்களைப் பார்த்துக் கணிக்கலாம்]. 20 வயதே ஆன வாலிபனின் மனநிலை நிமிடக்கணக்கில் நீடிக்கிறது. அவ்வாறாதொரு மனநிலையில் எழுதியதே கீழ்க்காணும் கதை.

இது ‘புதிர்க் கதை’யும்கூட . முதல் வாசிப்பில் புரியவில்லை என்றால், புத்தியைக் கூர்தீட்டி[ஹி... ஹி... ஹி!!!] மீண்டும் மீண்டும் வாசியுங்கள். பலன் கிட்டும்!
பேருந்து ஓட ஆரம்பித்தவுடன் கந்தசாமியின் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

அவனுக்கு நேர் முன் இருக்கையில்  ஒரு தேன்சிட்டு! அவளுக்கு இருபக்கமும்  இரண்டு பொக்கைவாய்க் கிழவிகள்.

அரைச்சந்திர வடிவில் தகதகத்த அவளின் பொன்நிற முதுகும், வெண்சங்குக் கழுத்தும் அவனுக்குள் சிலிர்ப்பூட்டின. ஒரு தடவை அவளைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டான்.

இருக்கையில் நன்றாகச் சாய்ந்து, தன் கால் விரல்களால் அவளின் குதிகாலில் உரசி வெள்ளோட்டம் பார்த்தான். 

அவள் திரும்பிப் பார்க்கவோ முறைக்கவோ இல்லை.

அவனுக்குள் தைரியம் சுரந்தது. அவளின் ‘மெத்’தென்ற  கெண்டைக்கால் சதையை காலின் இரு விரல்களால் லேசாகக் சிமிண்டினான்.

அவள் கண்டுகொள்ளவே இல்லை! அவளும் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான் கந்தசாமி.

காலைச் சற்றே பின்னுக்கு இழுத்து, மீண்டும் நுழைத்து, அவளின் வழுவழுப்பான கால் சதையில் மேலும் கீழுமாகத் தேய்த்தான்.

அதனால் கிடைத்த சுகம் அவனை மெய்மறக்கச் செய்தது. ஆனால், அது ஓரிரு நிமிடமே நீடித்தது.

‘சரேல்’ என எழுந்து நின்ற அவள், சன்னலோரம் இருந்த கிழவியைப் பார்த்து, “ஆயா, கையை வெச்சுகிட்டுச் சும்மா இருக்க மாட்டியா? இந்தப் பக்கம் நகரு” என்று அதட்டலாய்ச் சொல்லி, ஜன்னலோர இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள்.

அவள் இடம் பெயர்ந்தபோது, அவனின் வலப்பக்கம் இருந்த ஜன்னலோர இருக்கையை அரைக் கண்ணால் அவள் முறைப்பதையும் அவன் கவனிக்கவே செய்தான். 

அந்த இருக்கை காலியாக இருந்தது.  அவனின் இடப்பக்க இருக்கையில் இருந்தவன் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவள் இடை தொட்டு எவரும் சில்மிசம் செய்ய வாய்ப்பே இல்லாத நிலையில் அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று கந்தசாமிக்குப் புரியவில்லை; மனம் குழம்பினான்.

“காலை வெச்சுகிட்டுச் சும்மா இருக்க மாட்டியா? என்று தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியைத்தான் இப்படிப் பதற்றத்தில் மாற்றிக் கேட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பாட்டியிடம் சொல்வது போல, நாகரிகமாகத் தன்னை எச்சரித்திருக்கிறாள் என்றும் நம்பினான்.

நல்ல பிள்ளையாய்க் கைகளையும் கால்களையும் மடக்கி வைத்து இருக்கையில் சாய்ந்து கண் மூடினான் கந்தசாமி.

தூங்கினது போதும் எழுந்திரு” என்ற அதட்டல் செவிப்பறையைத் துளைக்க, கந்தசாமி உறக்கம் களைந்தான்.

“ஊர் வந்திடிச்சி” என்று சொன்ன  ஜன்னலோரச் சிட்டு, “போ...போ...” என்று இடப்பக்கம் இருந்த இன்னொரு கிழவியின் முதுகு தொட்டு முன்னுக்குத் தள்ளினாள்.

இடத்தைக் காலி செய்வதற்கு முன்னால், “மர மண்டை...” என்று கந்தசாமிக்குக் கேட்கும்படியாக மூன்று முறை சொன்னாள்; வெறுப்பில் வடித்தெடுத்த ஒரு கடைக்கண் பார்வையை அவன் மீது வீசவும் செய்தாள்.

‘மரமண்டை’ என்று அவள் சொன்னது தன்னைத்தான் என்பது புரிய  நிறையவே அவகாசம் தேவைப்பட்டது நம் கந்தசாமிக்கு. புரிந்தபோது.....

“நான் மடையன்... அடிமடையன்...” என்று அருகில் இருப்பவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் முணுமுணுத்தான்.

அதற்கப்புறமும் அந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் இப்படி முணுமுணுப்பதும் மண்டையில் அடித்துக்கொள்வதும் அவனுக்கு வழக்கமாகிவிட்டது.
====================================================================================