வெள்ளி, 19 மே, 2023

“வேண்டாம் புகழாசை!”..... வாழ்வியல் நெறிக் கதை!!

பெரும்பாலான நேரங்களில், திரைப்படப் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு ‘ஜாலி’ மனநிலையில் இருக்கும் பார்த்திபன் அன்று அவனின் நண்பன் சிவானந்தத்தைச் சந்தித்தபோது சோகம் போர்த்து, பொலிவிழந்த தோற்றத்துடன் காட்சியளித்தான்.

“என்னடா ஆச்சு?” -தோழன் சிவானந்தம், நெஞ்சில் கவலை தேக்கி விசாரித்தான்.

“கொஞ்ச நாளா, தொட்டதெல்லாம் தோல்வியில் முடியுது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா.” -சலிப்புடன் வார்த்தைகளை உதிர்த்தான் பார்த்திபன்.

 “எதையெல்லாம் தொட்டே? சொல்லு.”

“ஒரு கவிதைப் போட்டியில் கலந்துகிட்டேன். ஆறுதல் பரிசுகூடக் கிடைக்கல.....”

“ம்ம்ம்.....”

“பட்டிமன்றத்தில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கிப் பேசினேன். என் அணி தோல்வியைத் தழுவிடிச்சி. எங்க அலுவலக ‘மனம் மகிழ் மன்றத் தலைவர்’ பதவிக்குப் போட்டி போட்டு.....”

குறுக்கிட்டான் சிவானந்தம். “தோத்துட்டே. இருக்கட்டும், இதிலெல்லாம் ஜெயிச்சிருந்தா என்ன கிடைச்சிருக்கும்?”
“அது வந்து..... தெரிஞ்சவங்க புகழ்வாங்க. கவிதைப் போட்டியில் கொஞ்சம் பணம் கிடைச்சிருக்கும். தலைவர் பதவியில் அதுவும் இல்ல. ஆனா.....”

“ஆனா என்ன ஆனா..... இதுக்கு மேல உன் விளக்கம் தேவையில்ல. இந்த  நவீன உலகத்தில், வயித்துக்காகப் போராடுறவங்களைத் தவிர மத்த எல்லாருக்குமே புகழாசை இருக்கு. அதை அடையறதுக்கான போராட்டமும் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. யாரும் யாரையும் மனப்பூர்வமா புகழ்றதில்ல. சிலர் விதிவிலக்கா இருக்கலாம்.....”

கொஞ்சம் தாமதித்துத் தொடர்ந்து பேசினான் சிவானந்தம். “ஆக, வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதால், வளர் இளம் பருவத்தில் புகழையும் பலரின் பாராட்டுகளையும் எதிர்பார்க்கலாமே தவிர, அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில் அதை எதிர்பார்த்துச் சாதனைகள் நிகழ்த்த நினைக்கிறது முட்டாள்தனம்.” -அடித்துச் சொன்னான் சிவானந்தம்.

“புகழாசை வேண்டாம்னா சாதனைகள் நிகழ்த்துறதும் இல்லாம போயிடுமே?” என்றான் பார்த்திபன்.

“போகாது. புகழுக்குன்னு இல்லாம, வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள மக்களுக்குப் பயன்படுற மாதிரி எதையாவது செய்துட்டுப் போகணும்கிற உத்வேகம் இயல்பாகவே சிலருக்கு   இருக்கும். அவங்க சாதிப்பாங்க.”

“நீ ரொம்பவே புத்திசாலிடா” என்று பார்த்திபன் புகழ, அசட்டுச் சிரிப்புடன் உடல் நெளிந்தான் சிவானந்தம்.

                                          *   *   *   *   *
***நீங்களும் மனப்பூர்வமா சிவானந்தத்தைப் பாராட்டுறீங்கதானே? அந்தச் சிவானந்தம் வேறு யாருமில்லீங்க; நானேதான்! ஹி... ஹி... ஹி!!!