கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுள் ஒருவர்தான் அவர்; ஆனால், மற்றவர்களைப் போல, கொஞ்சம் இன்பங்களைத் துய்த்துப் பெருமளவுத் துன்பங்களைத் தாங்கி வாழும் சராசரி மனிதரல்ல.
துன்பங்களுக்குக் காரணமானவற்றுள் நோயும் ஒன்று.
குறிப்பிட்ட காலம்வரை மட்டும் துன்புறுத்தி மறைந்துவிடும் நோய்கள் பல. இறுதி மூச்சுவரை நம்மை விட்டுப் பிரியாமலிருப்பவை ‘தீராத நோய்கள்’.
தொற்றியிருப்பது தீரவே தீராத நோய் என்று தெரிந்தால், காலமெல்லாம் அல்லல்பட்டு அழுத கண்ணீருடன் சாவதைவிடத் தற்கொலை செய்து செத்தொழியலாம்.
ஆனால் அதற்கு இடம்தராமல், குணமாகுமா ஆகாதா என்று அறிவது எளிதில் சாத்தியப்படாமல், மருத்துவர்களையே திகைக்க வைக்கிற நோய்களும் உள்ளன.
அத்தகையதொரு நோய்க்கு உள்ளாகி நாளெல்லாம் பெரும் துன்பத்தை அனுபவிப்பவர் ‘அபுல் பஜந்தர்[32 வயது]’ என்னும் வங்காளதேச மனிதர்.
அவரின் கைகளில் தோன்றிய ‘மருக்கள்’ மறைவதில்லை என்பது மட்டுமல்ல, கைகளை மறைக்கும் அளவுக்கு, மரத்தின் சிறு சிறு கிளைகள் போல அவை வளர்கின்றன[இதனால், இவர் ‘மர மனிதன்’ என்றே அழைக்கப்பட்டார்].
இந்த அசாதாரண மருக்களை அகற்ற ‘அபுல்’ கடந்த ஏழு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளைச் செய்துள்ளார். ஆனாலும், மருக்கள் தோன்றுவதும் வளர்வதும் தொடர்கிறது.
இளமைப் பருவத்திலேயே இந்த நோய் இவரைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
“இவருக்கு ‘எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெர்ருசிஃபார்மிஸ்(EV)’ இருப்பது கண்டறியப்பட்டது. இது Lewandowsky-Lutz syndrome என்றும் அழைக்கப்படுகிறது. இது மரபணு மாற்றங்களால் நோயாளிகளை மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கும் பரம்பரை ஜெனோடெர்மடோசிஸ் ஆகும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
"நான் ஒரு சாதாரண மனிதனாக, என் மகளுடன் நெருக்கமாக இருக்கவும், அவளைத் தொட்டு அணைத்து மகிழவும் விரும்புகிறேன். அதற்கு இந்த நோய் பெரும் தடையாக உள்ளது” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் ‘அபுல்’.
இவரின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய பெரும் பொறுப்பு மருத்துவர்களுக்கு மட்டுமல்ல, இவரைப் படைத்த கடவுளுக்குக்கும் உள்ளது.
கடவுள் கல்மனதுக்காரர் என்பதால் அவரை நம்பிப் பயனில்லை. மருத்துவம் கற்ற ஆறறிவு மனிதர்களை நம்புவதே புத்திசாலித்தனம்.
மனிதனுக்கு ஆறறிவைக் கொடுத்தவரே கடவுள்தான் என்பவர்கள் அயோக்கியர்கள். “இம்மாதிரியான அவலநிலைகளுக்கு அவர் மனிதர்களை உள்ளாக்குவது ஏன்?” என்னும் கேள்வியைக் கண்டுகொள்ளாத கயவர்கள் அவர்கள்.