வியாழன், 18 மே, 2023

‘அவர்கள்’ மட்டுமா பிச்சைக்காரர்கள்?!


கோயிலுக்குப் போகிறவர்களின் சீரிய சிந்தனைக்கு.....

“நீங்கள் சாமி கும்பிடப் போவது எதற்காக?”

“வரவிருக்கும் தேர்வை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் வாங்கணும்.”

“நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கணும்.”

“கல்யாணம் ஆகணும்.”

“தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கணும்.”

"தீராத நோய் குணமாகணும்"

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கோரிக்கை வைக்கத்தான் கோயிலுக்குப் போகிறீர்கள்.

“ஆண்டுக்கு எத்தனை முறை போவீர்கள்?” என்பது உங்களுக்கான அடுத்த கேள்வி.

“மாதம் ஒரு முறை.....” 

“விசேச நாட்களில்.....”

“அவ்வப்போது.....”

இப்படியாக நீங்கள் தரும் பதில்களிலிருந்து, நீங்கள் நாள்தோறும் கோயிலுக்குப் போவதில்லை என்பதை யூகிக்க முடிகிறது[விதிவிலக்காக மிகச் சிலர் இருக்கலாம்].

ஆக, “எப்போதாவதோ அவ்வப்போதோ கோயிலுக்குப் போய், சாமிகளிடம் சமர்ப்பிக்கிற உங்களின் கோரிக்கை, அல்லது கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறா” என்று நான் சொன்னால் கோபிக்காதீர்கள்.

எந்த அடிப்படையில் நான் இப்படிச் சொல்கிறேன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். 

சொல்கிறேன்.

கோயில் என்றால் அங்கே பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத கோயில்களே இல்லை என்றும் சொல்லலாம்[பிரபலம் ஆகாத கிராமப்புறக் கோயில்கள் விதிவிலக்கு].

இங்குப் பிச்சை எடுப்போரெல்லாம் பிறவிப் பிச்சைக்காரர்கள் அல்ல. பார்த்த வேலையில் போதிய வருமானம் இல்லாமலோ, செய்த தொழில் நொடித்துப்போனதாலோ கோயில் கோயிலாகச் சென்று சாமிகளிடம் கோரிக்கை வைத்து.....

அவை நிறைவேறாத நிலையிலும், உற்றார் உறவினரால் கைவிடப்பட்ட நிலையிலும்[இவை போல நிறையக் காரணங்கள் உள்ளன] பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னுமொரு கட்டத்தில் இத்தொழிலை மேற்கொண்டவர்கள்[இதை நன்கு மனதில் பதிய வையுங்கள்].

தங்களின் தொழிலுக்கான[பிச்சை எடுத்தல்] இடமாகக் கோயிலின் வாயிலை இவர்கள் தேர்வு செய்யக் காரணம்.....

கோயில்களில் குடியிருக்கும் கடவுளர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள்[பிச்சை எடுக்கும் நிலையிலும் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்காதவர்கள்] என்பதோடு, அங்கு வருகிறவர்களும் இரக்கக் குணம் கொண்டவர்கள் என்பதால் நிறையப் பிச்சை கிடைக்கும் என்று எண்ணுவதுதான். வயிறாரச் சாப்பிட்டு, கொஞ்சம் வசதியோடு வாழலாம் என்று நம்புவதும் காரணம் எனலாம். 

இந்த நம்பிக்கைகள் ஓரளவுக்கேனும் பலித்தனவா? பலிக்கின்றனவா?

இல்லை[“ஆம்” என்று சொல்வதற்கான ஆதாரம் ஏதும் நம்மிடம் இல்லை; ஆய்வுகளும் நிகழ்த்தப்படவில்லை]. 

அன்று பிச்சை எடுத்தவன் இன்றும் பிச்சைக்காரனாகத்தான் இருக்கிறான். போதுமான அளவுக்குப் பிச்சை கிடைக்காதவன் பட்டினி கிடந்து செத்தொழிகிறான்.

நாட்டில் எத்தனை எத்தனைப் பிச்சைக்காரர்கள்! அத்தனை பேரையும் இந்தவொரு அவல நிலைக்கு ஆளாக்கியவர்கள் இந்தக் கடவுள்கள்தானே?[கடந்த பிறவிகளில் செய்த பாவபுண்ணியம் என்னும் சமாளிப்பு இங்குத் தேவையில்லை].

அவர்கள் வயிற்றுப்பாட்டுகாகக் கையேந்துகிறார்கள். நாமெல்லாம் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் பிற தேவைகளை நிறைவேற்றவும் கடவுள்களிடம் கையேந்துகிறோம்[இதுவும் ஒருவகைப் பிச்சைதான்; கௌரவப் பிச்சை! ஹி... ஹி... ஹி!!!]; கைகூப்பித் தொழுகிறோம்.

அவர்களுக்குக் கருணை காட்டாத கடவுள்கள் நம் மீது கருணை மழை பொழிவார்கள் என்பது என்ன நிச்சயம்?!